தமிழகத்தில் 13 இடங்களில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டது ஏன்? - சத்யபிரதா சாஹு விளக்கம்

தமிழ்நாட்டில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த உத்தரவிடப்பட்டிருக்கும் நிலையில், அதற்கான காரணங்களை தேர்தல் ஆணையம் விளக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், பல்வேறு வாக்குச் சாவடிகளில் முறைகேடு நடந்ததாக புகார்கள் பதிவாயின. இதையடுத்து திருவள்ளூர், தர்மபுரி, கடலூர் மாவட்டங்களில் 10 இடங்களில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டுமென தேர்தல் ஆணையம் பரிந்துரைத்திருந்தது.

இது தவிர, வாக்குப்பதிவு நடப்பதற்கு முன்பாக மாதிரி வாக்குப் பதிவு நடத்தும்போது பதிவான வாக்குகளை அழிக்காமல் விட்டதால் மேலும் 46 இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டுமா என கேட்டு தமிழகத் தேர்தல் ஆணையம் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அனுப்பியது.

இந்த நிலையில், மே 19ஆம் தேதியன்று 13 இடங்களில் மறு வாக்குப்பதிவுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

எந்தந்த இடங்களில் எந்த காரணத்தினால் தேர்தல் நடத்தப்பட்டது என்பதை தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு விளக்கமளித்தார்.

வாக்குப்பதிவின்போது முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்ட புகார்களின் அடிப்படையில், திருவள்ளூரில் பூந்தமல்லி பகுதியில் பஞ்சாயத்து ஆரம்பப் பள்ளியிலும் தர்மபுரியில் 8 இடங்களிலும் கடலூரில் ஒரு இடத்திலுமாக மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தவிர, மாதிரி வாக்குப்பதிவின்போது நடந்த தவறுக்காக குறிப்பிடப்பட்ட 46 இடங்களில், 3 இடங்களில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

எஞ்சிய 43 வாக்குச்சாவடிகளில் வாக்கு எண்ணிக்கையின்போது ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோட்டில் ஒரு இடத்தில் 50 மாதிரி வாக்குகள் இடப்பட்டு, அவை அழிக்கப்படாத நிலையில், வாக்கு வித்தியாசம் 50க்குப் பதிலாக 41 என வந்ததால் அங்கு மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆண்டிப்பட்டியில் ஓரிடத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தில் தகவல்கள் அழிக்கப்பட்டு, விவிபேட் எந்திரத்தில் இருந்த வாக்குச்சீட்டுகள் நீக்கப்படாததால், அங்கு தேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல, பெரிய குளத்தில் ஓரிடத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தை மாற்றும்போது, அந்த எந்திரத்தில் எவ்வளவு வாக்குகள் பதிவாகியிருந்தன என்ற தகவல்கள் பதிவுசெய்யப்படாததால், அங்கும் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழகத் தலமைத் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :