'அகழ்வாய்வில் கிடைத்தவை கி.மு 300ஆம் ஆண்டுக்கு முந்தைய பொருட்கள்'

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி - அகழ்வாய்வில் கிடைத்தவை கி.மு 357ஆம் ஆண்டைச் சேர்ந்த பொருட்கள்

அகழாய்வு தொடர்பான சில வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில், நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, "ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை தாக்கல் செய்ய 8 மாதங்கள் தேவைப்படும். அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட அகழாய்வு மேற்கொள்ளப்படும்" என்று மத்திய அரசின் உதவி தலைமை வழக்கறிஞர் கதிர்வேலு தெரிவித்தார்.

"ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் நடந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை அமெரிக்காவுக்கு கார்பன் பரிசோதனைக்காக அனுப்பி இருந்தோம். அதன் முடிவு தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, ஒரு பொருள் கி.மு.308-ஐ சேர்ந்தது. மற்றொன்று கி.மு.357-ம் ஆண்டை சேர்ந்தது" என்றும் அரசு தரப்பு பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதை தொடர்ந்து நீதிபதிகள், "அழகன்குளம் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான தமிழ் பிராமி எழுத்துகள் கி.மு.308-ம் ஆண்டை சேர்ந்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே தமிழ் பிராமி எழுத்துகள் அசோகர் காலத்துக்கு முற்பட்டவை என்பதும் தெளிவாகிறது" என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், "அழகன்குளம் பகுதியில் மீண்டும் அகழாய்வு மேற்கொள்ளப்படுமா?" என்றும் கேள்வி எழுப்பினர். அங்கு ஏற்கனவே அகழாய்வு செய்ததன் அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - கடந்த ஐந்து ஆண்டுகளில் 80% வாராக்கடன்

டிசம்பர் 2018 வரையிலான கடைசி 10 ஆண்டுகளில் வராக்கடனாக அறிவிக்கப்பட்ட ஏழு லட்சம் கோடி ரூபாயில், ஏப்ரல் 2014க்கு பிறகு மட்டும் 5,55,603 கோடி ரூபாய் வாரக்கடனாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது கடந்த பத்து ஆண்டுகளில் வாரக்கடனாக அறிவிக்கப்பட்ட தொகையில் ஐந்தில் சுமார் நான்கு பங்காகும்

வாரக்கடனாக அறிவிக்கப்பட்ட கடன் தொகைகளை திரும்பப் பெற வங்கிகள் நடவடிக்கை எடுக்காது. அவை இழப்பாகவே கருதப்படும்.

தினமணி - காவலாளியா ஊழல்வாதியா?

நேர்மை மிகுந்த காவலாளி அல்லது ஊழல் கறை படிந்த வாரிசு என இருவரில் யாரை தேர்வு செய்யப் போகிறீர்கள் என்று வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி கேள்வி எழுப்பினார். தனக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் இடையிலான போட்டியை அவர் இவ்வாறு குறிப்பிட்டார் என்று தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் அஹமது நகரில், பாஜக மற்றும் கூட்டணியில் உள்ள சிவசேனை கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தபோது, "காவலாளியின் அரசு பலமானதாகவும், உறுதிமிக்க நடவடிக்கைகளை எடுக்கக் கூடியதாகவும் இருந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ரீமோட் கட்டுப்பாட்டில் இயங்கிய முந்தைய ஆட்சியில் நாள் தவறாமல் ஊழல் புகார் எழுந்ததையும், முடிவுகளை எடுப்பதில் கால தாமதம் நிலவியதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்" என்று தெரிவித்தார் என்கிறது தினமணி செய்தி.

தி இந்து - 20 மாதங்களில் குறைவான வளர்ச்சி

இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சி பிப்ரவரி மாதத்தில் 0.1% ஆக குறைந்துள்ளதாக சமீபத்திய அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது ஜனவரி மாதத்தில் 1.44% ஆக இருந்தது.

பிப்ரவரியில் உற்பத்தி துறையின் வளர்ச்சி 0.31% ஆக இருந்ததே, பிப்ரவரி வரையிலான கடைசி 20 மாதங்களில் மிகவும் குறைவான வளர்ச்சி என்று அந்தச் செய்தி கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :