You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அனுமனை 'அவமதித்தாரா' கம்யூனிஸ்ட் வேட்பாளர் கண்ணையா குமார்? #BBCFactCheck
- எழுதியவர், உண்மை பரிசோதிக்கும் குழு
- பதவி, பிபிசி
பீகாரிலுள்ள பெகுசராய் மக்களவைத் தொகுதியின் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கண்ணையா குமார் இந்துமத கடவுள் அனுமன் மற்றும் பெண்களை அவமதித்துவிட்டதாக குறிப்பிடும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சுமார் 25 நொடிகள் நீடிக்கும் அந்த காணொளியில், "அனுமன் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த கடவுள். அவரை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பார்க்க முடியும்.
யாரோ ஒருவரது மனைவி கடத்தப்பட்டதற்காக அவர் இலங்கையையே எரித்தார். சுக்ரீவன் ராமனின் நண்பர். அவர் சுக்ரீவனுக்காக ஏமாற்று வேலை செய்யத் தயாராக இருந்தார். நீதிநெறிகளை விட நட்பு உயர்ந்தது" என்று அந்த காணொளியில் கண்ணையா பேசுவதை போன்றுள்ளது.
சௌகிதார் சுகுன்டி என்னும் பயனர் பெயரை கொண்ட ட்விட்டர் பக்கத்தில் இந்த காணொளி, "அனுமன் மற்றொருவரின் மனைவிக்கு நேர்ந்த அவமரியாதைக்காக இலங்கையை எரித்தார்" என்ற விளக்கத்துடன் பதிவிடப்பட்டுள்ளது.
"இது இந்து மதத்திற்கு மட்டுமின்றி, பெண்களுக்கு எதிரான பேச்சும் ஆகும். பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும்போது அதை நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் இவர்கள்" என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காணொளி மட்டும் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட முறை ட்விட்டரில் பார்க்கப்பட்டுள்ளதுடன், பல்லாயிரக்கணக்கான முறை ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது.
இந்த காணொளியின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்தபோது, இது தவறானது என்று தெரியவந்துள்ளது.
இந்த காணொளியில் பேசுவது கன்னையாதான் என்றாலும், அவர் கடந்த ஆண்டு பேசிய காணொளியில் இருந்து இந்த குறிப்பிட்ட பகுதி மட்டும் வெட்டி எடுக்கப்பட்டு தவறான அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
காணொளியில் உண்மைத்தன்மை
கடந்தாண்டு மார்ச் 30ஆம் தேதி 'நியூஸ் ஆஃப் பீகார்' என்னும் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள முழு நீள காணொளியிருந்து இந்த 25 நொடி பகுதி மட்டும் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.
அந்த யூடியூப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின்படி, கடந்தாண்டு அனைத்து இந்திய மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவராக கண்ணையா குமார் இருந்தபோது, பீகாரிலுள்ள மோட்டிஹரி என்னுமிடத்தில் ஒன்பதரை நிமிடங்கள் உரையாற்றியபோது எடுக்கப்பட்ட காணொளி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்ணையா தனது முழு உரையில் பேசியதன் எழுத்து வடிவம்:
"மற்றொருவரின் மனைவிக்காக அனுமன் இலங்கையை எரித்தார். ஆனால், இங்கோ அனுமனின் பெயரில் மக்களின் வீடுகளை எரித்து வருகிறார்கள்.
அதைத்தொடர்ந்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தாக்கி பேசும் கன்னையா, "காவி நிற அங்கிகளுடன் காட்டிலிருந்து வந்த யோகி தற்போது முதலமைச்சர் நாற்காலியை அடைய விரும்புகிறார். ஆனால், அவர் தன்னை ஒரு ராம பக்தராக கூறிக்கொள்கிறார். கடவுள் ராமர் தனது அரியணையை விட்டுவிட்டு காட்டுக்குள் சென்றார். எனவே, இதில் உள்ள வேறுபாட்டை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்று அவர் மேலும் கூறுகிறார்.
இந்து-முஸ்லிம் இடையிலான பிளவு குறித்து பேசும்போது, "தனது நீதிநெறிகளை விட நட்பே முக்கியமென்று ராமர் நினைத்தார். ஆனால், அவரது பெயரை கொண்டுள்ளவர்கள் எல்லைகளை வைத்துள்ளார்கள்."
இதன் மூலம் கண்ணையா குமார், கடவுளையும், பெண்களையும் அவமதித்ததாக கூறுவது தவறான செய்தி என்றும், அவரது முழு நீள பேச்சை வெட்டி ஒட்டியதன் காரணமாக அதுபோன்ற பொருள் ஏற்பட்டுள்ளதும் தெரிகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்