நரேந்திர மோதி தன்னை அழகுப்படுத்த மாதம் '80 லட்சம் ரூபாய் செலவிட்டது' உண்மையா? #BBCFactCheck

    • எழுதியவர், உண்மை சரிபார்ப்புக் குழு
    • பதவி, பிபிசி நியூஸ்

இந்திய பிரதமர் நரேந்திர மோதியை ஒப்பனை கலைஞர்கள் அழகுப்படுத்துவது போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த காணொளி குறித்த விவரிப்பில், "தகவல் அறியும் உரிமை சட்டம் வழியாக பெற்ற தகவல்களில், பிரதமர் நரேந்திர மோதியின் ஒப்பனை செலவுகளுக்காக மாதந்தோறும் சராசரியாக 80 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காணொளி ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் பல லட்சக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளது.

இதே செய்தியோடு குருகிராம் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த காணொளி பகிரப்பட்டுள்ளது.

இந்த காணொளியின் கருத்துகள் தவறானவை என்று நாங்கள் கண்டறிந்தோம். இந்த காணொளி உண்மையானதாக இருந்தாலும், தவறான சூழலில் இது பகிரப்பட்டுள்ளது.

இந்த காணொளியில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி அவரது தனிப்பட்ட ஒப்பனை கலைஞரால் அழகுப்படுத்தப்படவில்லை.

காணொளியின் உண்மைத் தன்மை

இந்த காணொளி 2016ம் ஆண்டு மார்ச் மாதத்தில் எடுக்கப்பட்டது. மேடம் தசெளட்ஸ் வேக்ஸ் அருங்காட்சியகத்தை சேர்ந்த குழுவினர் தங்களின் அருங்காட்சியகத்தில் அமைத்து வருகின்ற மோதியின் வேக்ஸ் சிலையின் மாதிரிக்கு, அளவுகள் மற்றும் பிற விவரங்களை எடுப்பதற்கு மோதியின் இல்லத்திற்கு வந்திருந்தபோது இந்த காணொளி எடுக்கப்பட்டுள்ளது.

மேடம் தசெளட்ஸ் வடிவத்தையும் இந்த காணொளியில் காணலாம். உண்மையான காணொளி மேடம் துசாத்தின் யுடியூப் பக்கத்தில் உள்ளது.

2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி லண்டன் மேடம் தசெளட்ஸ் அருங்காட்சியகத்தல் மோதியின் வேக்ஸ் சிலை நிறுவப்பட்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய கருத்து

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் இந்த தகவல்களை பெற்றதாக வைரலான இந்த காணொயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய பிரதமரின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மோதியின் ஒப்பனை அல்லது ஆடைகள் செலவு பற்றிய எந்தவொரு கேள்வியும் தகவல் அறியும் சட்டத்தில் கேட்கப்படவில்லை.

கல்வித் தகுதி, விடுமுறைகள், வைஃபை வேகம் மற்றும் மோதியின் நாளாந்த திட்டங்கள் கேட்கப்படும் பொதுவான கேள்விகளாகும்.

2018ம் ஆண்டு ஊடக தகவல்களின்படி, 1988ம் ஆண்டு தொடங்கி இந்திய பிரதமர்கள் அணிந்த ஆடைகளுக்கான செலவுகள் பற்றி தகவல் அறியும் உரிமை சட்ட செயற்பாட்டாளர் ரோகித் சப்கார்வால் கேள்வி கேட்டுள்ளார்.

இதில் அடல் பிஹாரி வாஜ்பேயி, மன்மோகன் சிங் ஆகியோரின் ஆடைகளுக்கான செலவுகளும் உள்ளடங்குகின்றன.

இவ்வாறு கேட்கப்பட்டுள்ள தகவல் தனிப்பட்டது என்றும், அலுவலக பதிவேடுகளில் இதற்கான தகவல்கள் இடம்பெறும் பகுதி இல்லை என்றும் பிரதமர் அலுவலகம் வழங்கிய தகவலில் தெரிவித்துள்ளது.

பிரதமர் தனிப்பட்ட முறையில் செய்கிற செலவுகள் அரசு நிதியில் இருந்து செலவிடப்படுவதில்லை என்றும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

நரேந்திர மோதியின் ஒப்பனை செல்வுகள் பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஏதாவது கேட்கப்பட்டதா என்று பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :