You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெரம்பூர் வேட்பாளர் மோகன்ராஜ்: உலக வங்கியில் தமக்கு ரூ.4 லட்சம் கோடி கடன் இருப்பதாக பிரமான பத்திரம் தாக்கல்
பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தமக்கு உலக வங்கியில் ரூ.4 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும், தன்னிடம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் பணம் இருப்பதாகவும், தம் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதுபோல தேர்தல் நடக்கும் சென்னை பெரம்பூர் தொகுதியில் ஜே. மோகன் ராஜ் என்பவர் சுயேச்சையாகப் போட்டியிடுவதற்கென வேட்புமனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். இந்த வேட்பு மனுவுடன் இணைத்து தாக்கல் செய்யும் படிவம் - 26ல், தன்னுடைய சொத்து விவரங்களைக் குறிப்பிட்டிருக்கும் மோகன் ராஜ், தன்னிடம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குப் பணம் இருப்பதாகக் கூறியிருக்கிறார். மேலும் உலக வங்கியில் நான்கு லட்சம் கோடி ரூபாய் அளவுக்குக் கடன் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
அவரது இந்த வேட்புமனு ஏற்கப்பட்டு, அவருக்கு பச்சை மிளகாய் சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எதற்காக இப்படி ஒரு வேட்பு மனுவைத் தாக்கல் செய்தீர்கள் என மோகன் ராஜிடம் கேட்டபோது, "வேண்டுமென்றேதான் அப்படிச் செய்தேன். இதற்கு முன்பாக வேட்பு மனுவில் தவறான தகவலை அளித்தால் அது கிரிமினல் குற்றமாக இருந்தது. ஆனால், 2014க்குப் பிறகு அதனை சிவில் குற்றமாக மாற்றிவிட்டனர். அதனால், யார் வேண்டுமெனாலும் தவறான தகவலை அளிக்க முடிகிறது. அதைச் சுட்டிக்காட்டும் வகையில்தான் அப்படிச் செய்தேன். என்னுடைய வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது" என்கிறார்.
மேலும் 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் இதேபோல வேட்புமனுவைத் தாக்கல் செய்து, அது ஏற்றுக்கொள்ளப்பட்டதைச் சுட்டிக்காட்டும் மோகன் ராஜ், அதற்குப் பிறகும்கூட யாரும் கண்டுகொள்ளவில்லை, தன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்.
மோகன் ராஜின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து, இது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்தில் முறையிடப் போவதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. "அவர் வேண்டுமென்றேதான் செய்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அதிகாரிகள் எவ்வளவு அலட்சியமாக வேட்புமனுக்களைக் கையாளுகிறார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்று" என்கிறார் அந்த இயக்கத்தைச் சேர்ந்த சந்திரமோகன்.
"அதேநேரம், ஆளுங்கட்சிக்கு வேண்டாத ஒரு நபரின் வேட்புமனுவைத் தள்ளுபடி செய்வதென்றால் அது உடனடியாக நடக்கிறது. அப்போது வேட்புமனுவில் உள்ள அம்சங்களைச் சரிபார்த்து குறைகளைக் கண்டுபிடிக்கிறார்கள். மற்ற தருணங்களில் ஏன் அப்படிச் செய்வதில்லை" என்கிறார் சந்திரமோகன்.
இம்மாதிரி தவறான தகவல்களை அளித்தால், வேட்பு மனுக்களை ஏன் நிராகரிப்பதில்லை என தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, "தேர்தல் அதிகாரிகளைப் பொறுத்தவரை வேட்புமனுக்களை நிராகரிக்கும் அதிகாரம் மிகக் குறைவாகவே இருக்கிறது. படிவத்தில் எல்லா இடங்களையும் பூர்த்தி செய்திருந்தால் அந்த மனுவை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். தவறான தகவல்கள் இடம் பெற்றிருந்தால் பிறகுதான் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும்" என்கிறார் அவர்.
இந்த வேட்புமனுவை ஏற்றுக்கொண்ட தேர்தல் நடத்தும் உதவி அதிகாரியைத் தொடர்பு கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி பலனளிக்கவில்லை.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்