You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காசிமேடு மீனவர்கள்: ’கடலைத் தவிர எங்களுக்கு வேறொன்றும் தெரியாது’ - தீவிரமாகும் வாழ்வாதார சிக்கல்
- எழுதியவர், விஷ்ணுப்ரியா ராஜசேகர்
- பதவி, பிபிசி தமிழ்
காசிமேடு காலத்திற்கு ஏற்றவாரு மாறிவருகிறது. ஆனால், எங்கள் வாழ்வு அப்படியேதான் இருக்கிறது என்கிறார்கள் காசிமேடு மீனவர்கள்.
மீன் சுமக்கும் கடல்
காசிமேட்டில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் மீன்பிடி தொழிலையும் அதனை சார்ந்த பிற தொழில்களையும் நம்பி வாழ்கிறார்கள். தினமும் இங்கு சில்லறை வணிகம் முதல் பலகோடி ரூபாய் வெளிநாட்டு ஏற்றுமதி வணிகம் வரை நடைபெற்று வருகிறது.
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலையொட்டி இப்பகுதி மக்களை சந்தித்தோம். அவர்களின் தேவைகள், பிரச்சனைகள் குறித்து உரையாடியபோது, தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மூன்று பிரச்சனைகளுக்கு தீர்வு கொண்டு வர வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
தாங்கள் காலம் காலமாய் வியாபாரம் செய்து கொண்டிருந்த கடலை ஒட்டியபகுதிகள் சென்னை துறைமுக விரிவாக்கத்திற்காக அகற்றப்படுவது தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கப்பதாக சொல்கின்றனர் இவர்கள்.
இங்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களை தவிர, மீனவர்கள் கொண்டுவரும் மீன்களை ஏலத்திற்கு எடுத்து கடற்கரையோரத்தில் சில்லறை வியாபாரம் செய்பவர்கள் மற்றும் மீன்களை பதப்படுத்த பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டி வியாரபாரம் செய்பவர்களும் ஏராளம்.
இவர்களின் பெரும்பாலான கடைகள் கடலோரத்தில் அமைந்துள்ளன. ஆனால் தற்பொது சென்னை துறைமுக விரிவாகத்திற்காக அவை இடிக்கப்படுவதாகவும் இவர்கள் கூறுகின்றனர் .
அதே சமயம் இவர்களுக்கு சென்னை துறைமுகம் வேறு இடங்களையும் ஒதுக்கி கொடுக்கிறது. ஆனால் ஆண்டாண்டுகாலம் தாங்கள் வியாபாரம் செய்த பகுதியை விட்டு வெளியேற முடியாது என்று கூறி துறைமுகம் அளிக்கும் புதிய இடத்தை இவர்கள் ஏற்க மறுக்கின்றனர்.
கல்லும் மண்ணுமல்ல நிலம்
"முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் இங்கேதான் தொழில் செய்து வருகிறோம் எங்களை இந்த இடத்தை விட்டு போக சொன்னால் எங்களுக்கு பிழைக்க வேறேதும் வழி இல்லை. இந்த கடலை நம்பியேதான் எங்களின் வாழ்க்கை. மீன் வியாபாரத்தையும் ஐஸ் வியாபாரத்தையும் தவிர எங்களுக்கு வேறொன்றும் தெரியாது" என்கிறார் கடற்கரை ஓரம் மீன்களை பதப்படுத்த ஐஸ்கட்டி கடை வைத்திருக்கும் ஆரவல்லி.
வட சென்னை தொழிற்சாலைகள் நிறைந்த ஒரு பகுதி. எனவே வடசென்னையை சுற்றியுள்ள தொழிற்சாலைகளின் கழிவுகள் கடலில் கலப்பதால் தற்போது ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் காசிமேடு மீனவர்கள்.
"முதலில் கடலில் பாசிகள் வளர்ந்ததை பார்த்தோம் ஆனால் தற்போது பிளாஸ்டிக் வளர்கிறது. 300 நாடிகல் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு இப்போது நாங்கள் தள்ளப்படுகிறோம்" என்கிறார் மீனவர் தனசேகர்.
வடசென்னையை அடுத்து உள்ள எண்ணூர் கழிமுகம் அழிவில் இருப்பதும் மீன்கள் உற்பத்தியை பெரிதாக பாதிப்பதாக சொல்கின்றனர் இங்குள்ள மீனவர்கள். ஆறும் கடலும் சேரும் இடமான இந்த கழிமுகப் பகுதி சென்னை மற்றும் திருவள்ளூரின் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளது.
ஆனால் இங்கு சுற்றியுள்ள பகுதிகளின் தொழிற்சாலைகளின் கழிவுகள் கழிமுக பகுதியில் கலப்பது. அங்கு ஏற்பட்டுள்ள பல ஆக்கிரமிப்புகள் கழிமுகப் பகுதியை அழிவின் விளிம்புக்கு இட்டுச் செல்கிறது.
அழிவில் கழிமுகம்
இந்த கழிமுகப் பகுதியில்தான் பெரிய மீன்கள், இறால் மற்றும் நண்டு ஆகியவை இனப்பெருக்கம் செய்யும்.
எனவே இந்த கழிமுகப் பகுதியின் அழிவு மீன் உற்பத்தியை பாதிப்பதாக சொல்கின்றனர் அப்பகுதி மீனவர்கள்.
தொழிற்சாலை வளர்ச்சிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இயற்கை பகுதிகளுக்கும், மீனவர்கள் மீதும் காட்டப்படுவதில்லை என்கிறார் எண்ணூர் பகுதியை சேர்ந்த மீனவர் ஸ்ரீனிவாசன்.
நாம் அங்கு சென்றபோது அங்குள்ள பகுதி நீர் கருப்பாகவும், அதில் மீன்கள் இறந்து கிடப்பதையும் போன்ற காட்சிகளை பார்க்க முடிகிறது.
அதுமட்டுமல்லாமல் அந்த பகுதியில் பிரத்யேகமாக வளரக்கூடிய மீன் வகைகளும், நண்டு வகைகளும் தொழிற்சாலைக் கழிவுகளால் அழிந்து கொண்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
"வளர்ச்சி என்பது தொழில் வளர்ச்சி என்றே கருதுகின்றனர். ஆனால் இந்த மண்ணின் மைந்தர்களின் வளர்ச்சி குறித்து யாரும் கருதுவதில்லை. எங்களின் வளர்ச்சியே இந்த பகுதியின் வளர்ச்சி. எங்கள் வாழ்வாதாரங்களை அழித்து ஏற்படும் வளர்ச்சி ஒரு வளர்ச்சியே இல்லை" என்கிறார் எண்ணூர் கழிமுக அழிவுக்கு எதிராக பலநாள் போராடி வரும் மீனவர் ஸ்ரீனிவாசன்.
தேர்தல் நேரங்களில் மட்டுமே வாக்குறுதி
இத்தனை பிரச்சனைகளை அடுக்கினாலும், அரசியல் கட்சிகளால் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுவபோதில்லை என நம்பிக்கையை இழந்து பேசும் காசிமேடு பகுதி மக்கள், இந்த தேர்தல் என்பது தங்களுக்கு ஒரு பொழுதுபோக்குதான். அதனால் எந்த வித மாறுதல்களும் ஏற்படப்போவதில்லை என்றே தெரிவிக்கின்றனர்.
"வாக்குகளுக்காக இங்கு வருவார்கள். அதை செய்துவிடுவோம் இதை செய்துதுவிடுவோம் என்று ஆறுதலாக பேசி வாக்கு சேகரிப்பார்கள். தேர்தல் முடிந்தவுடன் இந்தப் பகுதி பெரிதாக யார் கண்ணுக்கும் தெரிவதில்லை" என்கிறார் கடற்கரை ஓரத்தில் மீன் வியாபாரம் செய்யும் கவிதா.
ஒட்டுமொத்தமாக வளர்ச்சியின் பெயரால் தங்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படாமல் காக்கப்பட வேண்டும். அதுவே தாங்கள் வைக்கும் கோரிக்கை என்கின்றனர் இவர்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்