You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஈரோடு மக்களவைத் தொகுதி: பெரியார் பிறந்த மண்ணில் தேர்தல் நிலவரம் என்ன?
- எழுதியவர், விக்னேஷ்.அ
- பதவி, பிபிசி தமிழ்
ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி அதிமுக வேட்பாளர் மணிமாறனைவிட 2,10,618 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
காவிரி கரையோரம் அமைந்துள்ள மேற்குத் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்று ஈரோடு.
பெரியார் பிறந்த ஊராகவும், மஞ்சள் மாநகரமாகவும் அறியப்பட்ட இந்த ஊர் இதுவரை நடந்துள்ள 16 பொதுத் தேர்தல்களில் முதல் தேர்தல், மூன்றாவது தேர்தல், 15வது மற்றும் 16வது தேர்தல்களில் மக்களவைத் தொகுதியாக இருந்துள்ளது.
ஈரோட்டை அண்மித்துள்ள கோவை மற்றும் திருப்பூர் தொகுதிகளைவிடவும் ஒப்பீட்டளவில் கிராமியத் தொழிற்சாலைகளை பரவலாகக் கொண்டது ஈரோடு தொகுதி.
முதல் பொதுத்தேர்தல் நடந்த சமயத்தில் ஈரோடு இரட்டை உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியாக இருந்தது. பெரியசாமி பொதுத் தொகுதிக்கும், பாலகிருஷ்ணன் தனித் தொகுதிக்குமான உறுப்பினர்களாக முதல் மக்களவையில் பங்காற்றினர்.
ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி), காங்கயம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு மக்களவைத் தொகுதியில் 7,07,239 ஆண்கள், 7,36,657 பெண்கள் மற்றும் 108 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்பட 14,44,004 வாக்காளர்கள் உள்ளனர்.
ஈரோடு தொகுதியின் பிரச்சனைகள்
'மஞ்சள் மாநகரம்' என்று அழைக்கப்படும் ஈரோடு மிகச்சமீபத்தில் ஒரு பெருமையைப் பெற்றுள்ளது. ஈரோடு மஞ்சள் புவிசார் குறியீட்டை பெற்றுள்ளது.
எனினும், மஞ்சள் மண்டிகளும், மஞ்சள் விற்பனைக்கான சந்தையும் வெளிமாநிலத்தவர்கள் கைகளில் அதிகம் இருப்பதாக நிலவும் சூழல் உள்ளது.
மஞ்சள் வேளாண்மை ஈரோட்டில் அதிகரிக்க முக்கிய பங்காற்றியது காலிங்கராயன் வாய்க்கால். அதில் கலக்கும் கழிவுநீரால், இதன் பாசனப் பகுதிகளில் விளையும் மஞ்சளுக்கு குறைவான விலையே கிடைக்கிறது.
வேளாண் தொழிலை நம்பியுள்ளவர்களுக்கு அடுத்தபடியாக கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களும் தொழிலாளர்களுமே ஈரோடு தொகுதியில் அதிகமான வாக்காளர்களாக உள்ளனர்.
போதிய வருவாய் இன்மையால் வேளாண்மையில் இருந்து மட்டுமல்லாது தறித் தொழிலில் இருந்தும் பல ஆயிரம் முதல் சில லட்சம் பேர் வரை வெளியேறுவது இங்கு தொடர்ந்து வருகிறது.
ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும், அரசியல் கட்சிகளின் கொடிகளின் வண்ணங்களைக் கரையாகக் கொண்ட வேட்டிகள் மற்றும் துண்டுகள் ஈரோடு நெசவாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் குறிப்பிடத்தக்க வருவாயைத் தரக்கூடியவையாக உள்ளன.
ஆனால், பஞ்சு விலை, நெசவுக் கூலி உள்ளிட்டவை அவர்களுக்கு பிற சமயங்களில் பிரச்சனையாகவே உள்ளன.
மஞ்சள், தென்னை, முருங்கை விவசாயம் ஆகியவற்றுக்கு கூடுதல் பாசன வசதிகள், அந்த விளைப்பொருட்களின் மதிப்புக்கூட்டுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றுக்கான கோரிக்கை நீண்டகாலமாக உள்ளது.
இந்தத் தொகுதியில், விசைத்தறி, தேங்காய் எண்ணெய் உற்பத்தி, அரிசி ஆலைகள், கோழிப்பண்ணைகள், பஞ்சாலைகள் உள்ளிட்டவை பரவலாக உள்ளன.
காவிரியில் மாசு
காவிரியின் ஒருபுறம் ஈரோடு மாநகராட்சி, இன்னொருபுறம் நாமக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளிபாளையம் நகராட்சி ஆகியவற்றின் கழிவுகள், சாயப் பட்டறையில் இருந்து முறைகேடாக வெளியேற்றப்படும் கழிவுகள், காவிரியின் கிளை நதிகளான நொய்யல் மற்றும் அமராவதி ஆகியவற்றில் கலக்கும் கழிவுகள் காவிரியை வந்து சேர்தல் ஆகியன ஈரோடு-குமாரபாளையம்-கரூர் பகுதிகளில் காவிரியில் மாசுபாடு அதிகரிக்கும் முக்கியக் காரணிகளாக உள்ளன.
இந்தப் பகுதிகளைக் கடந்துதான் காவிரி டெல்டா மாவட்டங்களுக்குச் சென்றடைகிறது.
சமீபத்திய தேர்தல்கள்
ஈரோடு 2009இல் மீண்டும் மக்களவைத் தொகுதியாக உருவாக்கப்பட்டபின் நடந்த தேர்தலில் மதிமுகவின் கணேசமூர்த்தி வென்றார். அப்போது மதிமுக அதிமுக கூட்டணியில் இருந்தது.
திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இரண்டாம் இடம் பெற்றார். கொங்குநாடு முன்னேற்றக் கழகம் என்று பின்னர் பெயர் மாற்றப்பட்ட கொங்குநாடு முன்னேற்றப் பேரவையின் பாலசுப்பிரமணியம் ஒரு லட்சத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடம் பெற்றார்.
2014 தேர்தலில் மதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய, தனித்து நின்ற அதிமுக மதிமுக வேட்பாளரை இரண்டாம் இடத்துக்குத் தள்ளியது. திமுக 2014இல் மூன்றாம் இடமே பெற்றது.
நோட்டாவும் 16வது மக்களவைத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்றது. மொத்தம் 16,268 வாக்காளர்கள் எந்த வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை என்ற தெரிவைச் செய்தனர்.
இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுகதான் இங்கு போட்டியிடுகிறது என்று அறிவிக்கப்படும் முன்னரே பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஈரோட்டில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரசிய தகவல்கள்
முதல் மக்களவையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பிரதிநிதியாகத் தேர்வான பாலகிருஷ்ணன் சுதந்திரப் போரில் சிறைக்கு சென்றவர்.
பழனியில் தாழ்த்தட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தனித்தனியாக இரு இலவச தங்கும் விடுதிகளை நடத்தியவர். 'பாட்டாளி' எனும் தமிழ் வார இதழை நடத்திய இவர், பழனி தண்டாயதபாணி சுவாமி கோயிலின் அறங்காவலராகவும் இருந்துள்ளார்.
மூன்றாவது மக்களவையின் பதவிக்காலத்தில் உறுப்பினராக இருந்த எஸ்.கே.பரமசிவன், கல்லூரி நாட்களில் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்றதற்காக கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்.
ஒருங்கிணைந்த கோயம்புத்தூர் மாவட்டத்தின் மாணவர் காங்கிரஸ் அமைப்பாளராக இருந்த இவர் பூமிதான இயக்கத்துக்கு தனது நிலத்தில் ஆறில் ஒரு பங்கை வழங்கினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்