இந்து சமய அறநிலையத் துறை மழைக்காக யாகம் நடத்த சொல்லலாமா?

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழகத்தின் பல மாவட்டங்களில் வறட்சி பாதித்திருக்கும் நிலையில் தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை மழை வேண்டி வருண பூஜை செய்ய வேண்டுமென அனுப்பியிருக்கும் சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இது வழக்கமான ஒன்றுதான் என்கிறார்கள் அதிகாரிகள்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு பெய்ய வேண்டிய வடகிழக்குப் பருவமழை பொய்த்து போனதில், மாநிலம் முழுவதும் பெரும் வறட்சி நிலவுகிறது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 24 மாவட்டங்களை வறட்சி பாதித்த மாநிலங்களாக மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஏப்ரல் 26ஆம் தேதியன்று இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர் க. பணீந்திர ரெட்டி அத்துறையின் இணை ஆணையர்கள் அனைவருக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

அந்தச் சுற்றறிக்கையில் 2019-20ஆம் ஆண்டில் நல்ல மழை பெய்ய வேண்டும் என்பதற்காக அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முக்கியத் திருக்கோவில்களில் மழை வேண்டி யாகம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதற்காக பர்ஜன்ய சாந்தி வருண ஜபம், நந்தியின் கழுத்துவரை நீர் நிரப்பி வழிபாடு, சுந்தரமூற்றி நாயனார் எழுதிய ஏழாம் திருமுறையை ஓதுதல், திருஞானசம்பந்தர் எழுதிய 12ஆம் திருமுறையில் மழைப் பதிகத்தை மேக ராகக் குறிஞ்சி என்ற பண்ணில் பாடுதல், நாதஸ்வரம், வயலின், வீணை போன்ற வாத்தியங்களுடன் மேகவர்ஷினி, அமிர்தவர்ஷினி, கேதாரி, ஆனந்த பைரவி, ரூப கல்யாணி போன்ற ராகங்களைக் கொண்டு வாசித்து வழிபாடு செய்தல், சிவபெருமானுக்கு சீதள கும்பம் செய்தல் உள்ளிட்ட வழிபாடுகளைச் செய்ய வேண்டுமென்றும் வழிபாடு நடைபெற்ற விவரத்தை தலைமை அலுவலகத்திற்கு அறிவிக்க வேண்டுமென்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இந்தச் சுற்றறிக்கை ஊடகங்களில் வெளியானதும் சமூக வலைதளங்களில் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளானது.

இதற்குப் பிறகு, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். "அறநிலையத்துறை என்பது வரவு, செலவுகளைப் பார்க்க வேண்டிய துறையே; நிர்வாகம் சம்பந்தப்பட்டது; யாகம், பூஜை புனஸ்காரங்களை நடத்துவது அதன் வேலையல்ல! இந்து அறநிலையத் துறை ஆணையரின் ஆணை, மதச் சார்பற்ற தன்மை கொண்ட இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது" என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பா.ஜ.க. தலைவர்கள், குறிப்பாக அக்கட்சியின் தேசியச் செயலர் எச். ராஜா போன்றவர்கள் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆனால், இம்மாதிரி வருண யாகம் நடத்துவது புதிது அல்ல என்கிறார்கள் அந்தத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள்.

"மழை இல்லாத வருடங்களில், வறட்சி நிலவும் வருடங்களில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் வருண பூஜை நடப்பது வழக்கமான ஒன்றுதான்.

குறிப்பாக அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது இந்த பூஜைகள் கட்டாயம் நடக்கும்." என பிபிசியிடம் தெரிவித்தார் பெயர் தெரிவிக்க விரும்பாத அறநிலையத் துறை அதிகாரி ஒருவர்.

மக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51-A(h) பிரிவுக்கு இது முரணானது என்பதைச் சுட்டிக்காட்டிய அந்த அதிகாரி, தனி மனிதர்களே அறிவியல் மனப்பான்மையுடன் நடந்துகொள்ள வேண்டுமென அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும்போது, அரசே இம்மாதிரி ஆணையிடுவது ஏற்புடையதல்ல என்றார் அவர்.

இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் ஊடகத் தொடர்பாளர் மருதப்பிள்ளையிடம் இது குறித்துக் கேட்டபோது, "இதில் புதிதாக என்ன இருக்கிறது? எப்போதும் நடப்பதுதான்" என்று மட்டும் தெரிவித்தார்.

இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரிகள், இந்த முறை நீண்டகாலமாக வழக்கத்தில் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய முன்னாள் உதவி ஆணையர் அழ. முத்து பழனியப்பன், "காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்கூட இதெல்லாம் நடந்திருக்கிறது. இப்போது ஊடகங்கள் அதிகம் இருப்பதால் இதையெல்லாம் விவாதிக்கிறார்கள். திருஞானசம்பந்தரின் முதல் திருமறையை மேகராகக் குறிஞ்சிப் பண்ணில் பாடினாலும் சுந்தரமூர்த்தி நாயனார் திருப்புன்கூர் சிவலோக நாதர் கோவிலில் பாடிய பதிகத்தை பாடினாலும் மழை பெய்யும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதையே அறநிலையத் துறை செய்கிறது. இதில் விமர்சிக்க ஏதுமில்லை" என்கிறார் அவர்.

தற்போது பணியிலுள்ள அதிகாரிகளிடம் கேட்டபோது, 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு வறட்சி ஏற்படும் ஆண்டுகளில் எல்லாம் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை கோவில்களில் இந்த பூஜை வழக்கமாக நடத்தப்பட்டு வருகிறது என்றே தெரிவித்தனர். இம்மாதிரி சுற்றறிக்கை வெளியிடப்படாவிட்டாலும் அந்ததந்தக் கோவில்களின் இணை ஆணையர்களே இம்மாதிரி பூஜைகளை நடத்தி தலைமை அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்புவார்கள்; ஆகவே இதில் புதிதாகவோ, சர்ச்சைக்குரிய வகையிலோ ஏதும் இல்லை என்கிறார்கள்.

இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் வேலை கோவில்களை நிர்வாகம் செய்வதே தவிர, அங்கு எவ்விதமான பூஜை நடக்க வேண்டுமென உத்தரவிடுவதல்ல என்கிறார் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சுப. வீரபாண்டியன்.

"இது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. முதலாவதாக, அரசமைப்புச் சட்டம் சொல்லும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டுமென்ற கூற்றுக்கு இது எதிரானது. இரண்டாவதாக, இணை அலுவலர்கள் இதில் பங்கேற்க வேண்டுமென கட்டாயப்படுத்தப்படுவதும் தவறானது. இஸ்லாமிய வழிப்பாட்டுத் தலங்களுக்கு என வக்பு வாரியங்கள் இருக்கின்றன. அவை இம்மாதிரி வழிபாட்டு உத்தரவுகளை பிறப்பிக்கின்றனவா? தனி மனிதர்களுக்கு நம்பிக்கை இருக்கலாம். ஆனால், அரசு இம்மாதிரி நம்பிக்கை சார்ந்த விவகாரங்களில் ஈடுபடக்கூடாது" என்கிறார் சுப. வீரபாண்டியன்.

இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் தற்போது சுமார் 36,600 கோவில்கள் உள்ளன. இவற்றில் குறைந்தது நான்காயிரம் கோவில்களிலாவது மழை வேண்டி நடத்தப்படும் இந்த பூஜைகள் நடத்தப்படுமென இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தலித்தை தன் தோளில் தூக்கிய வைணவ கோயில் அர்ச்சகர்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :