நரேந்திர மோதியின் உரைகளை அனுமதியின்றி ஒளிபரப்ப நமோ டிவிக்கு தடை

பிரதமர் நரேந்திர மோதியின் உரைகளை ஒளிபரப்பி வந்த நமோ டிவி, அரசியல் சார்ந்த உள்ளடக்கங்களை முன் அனுமதியின்றி ஒளிபரப்ப தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

டெல்லி தலைநகர் பிரதேசத்தின் தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் நேற்று, வியாழக்கிழமை, எழுதியுள்ள கடிதத்தில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் அனுமதி பெறாமல், மின்னணு ஊடகங்களில் ஒளிபரப்பு செய்யப்படும் அரசியல் சார்ந்த உள்ளடக்கங்கள் அனைத்தும் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, டி.டி.எச் சேவைகளில் ஒளிபரப்பாகும் நமோ டிவி / கன்டென்ட் டிவி பாரதிய ஜனதா கட்சியால் பணம் வழங்கப்படும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதாக டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி, இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருந்தார்.

ஏப்ரல் 2004இல் இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஒரு உத்தரவின்படி, மின்னணு ஊடகங்களில் வெளியாகும் அரசியல் பிரசார உள்ளடக்கங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் முன்னனுமதி பெற்றிருக்க வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோதியின் உரைகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் நமோ டிவி, அத்தகைய முன் அனுமதியைப் பெறவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, நமோ டிவி பிரதமரின் உரைகள் மற்றும் பாஜக நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப விரும்பினால் தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டியிருக்கும்.

இந்த உத்தரவை நிரைவேற்றி அறிக்கை அளிக்குமாறு டெல்லி தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் சமயத்தில் நரேந்திர மோதி வாழ்க்கை குறித்த சினிமாவை வெளியிட கூடாது என்று புதன்கிழமை தேர்தல் ஆணையம் தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது.

நரேந்திர மோதி அரசை தூக்கியெறிய மக்கள் காத்திருக்கிறார்கள்: செயற்பாட்டாளர் ஆழி செந்தில்நாதன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :