You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
''மக்களவை தேர்தலின் போது இடைத்தேர்தல் நடத்துவதால் சிக்கல் இல்லை''
தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு, 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்துவதால், தேர்தல் ஆணையத்திற்கும், வாக்காளர்களுக்கும் எந்தவித சிரமமும் இருக்காது என ஓய்வு பெற்ற தேர்தல் ஆணையர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், பல மக்களவை தேர்தல்களின்போது சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன என்பதால், தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்துவதில் சிக்கல்கள் இருக்காது என்கிறார்கள் தேர்தல்களில் பணியாற்றிய அதிகாரிகள்.
இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய என்.கோபால்சாமியிடம் கேட்டபோது, "தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் வேளையில் ஆந்திரம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில், அனைத்து தொகுதிகளுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகின்றன என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்" என்கிறார்.
''தமிழகத்தில் வெறும் 18 தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அண்டை மாநிலமான ஆந்திரா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுகிறது என்பது முக்கியம். தமிழகத்தில் மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலின்போது , 18 தொகுதிகளில் தேர்தல் நடத்துவதில் தேர்தல் ஆணையத்திற்கு எந்த பிரச்னையும் இல்லை. இந்தியாவில் தொடக்க காலத்தில் மக்களவை மற்றும் சட்டமன்றதேர்தல் இரண்டும் ஒரே நேரத்தில்தான் நடைபெற்றன. பிந்தைய காலங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஆட்சி கவிழ்ப்பு மற்றும் ஸ்திரமற்றதன்மை ஆகியவற்றால் இரண்டு முறை தேர்தல் நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டது,''என்றார்.
இரண்டு தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் வாக்காளர்களுக்கு நன்மை என்று கூறும் கோபால்சாமி, மக்களவை தேர்தல் நடைபெறும் அதே வளாகத்தில், இடைத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறும் என்பதால் வாக்காளர்களின் நேரம் மிச்சமாகும் என்கிறார்.
''ஒரே நேரத்தில் இரண்டு தேர்தலுக்கும் வாக்காளர்கள் ஓட்டு போடமுடியும் . ஒரே மையத்தில் இரண்டு வாக்களிப்பு இயந்திரங்களும் இருக்கும் என்பதால், வாக்காளர்கள் எளிதாக வாக்களிக்கமுடியும்,''என்றார்.
மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறுவதால் அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவு குறையும் என்ற கருத்தை முன்வைக்கிறார் முன்னாள் தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா.
''இடைத்தேர்தல் என்றாலே, பணபலம் மற்றும் செல்வாக்கு பொருந்திய தலைவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற அதிக செலவு செய்வார்கள். தற்போது இரண்டு தேர்தலுக்கும் செலவு செய்யவேண்டும் என்பதால், எல்லா அரசியல் கட்சிகளும் செலவைக் கட்டுப்படுத்துவார்கள். ஒரே நேரத்தில் இரண்டு தேர்தலுக்கும் வாக்களிப்பதால், வாக்காளர்களுக்கும் எளிதாக இருக்கும்,''என்றார்.
மேலும் தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்துவது குறித்து கேட்டபோது, ''அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் நடந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி வழக்கு நடந்து வருவதால், 18 தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. வழக்கின் முடிவில் தேர்தல் முடிவு சரி என்றோ, வழக்கு போட்ட நபருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், தற்போது தேர்தல் நடத்துவதால் எந்த பயனும் இல்லை என்பதால், மூன்று தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது,''என்றார் நரேஷ் குப்தா.
மக்களவை தேர்தல் முடிவோடு , 18 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலின் முடிவு ஆளும் கட்சிக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்ற கருத்தும் பொதுத்தளங்களில் விவாதிக்கப்பட்டுவருகிறது.
அரசியல் விமர்சகர் ஆழி செந்தில்நாதனிடம் இடைத்தேர்தலின் முக்கியத்துவம் பற்றி கேட்டோம்.
"18 தொகுதிகளில் திமுக எல்லா தொகுதிகளையும் வென்றால் மட்டுமே அதிமுக வட்டாரத்தில் தற்போதைய தலைமைமீது அதிருப்தி ஏற்படும்" என்கிறார் ஆழி செந்தில்நாதன்.
''18 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றிபெற்றால், தற்போது அதிமுகவில் இருப்பவர்கள், டிடிவி அணியை பற்றி யோசிப்பார்கள். ஆனால் அதிமுக மற்றும் திமுக சரிபாதியாக வெற்றி பெற்றால், இடைத்தேர்தல் வெற்றி எந்தவிதத்திலும் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்காது,''என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :