You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம்: தேர்தலில் பலத்தைக் காட்டியது யார்?
- எழுதியவர், விஷ்ணுப்ரியா ராஜசேகர்
- பதவி, பிபிசி தமிழ்
பெரும் எதிர்பார்ப்புக்கு பிறகு மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின.
தமிழ்நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் மாற்றங்கள், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்கு பிறகான தேர்தல், அரசியல் கட்சிகளிடம் பிளவு, கட்சிக் கூட்டணிகள் போன்ற பல காரணங்களால் தமிழ்நாட்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன.
இந்த தேர்தலில் திமுக, அதிமுக அல்லாத சில கட்சிகள் மீதும் பலரின் கவனம் படிந்திருந்தது. குறிப்பாக சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் கவனம் பெற்றன.
தேர்தல் அணுகுமுறை
இரண்டு கட்சிகளுமே வெற்றி பெறுவதிலும், கணிசமான வாக்குகளை பெறுவதிலும் ஆர்வம் காட்டின. 50 சதவீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்தியது நாம் தமிழர் கட்சி.
அனைவரும் நன்கு படித்த வேட்பாளர்கள் என்ற முழக்கத்தை முன்னெடுத்தது மக்கள் நீதி மய்யம்.
தேர்தல் முடிவுகள்
சென்னையிலுள்ள வட சென்னை, தென் சென்னை மற்றும் மத்திய சென்னை ஆகிய மூன்று தொகுதிகளிலும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது கமலின் மக்கள் நீதி மய்யம். மூன்று தொகுதியிலும் 10 சதவீதத்துக்கு மேலான வாக்குகளையும் பெற்றுள்ளது.
சென்னையை தவிர கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, சேலம்,ஸ்ரீபெரும்பத்தூர், திருவள்ளூர், திருப்பூர் ஆகிய தொகுதிகளில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
காஞ்சிபுரம், கன்னியாகுமாரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய தொகுதிளில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது நாம் தமிழர் கட்சி.
மக்கள் நீதி மய்யம் 11 இடங்களில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. நாம் தமிழர் கட்சி ஏழு இடங்களில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
மேற்கண்ட தொகுதிகளை தவிர பிற தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி மக்கள் நீதி மய்யத்தைக் காட்டிலும் அதிக வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளது. ஆனால் இவற்றில் பெரும்பாலான தொகுதிகளில் இரண்டு கட்சிகளுக்குமான வாக்கு வித்தியாசம் சுமார் ஒரு சதவீதம்.
நாம் தமிழர் கட்சி எந்த ஒரு தொகுதியிலிலும் பத்து சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறவில்லை.
பல்வேறு இடங்களில் இரண்டு கட்சிகளுக்கும் பெரும் வாக்கு வித்தியாசம் இல்லாமல்போன போதிலும் தற்போதைய நிலையில் இரண்டு கட்சிகளையும் ஒப்பிடுவது தேவையற்றது என்கிறார் எழுத்தாளர் ஆழி செந்தில்நாதன்
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி தொடங்கி சுமார் ஒரு வருட காலமே ஆன போதிலும் சில தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது மக்கள் நீதி மய்யம்.
இதுகுறித்து ஆழி செந்தில்நாதனிடம் கேட்டபோது, "சினிமா பிரபலம் என்பதால் கமலுக்கு உடனடியாக ஒரு ஈர்ப்பு கிடைத்துள்ளது," என்றார்.
சீமான் திரைத்துறையை சார்ந்தவர் என்றாலும் அவரை கமல், ரஜினி மற்றும் விஜயகாந்த் ஆகியோருடன் ஒப்பிட முடியாது என்று தெரிவித்த செந்தில்நாதன், விஜயகாந்த் கட்சி தொடங்கியபோது பெற்ற வாக்குகளை காட்டிலும் கமலின் கட்சி குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளது, என்றார்.
இரண்டு கட்சிகளை குறித்து பார்க்கும்போது, "மாநில அளவில் சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு பதிவை ஏற்படுத்தி உள்ளது. கமலின் மக்கள் நீதி மய்யம் நகரங்களில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது,"என்கிறார் ஆழி செந்தில்நாதன்.
"வலுவான ஊடக ஆதரவு, தென் சென்னை போன்ற தொகுயில் சாதி ரீதியான ஆதரவு, சினிமா புகழ் ஆகியவை கமலுக்கு சில இடங்களில் கணிசமான வாக்குகளை பெற்று தந்துள்ளது," என்கிறார் அவர்.
இந்தக் கட்டத்தில் இரண்டு கட்சிகளையும் ஒப்பிடுவது அவசியமற்ற ஒன்று என்று தெரிவிக்கும் ஆழி செந்தில்நாதன் அடுத்து அவர்கள் எடுத்து வைக்கப்போகும் அடியை பொருத்தே இரண்டு கட்சிகளின் வளர்ச்சியும் அமையும் என்று தெரிவிக்கிறார்.
பிற செய்திகள்:
- தமிழகத்தில் ஓரிடம்கூட வெல்லாத பாஜக: ஸ்டாலினுக்கான ஆதரவா? மோதிக்கான எதிர்ப்பா?
- பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகுகிறார் தெரீசா மே
- 181 வாக்குகள் வித்தியாசத்தில் எம்.பி பதவியை இழந்த வேட்பாளர்
- ஐந்தே தொகுதிகள்- இடதுசாரிகளின் பெரு வீழ்ச்சிக்கு என்ன காரணம்?
- பாஜக-வுக்கு மீண்டும் பெரும் வெற்றி: எப்படி சாத்தியமானது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்