You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சௌதி இளவரசர் சல்மான்: தீவிரவாதம் இரு நாடுகளுக்கும் பொது பிரச்சனை
தீவிரவாதமும், கடும்போக்குவாதமும் இந்தியா மற்றும் சௌதி அரேபியாவின் பொது பிரச்சனைகளாகும். எதிர்கால தலைமுறையினரின் பாதுகாப்பை உறுதி செய்யவதில் இந்தியாவோடும், பிற அண்டை நாடுகளோடும் ஒத்துழைப்போம். இந்த விடயத்தில் இந்தியாவின் பங்கை நாங்கள் பாராட்டுகின்றோம் என்று சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்திருக்கிறார்.
உளவுத்துறை தகவல் பகிர்வு போன்ற எல்லா வழிகளிலும் சௌதி அரேபியா இந்தியாவோடு ஒத்துழைக்கும் என்று இளவரசர் சல்மான் கூறியுள்ளார்.
எந்தவொரு வடிவத்திலும் தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்பதையும், ஆதரவு அளிக்கின்ற நாடுகள் மீது அழுத்தங்கள் அளிப்பதையும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். இளைஞர்கள் ஆயுதங்களை எடுக்காத வண்ணம் தீவிரவாத கட்டமைப்புகளை அழித்தொழிக்க, தீவிரவாத குழுக்களுக்கு அளிக்கப்படும் ஆதரவை நிறுத்துவதும், அவைகளுக்கு தண்டனை வழங்குவதும் முக்கியமானது. இந்த விடயத்தில் சௌதி அரேபியா இந்தியாவோடு உடன்பட்டுள்ளதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இன்று புதன்கிழமை மதியம் இந்திய பிரதமரை சந்தித்த பின்னர் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் இளவரசர் சல்மானும், பிரதமர் நரேந்திர மோதியும் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உறவுகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களின் பல்வேறு அம்சங்களை விவாதித்தாக தெரிவித்த நரேந்திர மோதி, எரிசக்தி கூட்டாளி உறவை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக மாற்றி, இந்தியாவின் உள்கட்டுமான துறையில் ஈடுபட வரவேற்கிறேன் என்று மோதி அழைப்புவிடுத்துள்ளார்.
முன்னதாக, வழக்கமான நடைமுறைக்கு மாறாக, இந்திய பிரதமர் நரேந்திர மோதி, விமான நிலையத்திற்கு சென்று செளதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை வரவேற்றார்.
காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மிகவும் மோசமான தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தும் முயற்சியில், இந்தியா முயற்சிகளை எடுத்து வரும்நிலையில், பாகிஸ்தானில மேற்கொண்ட இரு நாட்கள் பயணத்தின்போது 20 பில்லியன் டாலர் முதலீடுகளை சல்மான் அறிவித்துள்ளார்.
முகமது பின் சல்மான் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பயணம் மேற்கொள்வது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ள பின்னணியில், காலையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்திய - அரேபிய தீபகற்ப உறவுகள் நமது மரபணுவிலேயே இருப்பதாக சல்மான் தெரிவித்தார்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை, இந்த இரு நாடுகளில் பயணம் மேற்கொள்ளும்போது குறைக்க முயல்வதாக சல்மான் வாக்குறுதி அளித்திருந்தார்.
2016ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோதி ரியாத்தில் பயணம் மேற்கொண்ட மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், சௌதி இளவரசர் இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
2016ம் ஆண்டு பயணத்தின்போது வர்த்தகம், முதலீடு மற்றும் தீவிரவாத தடுப்பு ஆகிய பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்புகளை விரிவாக்கின.
இந்தியாவில் பயணத்தை முடித்து விட்டு முகமது பின் சல்மான் சீனா செல்லவுள்ளார்.
முகமது பின் சல்மானின் இந்த பயணம் மிக பெரிய ராஜீய சிக்கலை உருவாக்கிய பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலைக்கு ஐந்து மாதங்களுக்கு பின்னர் நிகழ்ந்துள்ளது.
சௌதி பெண்கள் - கல்வி முதல் சிறை வரை ஆண்கள் அனுமதி தேவை
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்