நரேந்திர மோதி அரசு புதைத்துவிட்ட அதிரவைக்கும் வேலைவாய்ப்பு தரவுகள் - நாளேடு செய்திகள்

நாளேடுகளில் இன்று வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் - நரேந்திரமோதி அரசு புதைத்துவிட்ட அதிரவைக்கும் வேலைவாய்ப்பு தரவுகள்

இந்தியாவில் தொழிலாளர்கள் நிலை குறித்த ஆய்வு ஒன்றை இந்திய அரசு வெளியிடாமல் புதைத்துவிட்டதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கூறியுள்ளது. மேலும் ஆய்வு முடிக்கப்பட்டு இந்திய அரசால் இன்னும் வெளியிடப்படாமல் இருக்கும் தேசிய மாதிரி கணக்கெடுப்பு மையத்தின், குறிப்பிட இடைவெளிகளில் எடுக்கப்படும் தொழிலாளர்கள் நிலை குறித்த தரவுகள் குறித்து ஆராய்ந்துள்ள இந்நாளிதழ் இந்தியாவில் ஆண் தொழிலாளர்கள் எண்ணிக்கை சுருங்கியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

நகர பகுதிகளில் 2017-18 தரவுகளின்படி இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற்ற ஆண்களின் எண்ணிக்கை 28.6 கோடி மட்டுமே. இது 2011 -2012-ல் 30.4 கோடியாக இருந்திருக்கிறது.

1993-94க்கு பிறகு அதாவது கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் வேலைவாய்ப்பு பெற்ற ஆண்கள் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

நகர பகுதிகள் ஊரக பகுதிகள் என இரண்டிலும் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது இந்த தரவுகள் மூலம் தெரியவருகிறது.

கடந்த டிசம்பர் 2018-ம் தேதியே இந்த தரவு அறிக்கைக்கு ஆணையம் அனுமதி கொடுத்துவிட்ட நிலையில் அரசு இந்த வேலைவாய்ப்பு தரவு அறிக்கையை வெளியிடாமல் நிறுத்தி வைத்தது. இந்நிலையில் தேசிய புள்ளியில் ஆணையத்தின் செயல் தலைவர் பி.சி மோஹனன் மற்றும் இந்த ஆணையத்தின் மற்றொரு உறுப்பினர் ஜெ.வி.மீனாட்சி ஜனவரி மாத இறுதியில் பதவி விலகினர்.

ஊரக பகுதிகளில் பெண்கள் அதிகளவு வேலைவாய்ப்பை இழந்ததும், நகரப்பகுதிகளில் ஆண்கள் அதிகளவு வேலைவாய்ப்பை இழந்ததும் இந்த தரவுகள் மூலம் தெரியவருகின்றன.

ஊரக பகுதிகளில் 2011-12 மற்றும் 2017-18 இடையிலான காலகட்டத்தில் சுமார் 4.3 கோடி பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். மேலும் வேலைவாய்ப்பின்மை வீதம் 2011-2012ல் 2.2 சதவீதமாக இருந்தது. தற்போது 6.1 சதவீதாக அதிகரித்துள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது.

தினத்தந்தி - நீரவ் மோதிக்கு பிடி ஆணை

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்புடைய வழக்கில் நகை வியாபாரியும் தொழிலதிபருமான நீரவ் மோதி லண்டனுக்கு தப்பிச் சென்ற நிலையில் வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

சமீபத்தில் லண்டன் நீதிமன்றத்தில் நீரவ் மோதிக்கு பிடி ஆணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீரவ் மோதியை இந்தியாவிடம் ஒப்படைக்க லண்டனில் எடுத்துவரும் சட்ட நடவடிக்கைகளை தீவிரமாக கவனித்து வருகிறோம். அதற்குத் தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் செய்து வருகிறோம் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்ததாக அந்நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தினமலர் - நிர்மலாதேவி இன்று விடுதலை

நிர்மலா தேவிக்கு அவரது சகோதரர் விருதுநகர் நீதிமன்றத்தில் பிணை வழங்கியதையடுத்து இன்று விடுதலையாகிறார்.

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரியின் துணை பேராசிரியரான நிர்மலா தேவி மாணவிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்துவதற்கு அழைத்த விவகார கைது செய்யப்பட்டுள்ள வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்மலா தேவிக்கு பிணை வழங்க உத்தரவிட்டது.

பிணை கொடுப்பவர்களில் ஒருவர் ரத்த சொந்தமாகவும், ஒருவர் குடும்ப நண்பராகவும் 10 ஆயிரம் ரூபாய் சொத்து இருப்பவராக இருத்தல் வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நிர்மலாதேவி இன்று மாலை சிறையில் இருந்து விடுதலையாகிறார். அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்ட்டுள்ளதாக நிர்மலாதேவியின் வழக்குரைஞர் பசும்பொன் பாண்டியன் கூறுகிறார் என்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினமணி - கமலுடன் இணையும் செ.கு. தமிழரசன்

மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் மக்கள் நீதி மய்யக் கட்சியுடன் இணைந்து இந்திய குடியரசு கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் கூறியிருக்கிறார்.

நேற்று கமலை சந்தித்தபிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் மக்கள் நீதி மைய்யத்தின் டார்ச் லைட் சின்னத்தில் மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியும் சட்டப்பேரவை இடை தேர்தலில் மூன்று தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுளதாக தெரிவித்திருக்கிறார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். திமுக சந்தர்ப்பவாத கூட்டணி. மாற்று அரசியலுக்கான வடிகாலாக மக்கள் நீதி மய்யம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :