You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"பாகிஸ்தானின் F-16 விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரங்கள் வலுவாக உள்ளது" - இந்திய விமானப்படை
பாகிஸ்தானின் F-16 ரக விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியதற்கான அனைத்து ஆதாரங்களும் இருப்பதாக இந்திய விமானப்படை கூறியுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய விமானப்படையின் வைஸ் மார்ஷல் ஆர்ஜிகே கபூர், மிக் 21 பைசன் விமானம், ஒரு F 16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு மறுக்க முடியாத வலுவான ஆதாரம் இருப்பதாக கூறினார்.
மேலும், பாகிஸ்தானின் விமானம் சுட்டுத்தள்ளப்பட்டதற்கான ரேடார் புகைப்படங்களையும் அவர் காண்பித்தார்.
பாகிஸ்தானின் இன்டர் சேவை பொது தொடர்புகளின் (ஐஎஸ்பிஆர்) இயக்குநர் வெளியிட்ட கருத்துகளும், இந்திய விமானப்படையுடன் ஒத்துப் போவதாக அவர் தெரிவித்தார். தாக்குதல் நடந்த அதே நாளில் இரண்டு விமானிகள் பிடிப்பட்டதாக ஐஎஸ்பிஆர் கூறுகிறது.
"அதாவது அந்த இடத்தில் இரண்டு விமானங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன. ஒன்று மிக் 21 ரக விமானம், மற்றொன்று F 16. இதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இந்திய விமானப்படையிடம் உள்ளது" என்று கபூர் தெரிவித்தார்.
எனினும், பாதுகாப்பு காரணங்களால் அதனை வெளியிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, F 16 விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது என்று கூறுவது உண்மையல்ல என்று அமெரிக்காவின் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்திருந்தது.
காஷ்மீர் பதற்றங்கள்
பிப்ரவரி 14 அன்று, இந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நடத்திய தாக்குதலில் இந்தியப் படையினர் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர்.
பின்னர் பிப்ரவரி 27 அன்று, பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் முகாம் என்று தாம் கூறும் ஓர் இலக்கின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறியது.
அடுத்த நாள் இந்திய விமானப்படை விமானத்தைச் சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான், அதன் விமானியையும் சிறைபிடித்தது. பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகக் கூறி இந்தியா போர்ப் பதற்றங்களை அதிகரிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியிருந்தார்.
சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் எஃப்-16 விமானத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையின் பாகங்கள் என்று சில பாகங்களை இந்தியா காட்டியது.
இந்த சம்பவங்களுக்குப் பிறகு சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு பாகிஸ்தான் வான் எல்லை மூடப்பட்டது.
செயற்கைக்கோள் புகைப்படங்களில் சேதம் அதிகம் தெரியாததால், பாலகோட்டில் இருந்த தீவிரவாத முகாம் மீது இந்தியா நடத்திய தாக்குதலின் வெற்றி குறித்து கேள்விகள் எழுந்தன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்