மனோகர் பாரிக்கர்: கோவா மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்து தகர்த்தவர்

    • எழுதியவர், பிரமோத் ஆச்சார்யா
    • பதவி, பிபிசிக்காக

மனோகர் பாரிக்கரின் இறப்பு கோவாவின் சமூக அரசியல் சூழலில் பல மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

இந்தியாவின் முதல் ஐஐடி பட்டதாரி முதலமைச்சர் பாரிக்கர். கோவாவின் ஆட்சி நிர்வாகத்தில் ஒரு அழிக்க முடியாத இடத்தை உருவாக்கியவர்.

நாட்டின் பிற பகுதிகளில் வலுவான இந்துத்துவா கொள்கையை பாஜக கடைபிடிக்கும் போது, அக்கட்சியை சேர்ந்த மனோகர் பாரிக்கர், மிதமான ஒரு கொள்கையை கடைபிடித்து கோவாவின் அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து சென்றார்.

அதிகமான மதச்சார்பற்ற கொள்கைகளை கடைபிடிக்கும் ஒரு மாநிலத்தில், அவர் அரசியல் செய்ய வேண்டியிருந்தது. அங்கு அவர் கொண்ட கொள்கையைக் காட்டிலும் பிராந்தியத்திற்கு ஏற்றார் போல் அவரை மாற்றிக் கொள்ளும் தேவையும் இருந்தது.

ஆனால் உத்தர பிரதேசம் போன்ற மாநிலத்தில் அவர் அரசியல் செய்ய வேண்டும் என்றால் இம்மாதிரியான தாராளவாத கொள்கையை கடைபிடிப்பாரா என்பது நமக்கு தெரியாது.

அதிகாரம் அனைவரையும் மாற்றும். மனோகர் பாரிக்கரையும் அது மாற்றியது.

அவர் தனது சொந்த கட்சியின் ஆதரவை பெற்ற அரசாங்கத்தை கலைத்து, கோவாவின் அதிகாரத்தை கைப்பற்றும் வாய்ப்பு கிடைத்த தருணத்திலும், மாநிலத்தின் ஸ்திரமற்றத்தன்மை மற்றும் ஊழலை ஒழிக்கும் ஒரு செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள லட்சியவாதியாகவும், நல்லவராகவும் தன்னைக் காட்டிக் கொண்டார்.

தனது கட்சியின் மீது மக்கள் நம்பிக்கையற்று இருந்த நிலையில், தனது தனிப்பட்ட கருத்துகளுடன் சேர்த்து புதிய கொள்கைகளை முன்வைத்தார்.

படித்த நடுத்தர வர்க்கத்தினர் இவரை நம்பத் தொடங்கினர். பாரிக்கர் அவர்களின் கதாநாயகரானார்.

அவருக்கு மேலும் ஒரு ஆதரவான சூழல் இருந்தது. அவரின் கட்சிக்குள் அவருக்கு போட்டியாக யாரும் இல்லை. கோவா சட்டசபைக்கு பாஜக கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர் ஆவார். மனோகர் பாரிக்கரின் ஐஐடி அனுபவம், அவரின் தைரியமான குணாதிசயம் என அனைத்தும் சேர்ந்து இந்தியாவின் அரசியல்வாதிகளுக்கு கிடைக்கும் அந்தஸ்த்தை பாரிக்கருக்கு வழங்கியது.

ஆனால் பாஜகவை சேர்ந்த கடும்போக்குவாதிகளை அவர் தள்ளியே வைத்தார். தீவிர வலதுசாரி கொள்கையை அவர் அங்கு கடைபிடிக்கவில்லை. இது கோவாவின் பாஜக, இங்கு விஷயங்கள் மாறுபட்டுதான் நடைபெறும் என்று தெரிவிப்பார்.

மோதியின் பெயரை முன்மொழிந்தார்

2014ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்கு நரேந்திர மோதியின் பெயரை முதலில் பரிந்துரைத்தவர் இவரே.

கோவாவில் நடைபெற்ற தேசிய நிர்வாகக் கூட்டம் ஒன்றில், நரேந்திர மோதியின் பெயரை பிரதமர் பதவிக்கும் முன்மொழிந்தார் மனோகர் பாரிக்கர்.

அவரை நான் அந்தக் கூட்டம் நடந்த அடுத்த நாள் சந்தித்தேன். "சில விஷயங்கள் தகுந்த சமயங்களில் சொல்லப்பட வேண்டும்" என நரேந்திர மோதியின் பெயர் முன்மொழியப்பட்டது குறித்து அவர் குறிப்பிட்டார்.

வெற்றியும் தோல்வியும்

ஐந்து வருட காலமாக எதிர்க்கட்சி அந்தஸ்த்தை பெற்றிருந்த பாஜக, 2012ஆம் ஆண்டு கோவா சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிப்பெற்றது.

அடுத்த நாள் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் நான் மனோகர் பாரிக்கரை கோவாவின் முக்கிய விடுதி ஒன்றில் சந்தித்தேன். அங்கு மேசையில் சாக்லேட்டுகளும், கேக்கும் இருந்தன. அதில் ஒன்றை எனக்கு அவர் அளித்தார். பின் உரையாடல் தொடங்கியது.

நான் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு, "நீங்கள் இந்த தருணத்திற்காக ஏழு ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்தீர்கள்" என்று தெரிவித்தேன்.

"முதலில் நான் பொறுமையற்று இருந்தேன். காங்கிரஸ் அரசை வீழ்த்த நான் முயற்சி செய்திருக்கக் கூடாது. அதன் பிறகு இந்த மாநிலம் ஒரு பிரஷர் குக்கரை போன்று உருவாகி வருவதை நான் உணர்ந்தேன். ஆவியுடன் அந்த பிரஷர் குக்கர் வெடிக்கும் வரை நான் காத்திருக்க முடிவு செய்தேன். அதன்பின் சட்டசபையில் வெளியிலும் உள்ளேயும் நான் எனது பணிகளை தொடங்கினேன்" என்று அவர் பதிலளித்தார்.

அதே இரவு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் என்னை அழைத்தார். "அவர் கொடுத்த வாக்குறுதிகளில் பாதியை நிறைவேற்றினாலும் கூட அடுத்த 15 வருடங்களுக்கு மனோகர் பாரிக்கரை பதிவியிலிருந்து அகற்ற முடியாது" என்று என்னிடம் தெரிவித்தார்.

ஆனால் அடுத்த ஐந்து வருடங்கள், எப்படி சிறப்பாக பிரசாரம் செய்ய வேண்டும், எப்படி அதிகாரத்திற்கு வர வேண்டும், பின் எப்படி அது அனைத்தையும் கலைக்க வேண்டும் என்பதற்கு பாடமாக இருந்தது.

அவரின் ஜனரஞ்சக திட்டங்கள் மாநிலத்தின் கடனை மூன்று மடங்காக உயர்த்தியது.

அவர் கொடுத்த முக்கிய வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் மிக மோசமாக தோல்வியடைந்தார்.

தனது வாக்குறுதிகளை எல்லாம் காப்பாற்ற முடியாமல் நிலை கையைவிட்டு போகும் சூழலில், பிரதமர் நரேந்திர மோதி தனது அமைச்சரவையில் பாதுகாப்பு துறை அமைச்சரக்கு பாரிக்கரை அழைத்தார்.

டெல்லியில் தயக்கம்

மனோகர் பாரிக்கரை மிகவும் நம்பிய பிரதமர் மோதி, அவரை டெல்லிக்கு அழைத்தார். ஆனால், தான் அங்கு ஒரு தீண்டத்தகாதவர் போலவே உணர்ந்தார் பாரிக்கர். பாதுகாப்பு அமைச்சராக கிடைத்த வாய்ப்பை ஏற்க தயக்கம் காட்டிய அவர், கோவாவின் முதலமைச்சராக வந்த முதல் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்.

முதலில் இவர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்து செயல்பட்டது வெகுவாக பாராட்டப்பட்டாலும், இவர் பதவியில் இருந்தபோதுதான் சர்ச்சைக்குரிய ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது. உரி தாக்குதலுக்கு பிறகு இவருக்கு பெருமை வந்து சேர்ந்தாலும், டெல்லியில் இருக்க அவருக்கு விருப்பமில்லை. டெல்லி அரசியலின் இரக்கமற்ற தன்மையா, அல்லது அவரது அமைச்சகத்தை நிர்வகிக்க போதிய திறமையில்லையா என்று தெரியவில்லை, மீண்டும் கோவாவுக்கு திரும்புவதையே தேர்ந்தெடுத்தார் பாரிக்கர்.

ரஃபேல் ஒப்பந்தத்தின் ஆவணங்கள் இவரது படுக்கையறையில் இருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. எனினும், ரஃபேல் ஒப்பந்தத்தில் இவருக்கு நேரடி தொடர்பு உள்ளது நிரூபிக்கப்படவில்லை என்றாலும், இந்த வழக்கு இவரது மரணத்திற்கு பின்னரும் தொடரும்.

அலுவலகத்தில் நோயாளியாக இருந்த பாரிக்கர்

2017ஆம் ஆண்டு கோவா சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. எனினும், பாரிக்கர் சில பொறுப்பற்ற நகர்வுகள் செய்து, பொது ஆணைக்கு எதிராக கூட்டணி அமைத்து அம்மாநிலத்தில் ஆட்சி அமைத்தார். வெற்றிகரமாக ஆட்சி அமைத்தாலும், பல தொண்டர்களை அவர் இழந்தார்.

2000-2002, 2002-2005, 2012-2014 என தான் முதலமைச்சராக பதவியேற்ற மூன்று முறையும் முழுமையாக அவர் பதவியில் நீடிக்க முடியவில்லை. தற்போதும் அப்படிதான். ஆனால், இம்முறை வாழ்க்கை அவருக்கு துரோகம் செய்துவிட்டது.

தன் இறுதி மூச்சு வரை, அவர் ஏன் முதல்வராக பதவியில் இருந்தார் என்று பலரும் வியப்படையலாம். அவர் கடுமையாக நோய்வாய்பட்டிருந்தார். கடைசி நாட்களை அவரது குடும்பத்துடன் அவர் செலவழித்திருக்கலாமே? பலவீனமாக இருந்தபோதும் ஏன் பொது வெளியில் வந்தார்? மாநிலத்திற்கு நன்மை செய்திருக்கக்கூடிய வேறு ஒரு நபருக்கு வழி விட்டிருக்கலாமே?

கோவாவில் அவரது கட்சி சுக்குநூறாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், தற்போது இரக்கமே இல்லாமல் விலகிவிட்டார் பாரிக்கர். கோவாவுக்கு சர்வதேச திரைப்பட விழாவை கொண்டு வந்தது இவர்தான். அதுமட்டுமல்லாது, கோவா மாநில அந்தஸ்து பெற்றதில் இருந்து பெரும் அளவிலான உள்கட்டமைப்பு மேம்பாடுகளை பாரிக்கர் மேற்கொண்டுள்ளார்.

2012ஆண்டு, நேர்காணல் ஒன்றில் என்னிடம் பேசிய அவர், அப்போது தனது முதலமைச்சர் காலம் முடிவடைந்தவுடன் தீவிர அரசியிலில் இருந்து விலக விரும்புவதாக தெரிவித்தார். எனினும், இறுதிவரை அவர் பதவியில் இருந்தார். அவர் முரண்பாடான ஒரு மனிதர். கோவாவுக்கு நம்பிக்கை அளித்து, அதை அவரே எடுத்துக் கொண்டும் போய்விட்டார்.

போய் வாருங்கள் பாரிக்கர்.

(பிரமோத் ஆச்சார்யா, பனாஜியில் உள்ள புரூடண்ட் நியூஸ் தொலைக்காட்சியின் ஆசிரியர் ஆவார். இக்கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது அவரது தனிப்பட்ட கருத்துகள்)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :