பாலகோட் இந்திய விமான தாக்குதல்: பாகிஸ்தான் விமானப்படை பயிற்சியை ஒளிபரப்பும் இந்திய ஊடகங்கள் #BBCFactCheck

    • எழுதியவர், உண்மை பரிசோதிக்கும் குழு
    • பதவி, பிபிசி

பாகிஸ்தான் மீது இந்தியா வான் தாக்குதல் நடத்துவது போல ஒரு காணொளி வைரலாக பரவி வருகிறது. பெரும்பாலான தொலைக்காட்சி ஊடகங்களும் அதனை ஒளிப்பரப்பின, சமூக ஊடக பயனர்களும் அதனை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த காணொளியில், இருளில் போர் விமானம் பறப்பது போலவும், நெருப்பை உமிழ்வது போலவும் காட்சிகள் உள்ளன. அந்த காணொளி குறித்து நாங்கள் ஆய்வொன்றை மேற்கொண்டோம்.

எங்கள் ஆய்வில், இந்த காணொளி செவ்வாய்க்கிழமைக்கு முன்பே எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. அதாவது, பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாமை குறி வைத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தியதாக இந்தியா குறிப்பிடும் சம்பவத்தின்போது அந்தக் காணொளி எடுக்கப்படவில்லை.

பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாமை குறி வைத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தியதாக இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே கூறினார். ஆனால், மேலதிக தகவல்களை அவர் பகிரவில்லை.

அவர், "ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இந்தியாவின் பிற பகுதிகளையும் குறி வைத்து தாக்குதல் நடத்த திட்டமிடுவதாக இந்திய அரசாங்கத்திற்கு நம்பதகுந்த இடங்களிலிருந்து தகவல்கள் வந்தன. அதனால்தான் செவ்வாய்க்கிழமை அதிகாலை பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாமை குறி வைத்து தாக்குதல் நடத்தினோம்" என்று தெரிவித்தார்.

டிரெண்டிங்கில் ஹாஷ் டாகுகள்

அதன்பிறகு,"#Surgicalstrike2, #IndianAirForce and #Balakot" ஆகிய ஹாஷ்டாகுகள் டிவிட்டரில் டிரெண்ட் ஆகின.

இந்த காணொளி இந்த ஹாஷ்டாக்களுடன் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டது. தொலைக்காட்சிகளும் இதனை ஒளிப்பரப்பின.

ஆனால், இதில் விந்தை என்னவென்றால் இதே காட்சி 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் இதனை பகிர்ந்தவர்கள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கிறார்கள்.

சில போர் விமானங்கள் பறப்பது போல தெரிகிறது. அது பறக்கும் வெளி இஸ்லாமாபாத் வான்வெளி என அதனை பகிர்ந்தவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

பாகிஸ்தானின் மூத்த பத்திரிகையாளர் ஹமீத் மிர் , 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இதனை டிவீட் செய்து இஸ்லாமாபாத் மேல் பாகிஸ்தான் விமானப்படையின் விமானம் என குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 18, 2016இல் நடந்த உரி தாக்குதலுக்குப்பின் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் பாகிஸ்தான் விமான படை போர் விமானங்களை இஸ்லாமாபாத் மற்றும் அதன் அருகே உள்ள இடங்களில் தரை இறக்கி பயிற்சி எடுத்தது.

இந்த சமயத்தில் லாகூர் இஸ்லாமாபாத் நெடுஞ்சாலையிலும் போர் விமானத்தை தரை இறக்கி பாகிஸ்தான் விமானப் படை பயிற்சி எடுத்தது.

இரண்டாவது காணொளி

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஜியா உல் ஹக்கின் மகன் இஜாஸ் உல் ஹக் 2019, பிப்ரவரி 24ஆம் தேதி ஒரு டிவீட்டை பகிர்ந்திருந்தார்.

அதில், "இரவு, 2.15 மணி அளவில் அப்பாஸ் கோட்டை பகுதியில் இரண்டு போர் விமானங்களின் சத்தத்தை கேட்டேன். சட்டத்தை மீறி இந்திய விமானப் படை விமானங்கள் பறந்தனவா அல்லது பாகிஸ்தான் விமான படை அதனை பின் தொடர்கிறதா?" என்று குறிப்பிட்டு இருந்தார்.

உல் ஹக் பாகிஸ்தானின் ஹௌருனாபாத் என்ற பகுதியிலிருந்து இதனை டிவீட் செய்திருந்தார். பஞ்சாபின் இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதி அருகே ஹௌருனாபாத் உள்ளது.

"Asad of Pakistan" என்ற டிவிட்டர் பக்கமும் இஜாஸ் உல் ஹக்கிற்கு பதில் அளிக்கும் விதமாக ஒரு காணொளியை பகிர்ந்திருந்தது.

வானத்தில் ஒரு விமானம் பறப்பது போன்ற காட்சி இந்த காணொளியில் இருந்தது.

இந்த காணொளி பிப்ரவரி 25 நள்ளிரவு 1.21 மணிக்கு பகிரப்பட்டுள்ளது. அதாவது, இந்தியா விமானப்படை தாக்குதல் நடத்தியதாக கூறும் நாளுக்கு ஓரிரவு முன்பு.

பாகிஸ்தானின் வீரத்திற்கு சாட்சியாக அந்த காணொளி பாகிஸ்தான் ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

ஆனால், இந்த இரண்டு காணொளிகளும் இந்திய சமூக ஊடக பக்கங்களில், பாகிஸ்தான் மீது இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலுக்கு சாட்சியாக பகிரப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: