அபிநந்தனை சந்தித்தார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்

நேற்று பாகிஸ்தான் இந்தியாவிடம் விங் கமாண்டர் அபிநந்தனை ஒப்படைத்த பின்னர் முதல் முறையாக இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் சந்தித்துள்ளார்.

இந்திய விமானப் படை தலைவருடனான பிரத்யேக தனி சந்திப்பில், தனக்கு என்ன நேர்ந்தது என்பதை அபிநந்தன் அவரிடம் விளங்கியிருப்பார் என்று நம்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர் என ஏ என் ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தினர் தம்மை நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள் என்றும், அவர்கள் நடத்தை மிகவும் தொழில்முறையுடன் இருந்தது என்றும் பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் கூறியுள்ளார்.

அவர் இவ்வாறு கூறும் காணொளியை பாகிஸ்தான் ஊடகங்கள் ஒளிபரப்பி வருகின்றன.

அந்தக் காணொளியில், தாம் ஓட்டி வந்த விமானம் சுடப்பட்டதாகவும், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கோபமாக இருந்த மக்கள் கூட்டத்தினரிடம் இருந்து தம்மை மீட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ்தான் தரப்பால், வாகா - அட்டாரி எல்லையில் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தியா அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட்ட உடனேயே அபிநந்தனுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியத் தலைநகர் டெல்லியில் ராணுவ அதிகாரிகள் அவருக்கு நடந்தவை குறித்து கேட்டறிந்தனர்.

இந்த வார இறுதியில் அவர் குடும்பத்தினரிடம் அபிநந்தன் மீண்டும் இணைக்கப்படுவார் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய அதிகாரிகளிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்படும்போது அவரை வரவேற்க ஏராளமான இந்தியர்கள், இந்தியக் கொடி, இசைக் கருவிகள் உள்ளிட்டவற்றுடன் அட்டாரி பகுதியில் கூடியிருந்தனர்.

இந்திய விமானப்படையை சேர்ந்த விங் கமேண்டர் அபிநந்தனை பாகிஸ்தானில் உள்ள இலக்குகள் மீதான தாக்குதல் நடவடிக்கைக்கு பின்னர் காணவில்லை என்று புதன்கிழமையன்று இந்திய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அமைதி நோக்கத்துடன் அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று வியாழனன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.

பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் வெள்ளிக்கிழமை இரவு 9.23 மணியளவில் இந்திய எல்லைக்குள் நுழைந்தார்.

விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அவரின் தைரியத்தை பார்த்து இந்தியா பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அபிநந்தனின் வீரம் நம் அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளதாக இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: