You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அரசியல் கட்சி கொடியுடன் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து விதியை மதிப்பதில்லை
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: 'கட்சி கொடியுடன் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து விதியை மதிப்பதில்லை'
"கட்சி கொடிகளுடன் செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை" என்று மதுரை ஐகோர்ட்டில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. பதில் மனு தாக்கல் செய்துள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
அந்நாளிதழ் செய்தி பின்வருமாறு விவரிக்கிறது:
மதுரை மேலூர் எட்டிமங்கலத்தை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறது. ஆனால் இந்த பணிகள் முழுமையாக செய்யப்படவில்லை. அதேபோல விதிகளை மீறி, வாகனங்களில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளதால் விபத்துகள் அதிகரித்துள்ளன. எனவே வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி. விளக்குகளை அகற்ற உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அரசியல் கட்சியினர் தங்களின் வாகனங்களில் கட்சி கொடியை கட்டிக்கொள்வது, பதவியை எழுதி வைக்க சட்டத்தில் அனுமதி உள்ளதா? என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு போக்குவரத்துத்துறை சார்பில் தாக்கலான பதில் மனுவில், "விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் வாகனங்களில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்படுகின்றன. அரசியல் கட்சியில் உள்ளவர்கள் தங்களது வாகனங்களில் கட்சி கொடியை கட்டிக் கொள்வது, தங்களது தலைவர்களின் படங்களை வைத்துக் கொள்வது, தங்களது பதவிகளை வாகனங்களில் பெரியதாக எழுதிக்கொள்வதற்கு மோட்டார் வாகன சட்டத்தின்படி அனுமதி இல்லை" என கூறப்பட்டு இருந்தது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர், இதுதொடர்பாக தமிழக காவல் துறை தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
அதன்பேரில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. மதுரை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், வாகனங்களில் அரசியல் கட்சி கொடி மற்றும் பதவியின் பெயரை எழுதுவதற்கு மோட்டார் வாகன சட்டப்படி அனுமதி இல்லை. அவ்வாறு விதிகளை மீறி கட்சி கொடி மற்றும் பதவியின் பெயர் பலகைகளை வைத்திருந்தால் சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து அதிகாரிகளில், உதவி ஆய்வாளர் பதவிக்கு குறையாத அலுவலர் அதனை அகற்றவும், அதிகபட்ச அபராதத்தை வசூலிக்கவும் உரிமை உள்ளது. கட்சி கொடி மற்றும் பதவி பெயர் பலகைகளுடன் செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை. அதுமட்டுமல்லாமல் சுங்கச்சாவடி கட்டணங்களை செலுத்தாமல் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் சண்டையிடும் சூழ்நிலையும் உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி: 'புதுச்சேரி ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் இல்லை'
புதுச்சேரி ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அமைச்சரவையின் அறிவுரையின்படியே ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரி மாநில ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிநாராயணன் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசு, கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிறப்பித்த உத்தரவில், புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடும் வகையில், அரசு ஆவணங்களைக் கோரவும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்திருந்தது. இந்த உத்தரவின் காரணமாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, புதுச்சேரி மாநில அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தேவையின்றி தலையிடுகிறார்.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை கலந்தாலோசிக்காமல் அதிகாரிகளுக்கு அவரே தன்னிச்சையாக உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார். அரசுக்கு இணையாக ஆய்வுக் கூட்டங்களை நடத்துகிறார். அரசு ஆவணங்களை அதிகாரிகளிடம் பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார். அவரது செயல்பாடுகள் அனைத்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவே உள்ளது. எனவே, மாநில அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த தீர்ப்பு விவரம்: யூனியன் பிரதேச அரசின் நிர்வாகியான துணை நிலை ஆளுநர், புதுச்சேரி மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ, அந்த முடிவுகளின் அடிப்படையில்தான் செயல்பட முடியும். துணை நிலை ஆளுநருக்கென்று தனியாக சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை. யூனியன் பிரதேச சட்டத்தில் அவருக்கு சிறப்பு அதிகாரம் எதுவும் வழங்கப்படவில்லை. தேவையான சமயத்தில் அமைச்சரவை வழங்கும் அறிவுரைகளின்படியே ஆளுநர் செயல்பட வேண்டும். சட்டப்பேரவைக்குத்தான் மாநில அளவில் சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ளது. சட்டப்பேரவைக்கு உள்ள அதிகாரத்தை விட அதிகமான அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு இல்லை.
ஆளுநருக்கும் மாநில அமைச்சரவைக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும் சூழலில், சட்டப்பேரவையில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்தாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுபோன்ற விவகாரங்களில் குடியரசுத் தலைவர் மட்டுமே சரியான முடிவை எடுக்க முடியும்.
மேலும், மாநில முதல்வர் மற்றும் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டுத்தான் துறைச் செயலாளர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அனைவரும் பணியாற்ற வேண்டும். யூனியன் பிரதேச சட்டப்பிரிவு 44-இன் கீழ் ஆளுநருக்கு குறிப்பிட்ட சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்காக ஆளுநர் அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடவோ அல்லது தலையீடு செய்யவோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுக்கு இணையாக மற்றொரு அரசாங்கத்தை நடத்தவோ அதிகாரம் வழங்கப்படவில்லை.
எனவே, மாநில சட்டப்பேரவையின் அதிகாரத்தைக் குறைத்து ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தை உயர்த்தி அவருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கி மத்திய அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி மற்றும் அதே ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி ஆகிய நாள்களில் பிறப்பிக்கப்பட்ட இரண்டு உத்தரவுகளும் செல்லாது. அந்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன. அமைச்சரவை எடுக்கின்ற முடிவுகளைத்தான் ஆளுநர் பின்பற்ற வேண்டும். அதே போன்று அரசு அதிகாரிகள் தன்னுடன் கட்செவி (வாட்ஸ் ஆப்) மூலம் தொடர்பில் இருக்க வேண்டும். அரசின் நிர்வாக முடிவுகளைத் தனக்கு தெரிவிக்கவேண்டும் என ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட முடியாது.
புதுச்சேரி மாநில அமைச்சரவைக்கும் ஆளுநருக்கும் இடையிலான இந்த மோதல் போக்கு நீடித்தால் அது ஜனநாயகத்தையும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் கேலிக்கூத்தாக்கி விடும். எனவே அதிகாரிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மற்றும் அமைச்சரவை அதிகாரத்துக்கு உள்பட்டே செயல்பட வேண்டும் என நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்து தமிழ்: '500 டன் பழக்குவியலில் சிக்கிய தொழிலாளி'
ஆவடி அருகே மேட்டுப்பாளையத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் சுமார் 2 ஆயிரம் டன் எடையுள்ள பழங்கள் சேகரிக்கும் பழக்கிடங்கு ஒன்று உள்ளது. இதில் வடமாநில தொழிலாளர்கள் சிலர் பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் இரவு கிடங்கில், மிகப்பெரிய இரும்பாலான அலமாரிகளில், ஹைய துல் ஹக், ஆரிப், ஜாரூல், சையது ஹக் ஆகிய 4 வடமாநில தொழிலாளர்கள், பழப் பெட்டிகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக, 500 டன் பழப்பெட்டிகள் திடீரென சரிந்து விழுந்ததில், பழக்குவியலில் 4 தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்த ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி ஆகிய தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, சரிந்து கிடந்த பழப்பெட்டிகளை அகற்றி ஆரிப், ஜாரூல், சையது ஹக் ஆகிய 3 பேரை மீட்டனர். ஆனால், பழக்குவியலில் சிக்கிய ஹையதுல் ஹக்கை மீட்க முடியவில்லை. உடனடியாக அம்பத்தூரிலிருந்து அவசர மீட்பு வீரர்கள் 10 பேரும், கிரேனும் வரவழைக்கப்பட்டு பழப் பெட்டிகள் அகற்றப்பட்டன. அதே நேரத்தில், நள்ளிரவு வரை மீட்புப் பணி தொடர, மேலும் 15 வீரர்கள் நள்ளிரவில் வரவழைக்கப்பட்டு, தீவிர மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட னர்.
நேற்று காலை, ஹையதுல் ஹக்கின் முனகல் சத்தம் கேட்டு, தீயணைப்பு வீரர்கள் பழக்குவியலுக்குள் மேற்புறமாக துளையிட்டு உள்ளே இறங்கி, காலை 9 மணியளவில் அவரை உயிருடன் மீட்டனர் அதைத் தொடர்ந்து, தயாராக இருந்த மருத்துவ உதவி வாகனத்தில் ஹையதுல் ஹக்குக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும், திருவள்ளூர் சார் ஆட்சியர் ரத்னா, பூந்தமல்லி வட்டாட்சியர் புனிதவதி, அம்பத்தூர் காவல் துணை ஆணையர் ஈஸ்வரன் உள்ளிட்ட வருவாய்த் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் பலர் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற் கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக, ஆவடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- இவ்வாறாக விவரிக்கிறது அந்நாளிதழ்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: வாக்குப்பதிவு செய்ய 80 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் செய்த மருத்துவர்
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்ய தனது தொகுதிக்கு 80 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்றுள்ளார் ஜெய்பூரை சேர்ந்த இதய நோய் நிபுணர் ஒருவர்.
கடந்த திங்கட்கிழமையன்று டொங்க் - சவாய்மதொபுர் மக்களவை தொகுதிக்கு ஜெய்ப்பூரில் இருந்து சைக்கிளில் பயணித்துள்ளார் மருத்துவர் ஜி எல் ஷர்மா. இதற்கு அவருக்கு நான்கு மணி நேரம் ஆகியுள்ளது.
உடல்நலம் குறித்தும், வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதை செய்ததாக ஷர்மா தெரிவித்தார்.
ராஜதானின் 13 தொகுதிகளுக்கு மே 29ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்