இஸ்ரோவுக்கு நிதி வழங்காமல் இந்திரா காந்தி குடும்பம் ஆடம்பர வாழ்க்கை நடத்தியதா? #BBCFactCheck

    • எழுதியவர், உண்மை பரிசோதிக்கும் குழு
    • பதவி, பிபிசி நியூஸ்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தேவைகளை புறக்கணித்துவிட்டு இந்திரா காந்தியின் குடும்பம் ஆடம்பரமான வாழ்க்கையை நடத்தி வந்தது என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

செயற்கைக்கோளைத் தாக்கி அழித்துவிடும் தொழில்நுட்பத்தை இந்தியா வெற்றிகரமாக புதன்கிழமை பரிசோதித்ததாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி அறிவித்த பின்னர், இந்த புகைப்படம் இந்த செய்தியோடு பகிரப்பட்டு வருகிறது.

புதன்கிழமை இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதி திடீரென நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், இந்தியா ஒரு விண்வெளி வல்லரசாக ஏற்கனவே உருவெடுத்துள்ளது என்று கூறினார்.

இந்த நடவடிக்கையை வலதுசாரி சமூக ஊடகப் பக்கங்கள் பல புகழ்ந்துள்ளன. அதேவேளையில், வரவிருக்கும் 2019 மக்களவைத் தேர்தலில் அரசியல் ஆதாயம் பெறுவதற்கு நரேந்திர மோதி இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

இதன் விளைவாக, சில வலதுசாரி சமூக ஊடகப் பக்கங்கள் காங்கிரஸ் கட்சியை இலக்கு வைத்து, குறிப்பாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் குடும்பத்தை இலக்கு வைத்து தாக்கி பதிவிட தொடங்கின. காங்கிரஸ் கட்சியின் நீண்டகால ஆட்சியின்போது இந்தியாவின் விண்வெளி நிறுவனம் மற்றும் பிற விஞ்ஞானிகளை காங்கிரஸ் புறக்கணித்ததாக இந்த பதிவுகள் அமைந்தன.

அவர்களது கருத்தை நிரூபிப்பதற்கு, கீழ்காணும் படத்தை பயன்படுத்தியுள்ளனர். இது ஆயிரக்கணக்கான முறை பலராலும் பார்க்கப்பட்டுள்ளது.

மேலிருக்கும் புகைப்படத்தில் இஸ்ரோவின் முதலாவது செயற்கைக்கோளான "ஆப்பிள்" மாட்டு வண்டியில் எடுத்துச் செல்லப்படுகிறது.

கீழுள்ள புகைப்படத்தில் சிறியதொரு விமானத்தில் ராகுல் காந்தியின் பிறந்த நாள் கொண்டாடப்படுவது காட்டப்படுகிறது.

ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி, தாய் சோனியா காந்தி, பாட்டி இந்திரா காந்தி ஆகியோரும் இந்த புகைப்படத்தில் உள்ளனர்.

"இஸ்ரோ செய்த ராக்கெட்டை மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்றபோது, சிறியதொரு விமானத்தில் இந்திரா காந்தி குடும்பம் பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடியதை ஒருபோதும் மறக்காதீர்கள்," என்று இந்த புகைப்படத்தில் எழுதப்பட்டுள்ளது.

"ஆப்பிள்" செயற்கைக்கோள் மாட்டு வண்டியில் எடுத்துச்செல்லப்படும் புகைப்படமும், இந்திரா காந்தி குடும்பம் பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாடியதாக தெரிவிக்கப்படும் புகைப்படமும் சூழ்நிலைக்கு புறம்பாக பகிரப்பட்டுள்ளன.

ஆடம்பரமான வாழ்க்கை

பகிரப்படும் புகைப்படத்தில், "ஆப்பிள்" செயற்கைக்கோள் மாட்டு வண்டியில் எடுத்துச்செல்லப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் 1981ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது.

இந்த புகைப்படம் இஸ்ரோவின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இப்போதும் உள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களின் பணித்திட்டங்களுக்கு மாட்டு வண்டியை பயன்படுத்தியபோது, ஆடம்பரமான முறையில் பணத்தை செலவிட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியை இலக்கு வைத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

ஆனால், மூத்த அறிவியல் எழுத்தாளர் பல்லவ பாகலா, அப்போது இத்தகைய பணித்திட்டங்களுக்கு நிபுணர்கள் மாட்டு வண்டியை பயன்படுத்த விரும்பியே பயன்படுத்தியுள்ளதாக கூறுகிறார்.

அவர் பிபிசியிடம் கருத்து தெரிவிக்கையில், "அந்நேரத்தில், மின்காந்த குறுக்கீடு பிரதிபலிப்புகள் பற்றிய முழுமையாக புரிதல் இருக்கவில்லை. ஏராளமான எச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, எந்தவித மின்சார இயந்திரங்களையும் பயன்படுத்த விஞ்ஞானிகள் விரும்பாததால், மாட்டு வண்டியில் சுமந்து செல்ல முடிவு செய்திருந்தனர். இஸ்ரோவின் முன்னாள் தலைவர் என்னிடம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்," என்று தெரிவித்துள்ளார்,

இஸ்ரோவின் பணித்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அதனிடம் இருக்கும் மூலவளங்களை பற்றி பேசுகையில், "எந்தவொரு ஆளும் கட்சியாலும், குறிப்பாக எந்தவொரு பணித்திட்டத்தையும் நிறைவேற்றுவதற்கு இஸ்ரோ மூலவள பற்றாக்குறையை எதிர்கொள்ளவில்லை" என்று தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாக பல்லவ பாகலா கூறியுள்ளார்.

நேரு-காந்தி குடும்ப புகைப்படம்

இந்த புகைப்படத்தில், இந்திரா காந்தி குடும்ப உறுப்பினர்கள் விமானத்தில் இருப்பதுபோல தோன்றலாம். ராகுலுக்கு முன்னால் ஒரு கேக் உள்ளது.

1977ம் ஆண்டு ராகுலின் 7வது பிறந்தநாளின்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இது, இஸ்ரோ "ஆப்பிள்" செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்னதாக எடுக்கப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டபோது, இந்த குடும்ப புகைப்படம் எடுக்கப்படவில்லை என்பது இதன் மூலம் தெரியவருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :