You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மதுரை மக்களவை தொகுதி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வசமாகியது திருப்புமுனை தொகுதி
மதுரை மக்களவைத் தொகுதியில் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு. வெங்கடேசன் வெற்றி பெற்றுள்ளார்.
2019-ஆம் ஆண்டு மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்கள்
ஆர். ராஜசத்யன் - அதிமுக
சு. வெங்கடேசன் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
டேவிட் அண்ணாதுரை - அமமுக
பாண்டியம்மாள் - நாம் தமிழர்
அழகர் - மக்கள் நீதி மய்யம்
தமிழக அரசியலில் திருப்புமுனை நகரமாகவும், அரசியல் மாற்றத்தை தீர்மானிக்கும் நகராகவும் மதுரை கருதப்படுகிறது.
மதுரை வடக்கு, மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை கிழக்கு, மதுரை தெற்கு மற்றும் மேலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது மதுரை மக்களவை தொகுதி.
1951-52ல் நடந்த முதல் நாடாளுமன்ற தேர்தலில், மதுரை இரட்டை உறுப்பினர்களைக் கொண்ட தொகுதிகளாக இருந்தது. அதில் பொது தொகுதி உறுப்பினராக பாலசுப்ரமணியமும், தலித் தொகுதி உறுப்பினராக கக்கனும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக வென்றனர்.
மதுரை மக்களவை தொகுதியில் அதிகம் முறை (3) வென்றவர் ஏ.ஜி.எஸ். ராம்பாபு. இவர் இரண்டுமுறை இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாகவும், ஒருமுறை ஜி.கே. மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாகவும் இத்தொகுதியில் வென்றுள்ளார்.
பரபரப்பான அரசியல்வாதிகளாக கருதப்படும் சுப்பிரமணியன் சுவாமி, மு.க. அழகிரி உள்பட பலர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மதுரை நாடாளுமன்ற தொகுதி இது வரை
சென்னைக்கு அடுத்த நிலையில் மதுரையும், கோவையும் தமிழகத்தின் முக்கிய மாநகரங்களாக கருதப்பட்டாலும், சென்னையில் உள்ளது போன்ற பெரு நிறுவனங்களோ, கோவையை போன்று வேலைவாய்ப்பை உருவாக்கவோ மதுரையில் தொழிற்சாலைகள் இல்லை என்பது இத்தொகுதியில் உள்ள முக்கிய பிரச்சனைகளில் ஒன்று.
மேலும் கோடை காலங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, அதிக மக்கள்தொகையால் அதிகரித்துள்ள வீடுகளின் வாடகை, சுகாதார சீர்கேடுகள் போன்றவை மதுரையின் முக்கிய பிரச்சனைகளாக உள்ளன.
மதுரை மக்களவை தொகுதியை அதிக முறை வென்றது காங்கிரஸ் கட்சிதான். இத்தொகுதியை காங்கிரஸ் கட்சி எட்டு முறை வென்றுள்ளது.
அதேவேளையில், தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஆகியவை தலா ஒருமுறை மட்டுமே மதுரை நாடாளுமன்ற தொகுதியை வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
2014 தேர்தலில் வென்ற அதிமுக இம்முறை மதுரையை தக்கவைக்குமா அல்லது திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி அல்லது டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெல்லுமா என்பது அரசியல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மதுரையில் சித்திரைத் திருவிழா தேரோட்டமும் கள்ளழகர் எதிர்சேவையும் நடக்கும் ஏப்ரல் 18ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடக்குமென அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. நீதிமன்றத்திலும் இதுகுறித்து முறையிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்