மகாராஷ்டிரா மாவோயிஸ்ட் தாக்குதல்: 'பல பிரமோத்கள் வேலைக்கு செல்கிறார்கள், திரும்பி வருவதில்லை'

- எழுதியவர், சல்மான் ரவி
- பதவி, பிபிசி
'பாம்யா' இனிமேல் திரும்ப வரவே மாட்டார். வெள்ளிக்கிழமையன்று அவருடைய அஸ்தியை கங்கையில் கரைத்தார்கள். அப்போது ஆற்றங்கரையில் கூடியிருந்த நண்பர்கள், தங்கள் உற்ற நண்பனுக்கு இறுதி விடை கொடுத்தார்கள். ,
இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மகாராஷ்டிராவில் நக்சல் பாதிப்புமிக்க கட்சிரோலி மாவட்டத்தின் வட்ஸாவில் கிராமமே கூடியிருந்தாலும், அங்கு மயான அமைதி நிலவுகிறது. இங்குதான் இருக்கிறது பிரமோத் போயாரின் வீடு.
1992 செப்டம்பர் மாதத்தில் குர்கேடாவில் மாவோயிட்டுகள் நடத்திய குண்டுவெடிப்பில் வட்ஸாவின் தேசாய் நகரில் பிரதீப் போயார் உயிரிழந்தார்.
மகாராஷ்டிர மாநில காவல்துறையில் பிரதீப் கான்ஸ்டபிளாக பணிபுரிந்தார்.
தற்போது கொல்லப்பட்ட பிரமோதின் சித்தப்பாதான் பிரதீப். இரு ஆண்டுகளுக்கு முன்னர் பிரமோதின் தந்தை மஹாதேவ் இறந்தார், பிறகு சகோதரர் ரவீந்திரா இறந்தார்.

பிரமோதுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள்தான் ஆகிறது. மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் இரட்டை குழந்தைகள் பிறந்தன, அதில் ஒரு குழந்தை இறந்தே பிறந்தது.
மே மாதம் முதல் தேதியன்று வழக்கம்போல் வேலைக்கு கிளம்பிய பிரமோத், வீட்டிற்கு சடலமாகத்தான் வந்தார்.
அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றபோது, வட்சா கிராமத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. ஊர் மக்கள் அனைவரும் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டனர்.
பிரமோதின் அம்மா, மகனை இழந்த சோகத்தில் பேசும் நிலையிலேயே இல்லை. ஒருவருக்கு பின் ஒருவராக குடும்ப உறுப்பினர்கள் இறந்து போனதால் மனம் தடுமாறி சோகத்தின் விளிம்பில் நிற்கிறார் அந்தத் தாய்.


அவரிடம் பேச தைரியம் இல்லாமல் அமர்ந்திருந்தேன், சிறிது நேரத்திற்கு பிறகு அழுகையை அடக்கிக்கொண்டு விம்மலுடன் பேசத் தொடங்கிய அவர், இனிமேல் வாழ்க்கையில் என்ன இருக்கிறது? வீட்டில் ஆண்கள் யாருமே இல்லை, எப்படி வாழப்போகிறோம்? என்று கேட்டார்.
வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த பிரமோதின் மனைவி மோகினியின் நிலைமையோ இன்னும் மோசம். அங்கு கூடியிருக்கும் பெண்களின் மத்தியில் அமர்ந்திருந்தாலும், அவர்கள் சொல்லும் ஆறுதலோ, மடியில் கிடத்தியிருக்கும் மூன்று மாத பச்சிளம் குழந்தையின் சிணுங்கலோ அவர் காதில் விழுந்ததா என்றே தெரியவில்லை.
இது மிகவும் நெருக்கடியான நிலையில் தேசெளநகரில் வசிக்கும் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக அங்கே குழுமியிருக்கிறார்கள். குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி அவர்களை தேற்ற முயல்கின்றனர்.
பிரமோதின் நண்பர்களும் அங்கே இருக்கின்றனர். ஒரு மாதம் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் இருக்கப் போவதாக சம்பவத்திற்கு முதல் நாள் தங்களிடம் பிரமோத் சொல்லியதாகவும், அடுத்த நாள் விடுப்புக்கு விண்ணப்பிக்கப் போவதாகவும் தங்களிடம் சொன்னதை நினைத்து வருந்துகின்றனர் நண்பர்கள்.

ஆனால் அவன் ஒரேயடியாக உலகில் இருந்தே விடுமுறை எடுத்துச் சென்றுவிட்டான் என்று சொல்லி அழுகிறார் பிரமோதின் மைத்துனர் விஜய் மேஷ்ராம். அங்கு கூடியிருக்கும் அனைவரும் தங்களுக்குள் பேசி புலம்பிக் கொண்டு இருக்கின்றனர்.
'போலீஸ் தரப்பில் தவறு நடந்துவிட்டது' என்று சொன்ன காவல்துறை ஆணையரின் கருத்து பற்றி அவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
நக்சல் தாக்குதல்களில் கான்ஸ்டபிள் போன்ற சாதாரண பணியில் இருப்பவர்கள் மட்டுமே ஏன் எப்போதும் உயிரிழக்கின்றனர் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பிபிசியிடம் பேசிய விஜய் மேஷ்ராம், குர்கேடாவில் பெருமளவில்லான மாவோயிஸ்டுகள் வன்முறையை தூண்டும் திட்டத்துடன் கூடியிருப்பதாக போலீஸ் டி.எஸ்.பிக்கு தகவல் கிடைத்த நிலையில், "15 பேரை மட்டுமே வாகனத்தில் ஏற்றி அனுப்பியது ஏன்?" என்று கேள்வி எழுப்புகிறார் விஜய் மேஷ்ராம்.
நிலக்கரி சுரங்கங்கள் அல்லது வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகப்படும் இடங்களில் போலீசாரை வாகனங்களில் அனுப்புவது தடை செய்யப்பட்டிருப்பதாக கூறும் உள்ளூர் மக்கள், கட்சிரோலி போலீஸ் அதிகாரிகள் எந்தவித முன்னெச்சரிக்கையும் செய்யாமல் போலீசாரை எப்படி வாகனத்தில் அனுபினார்கள் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டும் தொனியில் கேள்வி எழுப்புகின்றனர்.

அங்கிருந்த ஓர் உயரதிகாரியைப் பற்றி குறிப்பிட்டு சொன்ன வீரர் ஒருவர், படையினரை ஒரு வாகனத்தில் ஏற்றி அனுப்பிய அதிகாரி, தான் மட்டும் தனி வாகனத்தில் பயணித்ததாக சொல்கிறார்.
சத்தீஸ்கரின் காங்கேர் மாவட்டத்தில் இருக்கும் பயங்கரவாதம் மற்றும் வன சண்டை தடுப்பு கல்லூரி (Counter Terrorism and Jungle Warfare College) என்ற கல்லூரியின் இயக்குநர் பிர்கேடியர் பி.கே.போம்வார் என்பவரிடம் பிபிசி பேசியது. எந்தவொரு வனப்பகுதியிலும் பெரிய அளவிலான திட்டத்தை செயல்படுத்தும்போது, போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் உயரதிகாரிகள், வரையறுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகளுக்கான விதிகளை மீறுவது இயல்பாக இருப்பதை பார்க்க முடிவதாக சொல்கிறார்.


நிலக்கரி சுரங்கங்கள் அல்லது வெடி வைக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள் அதிகமாக இருக்கலாம் என்று கருதக்கூடிய இடங்களில் வீரர்களை வாகனங்களில் அனுப்பக்கூடாது என்பது அடிப்படை விஷயம் என்று சொல்கிறார் பி.கே.போம்வார்.
மே ஒன்றாம் தேதியன்றும் விதிமுறைகள் மீறப்பட்டிருக்கிறது. மாவோயிஸ்டுகள் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தனர். பிறகு, சாலை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனத்தின் மூன்று டஜன் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
அந்த சம்பவம், மாவோயிஸ்டுகளால் பாதுகாப்புப் படையினருக்கு விரிக்கப்பட்ட வலையே. பெரிய அளவில் பிரச்சனை கிளப்பினால், அங்கு போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினர் அனுப்பப்படுவார்கள் என்று அவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும்.

எனவே, சாலையில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை புதைத்து வைத்திருந்தனர். அந்த வழியில் சென்ற வாகனம் அவர்களின் திட்டப்படியே வெடித்து சிதறடிக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் ஒன்றுபோலவே இருப்பதாக போலீசார் கூறுகின்றனர். ஆனால், அதிலிருந்து யாரும் பாடம் கற்றுக் ஒள்வதில்லை, கீழ்நிலை ஊழியர்களின் உயிர்த்தியாகம் தொடர்ந்து வீணாகிப்போவதாக சொல்லி வருந்துகின்றனர்.
ஏனென்றால் அதிகாரிகளின் வாகனங்கள் செல்வதாக இருந்தால் மட்டுமே வெடிகுண்டுகள் செல்லும் வழியில் இருக்கிறதா என்பதை சோதிக்கும் 'ரோட் ஓபனிங் பார்ட்டி' நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சொல்லப்படுகிறது.
"பிரமோத்கள் வேலைக்காக வீட்டில் இருந்து கிளம்பினாலும், வீடு வந்து சேர்வார்களா என்பது உறுதியில்லை" என்று கூறி முத்தாய்ப்பாய் முடிக்கிறார் பிரமோதின் நண்பர் ஒருவர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












