You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஃபேல் குறித்த விசாரணைக்கு பிரதமர் மோதி ஏன் தயாராக இல்லை? - ராகுல் காந்தி கேள்வி
"இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை காணவில்லை, விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை காணவில்லை, ஜிஎஸ்டியால் பல வணிகங்களை காணவில்லை, தற்போது ரஃபேல் ஆவணங்களையும் காணவில்லை" என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
எல்லாவற்றையும் காணாமல் போக செய்ய வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடப்பட்டுள்ளன என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று தெரிவித்ததை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஆவணங்கள் திருடப்பட்டதாக கூறுகிறார்கள் என்றால், அப்போது ஆவணங்கள் இருப்பது உண்மைதானே என்று கேள்வி எழுப்பினார்.
"காணாமல் போன ஆவணங்கள் குறித்து விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், 30 ஆயிரம் கோடி ரூபாய் திருடியவர் குறித்து விசாரிக்க அவர்கள் தயாராக இல்லை. ஒப்பந்தம் செய்வதற்காக நியமிக்கப்பட்டக்குழு பேச்சுவார்த்தை நடத்தியபோது, பிரதமர் சார்பாகவும் பேச்சுவார்த்தை நடந்ததற்கு ஆதாரம் உள்ளது. அதை குறித்தும் அவர்கள் விசாரிக்கவில்லை."
பிரதமர் நரேந்திர மோதியை பாதுகாக்க அனைத்தும் செய்யப்பட்டுவிட்டது என்றும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மோதி குற்றம் ஏதும் செய்யவில்லை என்றால், ஏன் அவர் விசாரணைக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பிய ராகுல், நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க ஏன் மோதி மறுக்கிறார் என்றும் கேட்டுள்ளார்.
தைரியமாக இருப்பதற்காக ஊடகங்கள் தண்டிக்கப்படுகின்றன. நரேந்திர மோதியை எதிர்த்து நிற்க அவர்களுக்கு தைரியம் இருப்பது குறித்து பெருமைப்படுவதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
இந்தியாவில் பிரச்சனை என்னவென்றால், பிரதமர் மோதியை எதிர்ப்பவர்கள் மீதுதான் கிரமினல் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
ஆவணங்கள் திருடப்பட்டதா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, நீதி காக்கப்பட வேண்டும். நீதி வழங்குவது அரசு மற்றும் நீதிமன்றத்தின் கடமை என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார்.
வழக்கு என்ன?
பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க, பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றன.
மேலும் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், ரஃபேல் ஒப்பந்தத்தில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை என கடந்த டிசம்பர் 14-ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது தான் ஆவணங்கள் திருடப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.
ஒப்பந்தத்தின் பின்னணி
முதலில் 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு 2007ம் ஆண்டு இந்த ஒப்பந்த பேச்சுவார்த்தை ஆரம்பித்தது.
2011ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இருந்தபோது, டஸ்ஸோ ஏவியேசன் (டஸ்ஸோ பிரான்ஸ் நிறுவனம்) மிகவும் குறைவான தொகையில் விண்ணப்பம் செய்திருந்ததால் அவர்களிடம் வேலையை ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், அந்த பேச்சுவார்த்தை முழுமை அடையவில்லை. ஹெச்.ஏ.எல் எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் லிமிடெட் நிறுவனம் 108 போர் விமானங்களை இந்தியாவின் பெங்களூருவில் தயாரிக்கும். 18 போர் விமானங்கள் பறக்கக்கூடிய அளவில் பிரான்சில் இருந்து நேரடியாக வழங்கப்படும் என்ற நிலையில் பேச்சுவார்த்தை தொடர்ந்து வந்தது. அதுவொரு வணிக ஒப்பந்தம் என்று கூறப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்