விலை உயர்ந்த கார் வைத்திருந்த தலித் ஒருவர் பாஜக எம்எல்ஏ-வால் தாக்கப்பட்டாரா? #BBCFactCheck

    • எழுதியவர், உண்மை பரிசோதிக்கும் குழு
    • பதவி, பிபிசி

தலித் என்று கூறப்படும் ஒருவரை, பாஜகவின் எம்எல்ஏ என்று கூறப்படும் ஒருவர் தலைமையில் பலர் தாக்கியதாக காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பலரும் சேர்ந்து ஒரு நபரை இரும்பு கம்பிகளை கொண்டு அடிக்கின்றனர்.

எங்கள் வாட்சாப் நேயர்கள் இந்த வீடியோவை எங்களுக்கு அனுப்பி அதன் உண்மைத் தன்மையை பரிசோதிக்குமாறு கோரினர்.

அந்த ஒன்றரை நிமிட வீடியோவுடன், "எம்எம்ஏ அனில் உபாத்யாயின் இந்த செயல் குறித்து மோதி என்ன சொல்லப்போகிறார்? இந்தியாவில் தலித் மக்கள் விலை உயர்ந்த கார்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்பதை அனைவரும் அறியும்வரை இதனை பகிருங்கள்" என்ற செய்தி பகிரப்படுகிறது.

"தலித் ஒருவர் விலை உயர்ந்த கார் வைத்திருந்ததற்காக, பாஜக தலைவர் அனில் உபாத்யாயின் ரவுடிகள் அவரை தாக்குகின்றனர்" என்ற கூற்றுடன் இந்த வீடியோ முகநூலில் 1000 முறைக்கும் மேல் பகிரப்பட்டுள்ளது.

ஆனால் நாங்கள் இந்த கூற்று தவறானது என்று கண்டறிந்தோம்

வீடியோவின் உண்மைத் தன்மை

இந்த வீடியோ இரண்டு வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டது. மேலும் இந்த வீடியோவுக்கும் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

மேற்கொண்டு ரிவர்ஸ் இமேஜ் தேடலில் தேடியபோது, இதுகுறித்து 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி பல செய்தி வீடியோக்கள் வெளியாகியுள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்றுள்ளது என்பதும் அதன்மூலம் தெரியவந்தது..

அந்த வீடியோவில் உள்ள நபர் குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த ஹர்திக் பரத்வாட் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஹர்திக் குடும்ப தகராறில் தனது மனைவியின் வீட்டாரால் தாக்கப்படுகிறார். அவர்கள் ஹர்திக்கின் காரையும் தாக்குகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குஜராத் போலீஸாரிடம் நாங்கள் பேசினோம்.

"இந்த சம்பவம் காந்தி நகரில் நடைபெற்றது. அது ஒரு குடும்பத் தகராறு. அதில் அந்த நபரின் மனைவி அவர் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக அவர் மீது குற்றம் சுமத்தினார்" என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"இது குறித்து அந்த பெண் அவரின் தாய் வீட்டாரிடம் புகார் கூறியபோது, நடுரோட்டில் அவரது கணவரை அவர்கள் தாக்கியுள்ளனர். இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளனர்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும் போலீஸ் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :