எரிமலைக்குள் விழுந்த நபர் மீட்பு - உயிர் தப்பியது எப்படி? மற்றும் பிற செய்திகள்

எரிமலைக்குள் விழுந்த நபர் மீட்பு - தப்பித்தது எப்படி?

ஹவாயில் உள்ள மிகவும் தீவிர எரிமலை ஒன்றினுள் 70அடி ஆழத்தில் விழுந்த அமெரிக்க ராணுவ வீரர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹவாய் எரிமலை தேசிய பூங்காவில் கீல்வேய கல்டெரா என்ற எரிமலையை பார்வையிட்ட போது தவறி உள்ளே விழுந்ததாக அவர்கள் கூறுகிறார்கள்.

39 வயதான அந்த நபர் அங்கு சென்றபோது, அவர் நடந்த பாதை சிதைந்து, 300 அடி உயரமான அந்த எரிமலையில் விழுந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

அந்த நபர் தீப்பிழம்பில் விழாமல், அங்கிருந்த தொங்கு பாறை ஒன்றில் விழுந்ததால் உயிர் தப்பியுள்ளார். அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

"இலங்கை குண்டுதாரிகள் இந்தியாவில் பயணம் செய்துள்ளனர்" - ராணுவ தளபதி

இலங்கையில் ஈஸ்டர் நாளில் ஏப்ரல் 21ம் தேதி நடைபெற்ற குண்டு தாக்குதல்கள் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்த தாக்குதல் பற்றி இலங்கை ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனா நாயக்கவை பேட்டி கண்டார் பிபிசியின் செய்தியாளர் சிக்கந்தர் கெர்மானி.

அப்போது, இதில் ஈடுபட்ட தற்கொலை குண்டுதாரிகள் இந்தியாவுக்கு சென்றுள்ளார்கள். காஷ்மீர், பெங்களுரூ மற்றும் கேரளாவுக்கு அவர்கள் பயணம் செய்துள்ளார்கள் என்று கூறினார். மேலும், தாக்குதல் நடத்தியுள்ள முறையையும், தலைமைகள் பயணம் மேற்காண்டுள்ள இடங்களையும் பார்க்கிறபோது, வெளியிலுள்ள ஏதாவது ஒரு தலைமையின் ஈடுபாடு அல்லது அறிவுறுத்தல் இருந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த அட்டைப் பெட்டிகளில் இருப்பது பாதுகாப்புப் படை வீரர்களின் உடல்களா?

இறந்த ராணுவ வீரர்களின் சடலங்கள் அட்டை பெட்டிகளில் அடைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு, நாட்டின் பாதுகாப்புப் படை வீரர்களை அவமதித்து விட்டதாக குற்றஞ்சாட்டும் வகையில் இந்த தகவல் பரப்பப்பட்டது.

ஆனால், இந்த புகைப்படம் தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்று தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளதை போன்று, உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களின் உடல்கள் அட்டை பெட்டிகளில் சுற்றிவைக்கப்படவில்லை.

இந்தக் கிளிக்குதான் எத்தனை சோதனை?

ஃப்ரெடி க்ரூகர் ஒரு கிளி.

ஏப்ரல் 16ம் தேதி ஆயுதம் தாங்கிய திருடர்களால் கொண்டு செல்லப்பட்ட இது, 3 நாட்களுக்கு பின்னர் பிரேசிலின் தெற்கிலுள்ள காஸ்காவெல் விலங்கியல் பூங்காவுக்கு திரும்பி வந்தது மட்டுமல்ல, கடந்த நான்கு ஆண்டுகளாக இது வாழ்ந்து வந்த கூட்டுக்கு அருகில் வந்தடைந்திருந்தது.

இதனை திருடி சென்றபோது, பாம்பு கடியால் ஏற்பட்டதாக நம்பப்பட்ட காயத்திற்கு இந்த கிளி சிகிச்சை பெற்று வந்தது.ஏறக்குறைய இறந்துபோகும் அளவுக்கு இந்த கிளி ரத்தம் சிந்தியிருந்தது.

அதுமட்டுமல்ல. விலங்கியல் பூங்காவுக்கு வருவதற்கு முன்னால், இது போதைப்பொருள் டீலர் ஒருவரோடு வாழ்ந்து வந்தது. 2015ம் ஆண்டு காவல்துறையின் அதிரடி நடவடிக்கையின்போது, இந்த கிளியின் முகத்தில் சுடப்பட்டதால், முகம் சேதமடைந்தது,

இலங்கை தாக்குதலைக் கண்டித்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் கிறிஸ்தவ மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டித்து, வெள்ளிக்கிழமையான நேற்று ஜும்ஆ தொழுகையின் பின்னர், அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில், பிரகடனமொன்றினையும், அவர்கள் அங்கு வெளியிட்டனர்.

"நாம் எல்லோரும் இலங்கையர்கள் எனும் அடிப்படையில் நமது நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம்" என்பவை உள்ளிட்ட பல விடயங்களை, அந்தப் பிரகடனத்தின் போது, அவர்கள் கூறினர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :