You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தவறான கொலை குற்றச்சாட்டு: 38 ஆண்டு சிறையில் கழித்தவருக்கு 150 கோடி நிவாரணம் மற்றும் பிற செய்திகள்
தவறான கொலை குற்றச்சாட்டிற்காக 38 ஆண்டுகளாக சிறையில் கழித்தவர் நிரபராதி என்று தெரிய வந்ததால், அவரை விடுதலை செய்ததுடன், 21 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது 150 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடந்துள்ளது.
தற்போது 71 வயதாகும் கிரேக் கோலே என்னும் அந்த நபர் தனது முன்னாள் தோழி மற்றும் அவரது மகனை கொலை செய்ததாக கூறி கடந்த 1978ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இருந்தபோதிலும், தான் குற்றமற்றவர் என்பதை கிரேக் தொடர்ந்து உணர்த்தி வந்ததால், அவரது வழக்கு மீண்டும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது, அவரது டிஎன்ஏ மாதிரியின் மூலம் இந்த கொலை சம்பவத்துக்கும் அவருக்கும் தொடர்பில்லை என்று தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டார்.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இத்தனை நீண்ட காலத்திற்கு பிறகு, ஒருவர் விடுவிக்கப்படுவது கலிஃபோர்னியாவின் வரலாற்றில் இதுவே முதல் முறையாக இருக்குமென்று கருதப்படுகிறது.
இந்நிலையில், நீதித்துறையின் சார்பில் இழைக்கப்பட்ட தவறை மாற்றமுடியாவிட்டாலும், அவருக்கு நிவாரண தொகையை அளிப்பதன் மூலம் இந்த வழக்கை முடித்து வைக்க விரும்புகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
பா.ஜ.க. கூட்டணியில் நீடிக்கிறதா புதிய தமிழகம்?
பாரதீய ஜனதாக் கட்சியுடன் நெருக்கமாக இருந்துவந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, தேவேந்திர குல வேளாளர் இனத்தை பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றுவோம் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கும் கட்சியுடன்தான் கூட்டணி என அறிவித்திருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே தேவேந்திர குல வேளாளர் மக்களை இட ஒதுக்கீட்டிற்கான பட்டியல் இனத்திலிருந்து நீக்க வேண்டுமென கோரி வருகிறார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி. கடந்த சில மாதங்களாக பாரதீய ஜனதாக் கட்சியுடனும் நெருக்கமாக இருந்துவந்தார். இதனால், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கட்சி, பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறுமென எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் திங்கட்கிழமை மாலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கிருஷ்ணசாமி, அறிக்கை ஒன்றை செய்தியாளர்களிடம் அளித்தார்.
பாமக-அதிமுக கூட்டணி: மைத்துனர் விமர்சனத்தால் மனம் நொந்த அன்புமணி
தங்களுடைய கோரிக்கைகளை ஏற்பதாகச் சொன்னதால்தான் அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்ததாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.
திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது எனச் சொல்லிவந்த பாட்டாளி மக்கள் கட்சி, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது. இதையடுத்து அக்கட்சி மீது கடுமையான விமர்சனங்கள் சமூகவலைதளங்களில் முன்வைக்கப்பட்டன. அந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
2011ல் இந்த இரு திராவிடக் கட்சிகளுடன் செல்ல மாட்டோம் என்று சொன்னது உண்மைதான். அப்போது கலைஞர், ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களும் இருந்தார்கள். ஆனால், அதைவிட முக்கியம் தமிழக உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என்பதை முக்கியமாக பார்த்தேன். இந்த முடிவெடுத்து 8 ஆண்டுகளாகிவிட்டன. ஆனால், அதற்கு ஏதாவது சிறு அங்கீகாரமாவது கிடைத்ததா?
ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற இந்தியாவில் எடுக்கப்பட்ட ஆவணப்படம்
91வது 'அகாடமி அவார்ட்ஸ்' எனப்படும் ஆஸ்கர் விருதுகள் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரிலுள்ள ஹாலிவுட்டில் நடைபெற்று வருகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியான ஆயிரக்கணக்கான திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க வகையில் மக்களிடையே வரவேற்பையும், சமூகத்தில் தாக்கத்தையும் ஏற்படுத்திய திரைப்படங்கள், நிபுணர்கள் குழுவின் தீவிர ஆலோசனைக்கு பிறகு, ஆஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், எவரும் எதிர்பார்க்காத வகையில் 'கிரீன் புக்' திரைப்படம் சிறந்த திரைப்படம், உண்மைத் திரைக்கதை, சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட மூன்று விருதுகளை வென்றுள்ளது.
குறிப்பாக மலிவு விலை நாப்கினை உருவாக்கிய கோயம்புத்தூரை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் நடித்த 'பீரியட். எண்டு ஆஃப் சென்டன்ஸ்', சிறந்த குறும் ஆவணப்படத்துக்கான ஆஸ்கார் விருதை தட்டிச் சென்றது.
விரிவாக படிக்க: ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற இந்தியாவில் எடுக்கப்பட்ட ஆவணப்படம்
ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா பிரிட்டன்?
பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் 1919ஆம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான இந்தியர்கள், பிரிட்டன் துருப்புகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதற்கு பிரிட்டன் மன்னிப்புக் கோர வேண்டுமா என்று அந்நாட்டின் பிரபுக்கள் சபை விவாதிக்க தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், புனைவுகளில் இருந்து உண்மையை பிரித்தெடுக்கிறார் வரலாற்றாசிரியர் கிம் வேக்னர்.
1919 ஏப்ரல் 13ஆம் தேதியன்று அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலாபாகில் நடந்த கொடுமையான சம்பவத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டதை சர்ஜென்ட் டபிள்யூ.ஜே.ஆண்டர்ஸன் நேரில் பார்த்தார்.
விரிவாக படிக்க: ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா பிரிட்டன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்