அய்யாக்கண்ணு பாஜகவுடன் சமரசம் - நரேந்திர மோதியை எதிர்க்கும் முடிவைக் கைவிட்டது ஏன்?

- எழுதியவர், விக்னேஷ். அ
- பதவி, பிபிசி தமிழ்
டெல்லியில் தமிழக விவசாயிகளுடன் போராட்டம் நடத்தி, நரேந்திர மோதி தலைமையிலான மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த விவசாயிகளுக்கான செயற்பாட்டாளர் அய்யாக்கண்ணு, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா உடன் மேற்கொண்ட சந்திப்புக்குப் பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிராகத் தாமும், தமது தலைமையிலான தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க உறுப்பினர்களும் என 111 விவசாயிகள் போட்டியிடப்போவதாக மார்ச் மாதம் அறிவித்திருந்த அவர், அவ்வாறு போட்டியிடப்போவதில்லை என்று சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான வைப்புத்தொகையைத் திரட்ட தங்கள் நிலையைக் கூறி வாரணாசி மக்களிடம் பிச்சை எடுக்கப்பபோவதாகவும், நிர்வாணமாகச் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாவும் கூறியிருந்த அய்யாக்கண்ணு, தங்கள் பெரும்பாலான கோரிக்கைகளை பாரதிய ஜனதா கட்சி ஏற்றுக்கொண்டுள்ளதால் நரேந்திர மோதிக்கு எதிராகத் தேர்தலில் போட்டியிடும் முடிவைக் கைவிட்டதாகக் கூறியுள்ளார்.
தனியாக விவசாய சங்கத்தைத் தொடங்கும் முன்னர் பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ன் விவசாயிகள் பிரிவான பாரதிய கிசான் சங்கத்தில் இருந்தவர் அய்யாக்கண்ணு என்பது குறிப்பிடத்தக்கது.
பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து.

பட மூலாதாரம், Getty Images
கேள்வி: அமித் ஷா மற்றும் உங்களிடையே நடந்த சந்திப்புக்கு முதல் முயற்சி எடுத்தது உங்கள் தரப்பா, பாஜக தரப்பா?
பதில்: மார்ச் 13 அன்று எங்கள் கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றி காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு அனுப்பி வைத்தோம்.
அதன்பின், பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் எங்களைத் தொடர்புகொண்டு, அமித் ஷா உடன் சந்திக்க ஏற்பாடு செய்வதாகக் கூறினார்.
அமித் ஷா எங்களை ஏப்ரல் 7 அன்று எங்களை டெல்லிக்கு வரவழைத்து, எங்கள் சங்கத்தைச் சேர்ந்த ஒன்பது பேருடன் பேசினார். அப்போது தமிழக அமைச்சர் தங்கமணியும் உடன் இருந்தார்.
கேள்வி:நீங்கள் அமித் ஷாவிடம் முன்வைத்த கோரிக்கைகள் என்னென்ன?
பதில்:நதிகள் இணைப்பு, வேளாண் பொருட்களுக்கு லாபகரமான விலை, வேளாண் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளின் இறக்குமதிக்குத் தடை, விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளில் சிறு-குறு-நடுத்தர விவசாயிகள் என பாரபட்சம் காட்டாமல் அனைவருக்கும் வழங்குவது ஆகியவை எங்கள் ஆறு கோரிக்கைகள்.
கடன் தள்ளுபடி தவிர பிற ஐந்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்படும் என்று அமித் ஷா அப்போது தெரிவித்தார். அதை நம்பி மோதிக்கு எதிராக போட்டியிடும் முடிவைக் கைவிட்டோம்.

பட மூலாதாரம், Getty Images
கேள்வி: உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற பாஜக ஒப்புக்கொண்டது எதனால் என்று கருதுகிறீர்கள்?
பதில்: நாங்கள் பிச்சை எடுத்து, நிர்வாணமாகச் சென்று வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்தால் அவர்களுக்கு அசிங்கம் என்றுதான் எங்களை அழைத்துப் பேசியுள்ளார்கள். நாங்கள் தேர்தலில் நின்று வெல்ல வாரணாசியில் போட்டியிட முடிவு செய்யவில்லை.
எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவே அந்த முடிவைச் செய்தோம். அந்தக் கோரிக்கைகளை அவர்களே நிறைவேற்ற ஒப்புக்கொள்ளும்போது தேர்தலில் போட்டியிடும் தேவை இல்லாமல் போனது.
கேள்வி: பாஜகவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வந்த உங்களின் இந்த முடிவு குறித்த விமர்சனங்களுக்கு உங்கள் பதிலென்ன?
பதில்: நாங்கள் போராட்டம் நடத்தி வந்தபோது 'ஆடி கார் அய்யாக்கண்ணு', எனக்குப் பலகோடி சொத்து உள்ளது என்றெல்லாம் அவதூறு பேசினார்கள். இப்போது நான் பாஜகவிடம் பணம் வாங்கிவிட்டதாகவும், நான் எம்.பி பதவி பெறவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறுகிறார்கள். மிரட்டலுக்கு நான் பயந்து பின்வாங்குவதாகவும் சிலர் கூறுகிறார்கள்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
மகாத்மா காந்தி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடியபோது இப்படித்தான் அவரையும் விமர்சித்தார்கள். இப்போது என்னையும் கேவலமாகப் பேசுகிறார்கள்.
நரம்பில்லாத நாக்கில் வரம்பில்லாமல் பேசலாமா? அவர்கள் எங்களுக்கு மரியாதை கொடுத்து அழைக்கும்போது, அதை மதித்துப் பேசுவதுதான் மனிதர்களுக்கு அழகு.
கேள்வி: ஒரு வேளை பாஜக தேர்தலில் வென்று, உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?
பதில்: நாங்கள் ஏற்கனவே 141 நாட்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினோம். பாஜக எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் நாங்கள் மீண்டும் போராடுவோம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












