காந்திநகர் தொகுதியில் அத்வானிக்கு பதிலாக அமித் ஷா - மாற்றம் சொல்லும் செய்தி

    • எழுதியவர், ரோக்ஸி கடேகர் சஹாரா
    • பதவி, பிபிசி, அகமதாபாத்

முந்தைய இந்துத்துவ தத்துவத்தின் ஆய்வுக்களம் குஜராத் என்றால், வாக்கெடுப்பு பிரச்சனையாக, வாக்கு திரட்டல் முதல் வளர்ச்சியின் வர்ணனை வரை எல்லா இந்துத்துவ நடவடிக்கைகளின் பரிசோதனை மையத்தின் ஆய்வு மாதிரியாக காந்திநகர் மக்களவைத் தொகுதி இருக்கிறது.

2019 மக்களவை தேர்தலில் காந்தி நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக எல்.கே. அத்வானிக்கு பதிலாக அமித் ஷாவை மாற்றியிருப்பது "பழைய பிராண்ட் இந்துத்துவா"-வில் இருந்து "புதிய பிராண்ட் இந்துத்துவா"வுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது என்கிறார் குஜராத்தை மையமாக கொண்டு பணியாற்றி வரும் பிரபல ஆய்வாளர் ஷாரிக் லாலிவாலா.

மக்களவை தேர்தலில் காந்தி நகரில் போட்டியிடும் வேட்பாளரை மாற்றியிருப்பதன் மூலம் அத்வானி "பழைய பிராண்ட் இந்துத்துவா"-வை பிரதிநிதித்துப்படுத்துபவராக வெளியேற்றப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக அத்வானியை விட தீவிர மற்றும் ஆக்ரோஷமான இந்துத்துவ தூதர் அமித் ஷா காந்திநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுபவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமித் ஷா மற்றும் நரேந்திர மோதியின் இந்துத்துவா, எல்கே. அத்வானி மற்றும் அடல் பிஹாரி வாஜ்பேயி-யின் இந்துத்துவா-வில் இருந்து வேறுபட்டது என்று ஷாரிக் லாலிவாலா கூறுகிறார்.

"வளர்ச்சியை குறிப்பிடும் இந்துத்துவ கொள்கையை அமித் ஷாவும், நரேந்திர மோதி வழங்கியுள்ளனர். ஆனால், பழைய பிராண்ட் இந்துத்துவ கொள்கையைவிட இவர்கள் உண்மையிலேயே அதிக தீவிர பண்புடையவர்கள்" என்கிறார் அவர்

1989ம் ஆண்டில் இருந்து, காந்திநகர் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யக்கூடிய தொகுதியாகவே இருந்து வருகிறது.

அடல் பிஹாரி வாஜ்பேயி, எல்.கே. அத்வானி, ஷங்கர்சிங் வாகேலா (பாரதிய ஜனதா கட்சியோடு இருந்தவரை) போன்ற முன்னிலை தலைவர்களோடு, காந்திநகர் முக்கிய பிரமுகர்களின் மக்களவை தொகுதியாக இருந்து வருகிறது.

1998ம் ஆண்டு தொடங்கி காந்திநகர் மக்களவை தொகுதியில் எல்கே. அத்வானி எளிதாக வெற்றிபெற்று வருகிறார்.

காந்திநகர் - வடக்கு, கலோல், சனாந்த், காட்லோடியா, வெஜல்பூர், நாரண்புரா மற்றும் சபர்மதி ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது காந்திநகர் மக்களவைத் தொகுதி.

இவற்றில் காந்திநகர் - வடக்கு சட்டமன்ற தொகுதியை மட்டும் தவிர, இதர ஆறு தொகுதிகளையும் பாஜக தன்வசம் வைத்துள்ளது. காந்திநகர் - வடக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சிஜே.சௌடா, காந்திநகர் மக்களவை தொகுதியில் அமித் ஷாவுக்கு எதிராக போட்டியிட கூடிய வேட்பாளர்களில் ஒருவராக நம்பப்படுகிறார்.

2008ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னதாக, சார்கெஜ் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தனது அரசியல் வாழ்க்கையை அமித் ஷா தொடங்கினார்.

அவரது வீடு பிரக்ரெதி கார்டனுக்கு அருகில் நாரண்புராவில் இருந்தது, 2008ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் சார்கெஜ் சட்ட மன்றதொகுதி நாரண்புரா, கல்கோடியா மற்றும் வெஜல்பூர் என மூன்றாக பிரிந்தது. நாரண்புராவில் போட்டியிட்டு அமித் ஷா வெற்றிபெற்றார்.

ஆனால், 2012ம் ஆண்டு குஜராத்தின் மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்வானார்.

காந்திநகர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியைவிட பாரதிய ஜனதா கட்சியின் கரங்களே ஓங்கியிருக்கிறது என நம்புவதாக கூறுகிறார் அரசியல் ஆய்வாளர் ஹெமண்ட் ஷா.

இங்கு பாஜக நன்றாக செயல்படவில்லை என்றால் குஜராத்தின் பிற பகுதிகளில் அதனால் சிறப்பாக செய்ய முடியாது என்று பொருள்படும் என்கிறார் இவர்.

இந்த மாநிலத்திலுள்ள செல்வாக்கு மிக்கவர்களை கொண்டுள்ள பகுதியாக காந்திநகர் மக்களவை தொகுதி விளங்குவதால், மாநிலம் முழுவதுமுள்ள வாக்காளர்களிடம் இந்த தொகுதி பாதிப்பை ஏற்படுத்த முடியும்.

"பாஜக-வுக்கு வாக்களிப்போரை புரிந்துகொள்ள வேண்டும் என்றால், பாஜக-வுக்கு வாக்களிப்போரின் முக்கிய தளமாக விளங்கும் காந்திநகர் மக்களவை தொகுதி பற்றி ஒருவர் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்" என்று ஹெமண்ட் ஷா கூறுகிறார்.

அகமதாபாத்தின் மேற்கு பகுதியில் இருந்தும், காந்திநகர் நகரத்திலும் பெரிய நகர்ப்புற குழும நிறுவனங்கள் இந்த தொகுதியில்தான் அமைந்துள்ளன.

காந்தி நகரின் மேற்கு பகுதியிலுள்ள நாரண்புரா, கல்கோடியா, வெஜல்பூரில் நகர்ப்புற நடுத்தர வர்க்க மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர்.

காந்திநகரில் வெற்றி நிச்சயம் என்று பாஜக நம்புகிறது. இந்த தொகுதியில் போட்டியே இருக்க போவதில்லை என்று பாஜக செய்தி தொடர்பாளர் பாரத் பாண்டியா கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி எவ்வாறு தயாராகியுள்ளது?

காந்திநகர் மக்களவை தொகுதியை காங்கிரஸ் கட்சி வெல்லும் அரசியல் சூழ்நிலை இப்போது இல்லை என்பதால், இதனை வெல்வதற்காக நேரத்தையும், வளங்களையும் வீணடிக்க வேண்டாம் என்பது ஆய்வாளர் ஷாரிக் லாலிவாலாவின் கருத்தாகும்.

ஆனால், காந்திநகர் தொகுதி பாஜகவுக்கு வெற்றி அளிப்பது உறுதியாக இருந்தால், ஏன் வலுவான மனிதரான அமித் ஷா அங்கு போட்டியிடுகிறார்? என்று கேள்வி எழுப்புகிறார் ஹெமண்ட் ஷா.

மக்களை சென்றடைகின்ற சரியான வேட்பாளரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் தவறு செய்யாவிட்டால் காந்திநகர் தொகுதியை காங்கிரஸ் வெல்லும் என்கிறார் அவர்.

இந்த தொகுதியில் ஆரோக்கியமான போட்டியை காங்கிரஸால் வழங்க முடியும் என்று அரசியல் ஆய்வாளர்கள் நம்பினாலும், தங்களின் தேர்தல் கள வியூகத்தோடு காங்கிரஸ் தலைவர்கள் இன்னும் தயாராகவில்லை.

பிபிசியிடம் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மதுசூதன் மிஸ்டிரி, "காந்திநகர் மக்களவை தொகுதி வேட்பாளரை தேர்வு செய்வதில் நான் இல்லை. ஆனால், காந்திநகரிலுள்ள சாதி மற்றும் அந்த சாதியின் வாக்குப்பங்கீட்டின் அடிப்படையில் காங்கிரஸ் அந்த தொகுதி வேட்பாளரை முடிவு செய்யும்" என்று கூறியுள்ளார்.

"காந்திநகரில் போட்டியிட சில பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தாக்கூர் சமூகத்தை சேர்ந்த யாரோ ஒருவருக்கு கட்சி இந்த தொகுதியை ஒதுக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.

"ஆனால், காந்திநகரில் ஆரோக்கியமாக போட்டியை நாங்கள் எதிர்கொள்வோம். சரியான வேட்பாளரை விரைவில் தேர்வு செய்வோம்" என்று காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாடியா கூறியுள்ளார்.

காந்திநகர் மக்களவை தொகுதி வரலாறு

இந்திய தேர்தல் ஆணைய தகவலின்படி, 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது, காந்திநகரில் 17 லட்சத்து 33 ஆயிரத்து 972 வாக்காளர்கள் இருந்தனர், கடந்த மக்களவை தேர்தல்களில் 65.15 சதவீதத்தினர் வாக்களித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :