You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாலத்தீவு தேர்தல்: இந்தியாவுடன் நெருக்கமாக விரும்பும் கட்சிக்கு வெற்றிமுகம்
மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் இப்ராஹிம் முகமத் சாலியின் கட்சி மாபெரும் வெற்றிப் பெரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாலத்தீவு ஜனநாயகக் கட்சி, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 80ல் 60 இடங்களை வெல்லும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிறன்று இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
முகமத் சாலியின் கட்சி வெற்றிப் பெற்றால், நாட்டைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட முன்னாள் அதிபரும், மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் தலைவருமான முகமத் நஷீத் நாடு திரும்ப வழிவகுக்கும்.
அந்தக் கட்சியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் கட்சியினர் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிப்பது போன்றும் நடனம் ஆடுவது போன்றுமான காட்சிகள் பதிவிடப்பட்டுள்ளன.
"இந்த முடிவுகள் மாலத்தீவில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வழிவகுக்கும்" என நஷித் பிபிசியிடம் தெரிவித்தார்.
நஷீத், 2008ஆம் ஆண்டு நாட்டின் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் ஆவார்.
நீதித்துறையில் மறுசீரமைப்பு செய்யப்படும் என்றும், கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் காக்கப்படும் என்றும் அவரின் கட்சி தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்திருந்தது.
அப்துல்லா யாமீனின் ஆட்சியில், சர்ச்சைக்குரிய பயங்கரவாத தொடர்பு புகாரில் நஷீத் 2016ஆம் ஆண்டு வலுக்கட்டாயமாக நாட்டைவிட்டு வெளியேறப்பட்டார்.
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் நஷீத்தின் கட்சியை சேர்ந்தவரும், கட்சியின் துணைத்தலைவருமான சாலி வெற்றிப் பெற்றபின் அவர் நாடு திரும்பினார்.
"மாலத்தீவு ஜனநாயகக் கட்சி நாடாளூமன்றத்தில் பெரும்பான்மையாக வெற்றிப் பெற்றால் அவரின் மாலத்தீவு ஜனநாயகக் கட்சி ஆட்சியில் தொடர்ந்து நீடிக்கும், அதுமட்டுமல்லாமல் அரசியல் மற்றும் பொருளாதார சீரமைப்புகளை அவரின் கட்சி செய்யும்" என்கிறார் பிபிசி தெற்காசிய பிராந்திய ஆசிரியர் அன்பரசன் எத்திராஜன்
மேலும் அவரது கட்சி, மாலத்தீவு சீனாவை சார்ந்திருப்பதை குறைக்க விரும்புவதாகவும் மாலத்தீவின் பழைமை கூட்டாளியான இந்தியாவுடன் நெருங்கிய தொடர்ப்பு வைத்துக் கொள்ள விரும்புவதாகவும் தெரிவிக்கிறார் அன்பரசன்.
தனது ஆட்சியில் யாமீன் தனது அரசியல் எதிரிகளுக்கு ஜெயில் தண்டனை வழங்கினார். மேலும், உச்சநீதிமன்றத்தில் தனக்கு எதிரான குரல்களை ஒடுக்கினார்.
யாமீன் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் அவரின் கட்சியான மாலத்தீவின் முற்போக்கு கட்சி போட்டியிட்டது.
இந்திய பெருங்கடல் தீவு நாடான மாலத்தீவில் நடைபெறும் இந்த தேர்தல், பிராந்திய போட்டியாளர்களான இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான போட்டியாகவும் பார்க்கப்படுகிறது.
இருநாடுகளுமே மாலத்தீவில் ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றன.
யாமீன் பதவியில் இருந்த காலத்தில் சாலை திட்டங்களுக்காக சீனா பல மில்லியன் டாலர்களை மாலத்தீவில் முதலீடு செய்தது.
உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்தும், சீனாவிடம் வாங்கிய கடன் குறித்தும் விசாரிக்கப்படும் என நஷீத்தின் கட்சி தெரிவித்துள்ளது.
ஆனால், சீனாவின் நிதி உதவி திட்டத்தில் தாம் எந்த தவறையும் இழைக்கவில்லை என யாமீன் தெரிவிக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்