இந்திய விமானப்படை தாக்குதல்: அமித் ஷா சொல்வது உண்மையா? ராணுவம் சொல்வது உண்மையா?

பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது முகாமை குறிவைத்து இந்திய விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் 250 பேர் கொல்லப்பட்டனர் என அகமதாபாத்தில் நேற்று பாஜக தலைவர் அமித் ஷா பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

என்டிடிவி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் அமித்ஷா பேசும் காணொளியும் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சேதாரம் என்ன? எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்ற கேள்விக்கு இந்திய அரசு இதுவரை அதிகாரபூர்வமாக பதிலளிக்கவில்லை.

பிபிசி சுயாதீனமாக எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை உறுதிப்படுத்தவில்லை.

இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பர எல்லைத் தாண்டி விமானத் தாக்குதல் நடத்திய நிலையில், மார்ச் 1ஆம் தேதி அன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர் இந்திய முப்படைகளின் பிரதிநிதிகள்.

அப்போது, இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் பாலகோட்டில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளத்தின் மீது நடத்தியதாக கூறப்பட்ட தாக்குதலில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த இந்திய விமானப்படையின் ஏர் வைஸ் மார்ஷல் ஆர்.ஜி.கே.கபூர், விரும்பிய இலக்கு தாக்கப்பட்டது. ஆனால், எத்தனை பேர் இறந்தார்கள் என்பது தெரியவில்லை என்றார்.

''தமது படைகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தி பழிவாங்கிய நாடுகள் வரிசையில் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றுடன் இந்தியாவும் இணைந்துள்ளது என குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோதியின் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கான கூட்டத்தில் அமித் ஷா பெருமிதப்பட்டுள்ளார்.'' என்கிறது தினத்தந்தி நாளிதழின் செய்தி.

இந்திய ஆயுதப்படையின் துணிச்சலை எதிர்க்கட்சிகள் சந்தேகிக்கின்றன என்றும் அப்போது அமித் ஷா குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

''விமானப்படை தாக்குதல் தொடர்பான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என மம்தா கோருகிறார். இந்த தாக்குதல் அரசியலாக்கப்படுகிறது என்கிறார் ராகுல் காந்தி. தாக்குதல் விவகாரத்தில் விசாரணை தேவை என்கிறார் அகிலேஷ் யாதவ். எதிர்க்கட்சி தலைவர்களின் இக்கருத்துக்கள் பாகிஸ்தானை மகிழ்ச்ச்சியடைய வைத்துள்ளன. இதற்காக எதிர்க்கட்சி தலைவர்கள் வெட்கித் தலை குனிய வேண்டும். விமானப்படை தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோதியை பாராட்டாமல் இருந்தாலும் பரவாயில்லை எதுவும் பேசாமல் அமைதியாக இருங்கள்'' என அமித் ஷா கூறியுள்ளார்.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் அலுவாலியா கடந்த வாரம் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, இந்திய விமானப்படை தாக்குதலில் எத்தனை பேர் இறந்தார்கள் என பாஜக செய்தி தொடர்பாளரோ அல்லது அமித் ஷாவோ கூறியிருகிறார்களா? அரசின் அறிக்கைதான் எனது நிலைப்பாடு என கூறியிருந்தார்.

''எத்தனை பேர் இறந்தார்கள் என்பது குறித்து விவரம் தெரியவில்லை என ராணுவம் கூறுகிறது ஆனால், அமித் ஷா 250 பேருக்கு மேல் இறந்ததாக சொல்கிறார். ராணுவம் பொய் சொல்லாது. ஒட்டுமொத்த நாடும் ராணுவத்துக்கு துணை நிற்கும். ஆனால், பாஜக ஆர்மிக்கு எதிராக நிற்கும்'' என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அபிநந்தன் இந்திய எல்லையில் கால் பதித்த தருணம்| Wing Commander Abhinandan entered into India |

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :