You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாதியை மீறி நடந்த காதல் திருமணம் - அடித்து நொறுக்கப்பட்ட தலித் குடியிருப்பு
நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - அடித்து நொறுக்கப்பட்ட தலித் குடியிருப்பு
தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆனந்தூர் எனும் கிராமத்தில் தலித் இளைஞர் ஒருவர் சாதி இந்துப் பெண் ஒருவரை, திருமணம் செய்து கொண்டதால், அவர் வசித்து வந்த தலித் குடியிருப்பில் 30 வீடுகள், நான்கு வாகனங்கள் மற்றும் பிற சொத்துகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்த அந்த தம்பதி கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டு, ஊரைவிட்டு வெளியேறியது.
புதன்கிழமை காலை சாதி இந்து ஆண்கள் சுமார் 300 பேர், ஒன்பது மணியளவில் குடியிருப்புக்குள் நுழைந்து தாக்கத் தொடங்கியதாகவும், அது 10.30 மணி வரை தொடர்ந்ததாகவும் உள்ளூர்வாசி ஒருவர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறியுள்ளார்.
தலித் குடியிருப்பு தாக்கப்பட்டபோது நான்கு வயது குழந்தை ஒன்றும் காயமடைந்ததது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அங்கு இப்போது சுமார் 200 காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். முக்கியக் குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்கிறது அந்தச் செய்தி.
தினத்தந்தி: ''நிர்மலா தேவி வழக்கு : சிபிசிஐடி விசாரணையில் திருப்தி இல்லை'' - சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாக பேராசிரியை நிர்மலாதேவி மீது தொடரப்பட்ட வழக்கில். இச்சம்பத்தில் தொடர்புடைய பலரை தப்பிக்கவைக்கும் வகையில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகையை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். எனவே ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கு விசாரணையின்போது, ''நிர்மலா தேவியை கைது செய்து ஒரு வருடம் ஆகப்போகிறது அவரை ஜாமீனில் விடுதலை செய்யவில்லை அவரை வெளியே விடுவதில் தமிழக அரசுக்கு தயக்கம் என்ன? ஆடியோவில் உயர் அதிகாரிகள் என்றெல்லாம் வருகிறது அதன்படி உயர் அதிகாரிகளிடம் விசாரிக்கப்பட்டதா? நிர்மலா தேவி விவகாரம் குறித்த சந்தானம் கமிட்டியின் அறிக்கையின் தற்போதைய நிலை என்ன? சிபிசிஐடி விசாரணையில் திருப்தி இல்லை ஆகவே ஸ்ரீ வில்லிபுத்தூர் நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதிக்கிறோம்'' என நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டதாக தினத்தந்தி நாளிதழின் செய்தி கூறுகிறது.
தினமணி - இரட்டை இல்லை சின்னம் வழக்கு - இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரின் அதிமுக அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம். இதை எதிர்த்து அமமுக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இம்மனுக்கள் கடந்த 8-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், எழுத்துப்பூர்வ வாதங்களை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில் இன்று நீதிபதிகள் ஜி எஸ் சிஸ்தானி, சங்கீதா தீங்கரா சிக்கல் ஆகியர் அடங்கிய அமர்வு பிற்பகலில் தீர்ப்பு வழங்கஉள்ளதாக டெல்லி உயர்நீதிமன்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினகரன் - ''தமிழகத்தில் மக்களவை தேர்தல் செலவுக்கு 414 கோடி வேண்டும்''
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னை தலைமை செயலகத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை இல்லை என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது எனினும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 200 கம்பெனி துணை ராணுவ வீரர்களை வரவைக்கலாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடியில் ஆசிரியர்கள் மட்டுமின்றி மற்ற அரசு ஊழியர்களையும் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைளை பின்னர் ஆலோசிப்போம். தமிழகத்தில் மக்களவை தேர்தல் செலவுக்காக 414 கோடி வேண்டும் என தமிழக அரசிடம் தேர்தல் ஆணையம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்திருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்