You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெனிசுவேலா நாட்டைவிட்டு வெளியேற முடிவு செய்தாரா அதிபர் மதுரோ?
வெனிசுவேலா நாட்டைவிட்டு வெளியேற முடிவுசெய்த அதிபர் மதுரோ?
நாட்டைவிட்டு வெளியேற வெனிசுவேலா அதிபர் மதுரோ எதிர்கட்சிகளிடம் ஒப்பு கொண்டதாக அவரது நண்பர்கள் கூறியதாகவும், ஆனால் பின்னர் அவர் பின்வாங்கிவிட்டார் எனவும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். வெனிசுவேலாவில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி இருந்துவரும் நிலையில் அதிபர் மதுரோ பல மாதங்களாக மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறார்.
செவ்வாய்க்கிழமை மிகப்பெரிய அளவில் வெனிசுவேலாவில் போராட்டங்கள் நடைபெற்றன. வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர் குவான் குவைடோ மதுரோவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர ராணுவ உதவிகளை நாடினார். ஆனால், ராணுவம் மறுத்துவிட்டது. மதுரோ நாட்டைவிட்டு வெளியேறி கியூபா செல்ல முடிவு செய்திருந்தார். ஆனால் ரஷ்யாவால் தடுத்து நிறுத்தப்பட்டார் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவிக்கிறார்.
சபாநாயகருக்கு எதிராக திமுக மனு
அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் மற்றும் கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோருக்கு அவர்களை ஏன் பதவி நீக்கம் செய்யக்கூடாது என்று கேட்டு சட்டமன்ற அவைத்தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.இதையடுத்து அவைத்தலைவர் தனபால் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர மனு அளித்துள்ளது திமுக. அதிமுகவின் மூன்று எம்எல்ஏ-க்கள் கட்சி விதிகளுக்கு புறம்பாக நடப்பதால் அவர்களை தகுதிநீக்கம் செய்யவேண்டும் என அரசு கொறடா கொடுத்த புகாரின் பேரில், தமிழக சட்டமன்ற அவைத்தலைவர் தனபால், மூவரும் ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என தெரிய வந்துள்ளது.
விரிவாக படிக்க:3 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்; சபாநாயகருக்கு எதிராக திமுக மனு
இலங்கை காத்தான்குடியில் 5 இந்தியர்கள் கைது
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் நேற்று (மே 30) பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது, இந்தியர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, காத்தான்குடி போலீஸார் தெரிவித்தனர். விசா மற்றும் பாஸ்போர்ட் ஆகியவை மேற்படி நபர்களிடம் இருக்கவில்லை என்றும், அதனாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் கூறினர். காத்தான்குடி முஹீதீன் பள்ளிவாசல் கட்டட நிர்மாண வேலைக்காக இவர்கள் வந்திருந்ததாக, கைது செய்யப்பட்டோர் தரப்பில் போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதிக்கு எதிராக புகார் அளித்த பெண் விசாரணையில் இருந்து விலகல்
இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக பாலியல் புகார் கூறிய உச்சநீதிமன்ற முன்னாள் பணியாளர், அதுதொடர்பாக நடந்து வரும் வழக்கு விசாரணையில் இனி பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனக்கு ஏற்பட்டுள்ள தீவிரமான கவலைகள் மற்றும் தயக்கங்களின் காரணமாக இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
கேரளாவில் தற்கொலை குண்டுவெடிப்பை நடத்த திட்டமிட்ட நபர் கைது
ஐஎஸ் அமைப்பினை பின்தொடர்ந்து வந்ததுடன், கேரளாவில் தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்ட நபரொருவரை கைது செய்துள்ளதாக இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. கேரளாவின் காசர்கோடு என்னும் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, கைது செய்யப்பட்டுள்ள ரியாஸ் அபூபக்கர் என்னும் ரியாஸை கொச்சியிலுள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க:கேரளாவில் தற்கொலை குண்டுவெடிப்பை நடத்த திட்டமிட்ட நபர் கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்