You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
துபாயில் பிரிட்டிஷ் பெண்ணுக்கு சிறை: முன்னாள் கணவரின் மனைவியை 'குதிரை' என ஃபேஸ்புக்கில் திட்டியதால் வந்த வினை - மற்றும் பிற செய்திகள்
தனது முன்னாள் கணவரின் மனைவியை குதிரை என்று ஃபேஸ்புக்கில் திட்டியதற்காக பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் இரண்டு வருட ஜெயில் தண்டனையை எதிர்கொள்கிறார்.
லண்டனை சேர்ந்த 55 வயது லாலெ ஷ்ரவேஷ், தனது கணவரின் இறுதிச்சடங்கிற்காக துபாய் சென்றுள்ளார். அங்கு விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2016ஆம் ஆண்டு தனது கணவர் மறுமணம் புரிந்த புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட போது, ஷ்ரவேஷ் பகிர்ந்த கருத்துக்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஷ்ரவேஷுக்கும் அவரது கணவருக்கும் திருமணமாகி 18 வருடங்கள் ஆனது. அந்த சமயத்தில் ஒரு எட்டு மாத காலம் ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்தார் ஷ்ரவேஷ். பின் அவருக்கு விவாகரத்து ஆனதும் பிரட்டனுக்கு தனது மகளுடன் வந்துவிட்டார்.
தனது கணவர் மறுமணம் செய்துகொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தவுடன் ஷ்ரவேஷ், ’நீ மண்ணில் புதைந்து போக வேண்டும். இந்த குதிரைக்காகதான் என்னை விட்டுவிட்டாயா’ என்று பதிவிட்டுள்ளார்.
ஐக்கிய நாடு எமிரேட்டின் சைபர் குற்றவியல் சட்டப்படி சமூக வலைதளங்களில் மரியாதைக் குறைவான கருத்துக்களை பதிவிட்டால் ஜெயில் தண்டனையோ அல்லது அபராதமோ வழங்கப்படும்.
'பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது'
தங்கள் மீது இந்தியா இந்த மாதம் மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று உளவுத்துறையின் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறியுள்ளார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்தியா, பாகிஸ்தான் அமைச்சர் கூறியுள்ளது பொறுப்பற்ற மற்றும் அபத்தமான கருத்துகள் என்று கூறியுள்ளது.
எல்லைதாண்டி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவங்ளால் பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கும் இடையே உண்டான பதற்றம் தணிந்து வருவதாகத் தோன்றி வரும் சூழலில், இன்று, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஷா மஹ்மூத் குரேஷி இதைத் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சிக்கும் வாழ்வாதாரத்திற்கும் மத்தியில் தத்தளிக்கும் காசிமேடு மீனவர்கள்
காசிமேடு காலத்திற்கு ஏற்றவாரு மாறிவருகிறது. ஆனால், எங்கள் வாழ்வு அப்படியேதான் இருக்கிறது என்கிறார்கள் காசிமேடு மீனவர்கள்.
காசிமேட்டில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் மீன்பிடி தொழிலையும் அதனை சார்ந்த பிற தொழில்களையும் நம்பி வாழ்கிறார்கள். தினமும் இங்கு சில்லறை வணிகம் முதல் பலகோடி ரூபாய் வெளிநாட்டு ஏற்றுமதி வணிகம் வரை நடைபெற்று வருகிறது.
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலையொட்டி இப்பகுதி மக்களை சந்தித்தோம். அவர்களின் தேவைகள், பிரச்சனைகள் குறித்து உரையாடியபோது, தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மூன்று பிரச்சனைகளுக்கு தீர்வு கொண்டு வர வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
விரிவாக படிக்க:’கடலைத் தவிர எங்களுக்கு வேறொன்றும் தெரியாது’ : வாழ்வாதார சிக்கலில் காசிமேடு மீனவர்கள்
தென்னாப்பிரிக்காவில் காண்டாமிருக வேட்டைக்குச் சென்றவர் சிங்கத்துக்கு இரை
தென்னாப்பிரிக்காவில் உள்ள க்ரூகர் தேசியப் பூங்காவில், காண்டாமிருகங்களை வேட்டையாடச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் யானை ஒன்றால் நசுக்கிக் கொல்லப்பட்டுள்ளார்.
அவரது உடலை சிங்கக் கூட்டம் ஒன்று உண்டுவிட்டது. அவர் கொல்லப்பட்ட செய்தியை அவருடன் காண்டாமிருக வேட்டைக்குச் சென்றவர்கள் அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்தனர்.
வனத்துறை அதிகாரிகளுக்கு அவர் கொல்லப்பட்ட செய்தியை இறந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
தேடல் பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு மண்டையோடும், ஒரு ஜோடி டிரௌசர்களுமே வியாழனன்று கிடைத்தன.
தேசியப் பூங்கா அதிகாரிகள் இறந்தவரின் உறவினர்களுக்குத் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மக்களவைத் தொகுதி:
நீலகிரி மக்களவைத் தொகுதி நீலகிரி மாவட்டத்தில் மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்களான கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் பரவி விரிந்துள்ளது.
பெரும்பாலும் மலைகளை உள்ளடக்கிய இந்தத் தொகுதியில் சமவெளிகளும் கணிசமான அளவில் உள்ளன.
தேயிலைத் தோட்டங்களும், தேநீர்த் தூள் தொழிற்சாலைகளும் அதிக அளவில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் முக்கிய வருவாய் மற்றும் வேலைவாய்ப்புக்கான ஆதாரமாக இந்தத் தொழில்களே உள்ளன. தேயிலைத் தொழிலும் தற்போது சரிவைச் சந்தித்து லாபம் குறைந்து வருவதால், அந்தத் தொழிலில் இருந்து கணிசமானவர்கள் வெளியேறி வருகின்றனர். எனவே இது தொழிற்பிரச்சனையாக மட்டுமில்லாமல் வேலைவாய்ப்புப் பிரச்சனையாகவும் உருவெடுத்துள்ளது.
விரிவாக படிக்க: நீலகிரி: எழில் கொஞ்சும் மலைப் பகுதியின் அரசியல் நிலவரம் என்ன?
ஆறாவது முறையாகத் தோல்வி
இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தலைமையிலான பெங்களூருவின் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 2019ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் மீண்டும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
இந்தத் தொடரில் கோலியின் அணிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் உடனான இன்றைய தோல்வி தொடர்ந்து ஆறாவது முறையாக அடைந்த தோல்வியாகும்.
பெங்களூருவில் நடந்த இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதல் இன்னிங்சில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. சொந்த மைதானத்திலேயே களம் கண்டாலும் பெங்களூரு அணி இன்று அதிகமாக ரன்கள் குவிக்கவில்லை.
விரிவாக படிக்க:தொடர்ந்து ஆறாவது முறையாகத் தோல்வியைச் சந்தித்த விராட் கோலி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்