You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஷ்மீர் தாக்குதல்: 'ஊர் இளைஞர்கள் நூறு பேரை ராணுவத்தில் சேர்த்து பதிலடி கொடுப்போம்'
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியனின் சாவுக்கு தக்க பதிலடி கொடுக்க, எங்கள் சொந்த ஊர் இளைஞர்கள் நூறு பேர் ராணுவத்தில் சேர தயாராகவுள்ளோம் என சவலப்பேரி ஊர் இளைஞர்கள் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர்.
ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வியாழனன்று மாலை மூன்று மணிக்கு புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினர் பேருந்தில் சென்றனர்.
அப்போது, அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, அதன் மீது ஜெய்ஷ்-இ-மொஹமத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி 350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி வெடிக்கச் செய்ததில் 40 காவல் படையினர் கொல்லப்பட்டனர்.
இந்த தீவிரவாதத் தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரும் மரணம் அடைந்தார்.
சுப்ரமணியனுக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்புதான் கிருஷ்ணவேணி (23) எனும் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணமான ஒன்றரை வருடத்திலேயே சுப்பிரமணியன் இறந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த இருவரது குடும்பத்திற்கும் தலா 20 லட்சம் ரூபாய் நிவாரணநிதி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்படி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சுப்பிரமணியின் தொடக்கபள்ளி ஆசிரியர் கிருஷ்ணகுமார், “குண்டுவெடிப்பில் உயிரிழந்த இறந்த சுப்பிரமணியன் சிறு வயதில் இருந்தே மிகச் சிறந்த விளையாட்டு வீரர். பள்ளி காலங்களில் இருந்தே அவருக்கு இந்திய ராணுவ வீரராக வேண்டும் என்பதே லடசியம். ஒரு நாள் பள்ளி மாணவர்களிடம் நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள் என கேட்டதற்கு சற்றும் யோசிக்காமல் நான் ராணுவ வீரர் ஆக வேண்டும் என்று கூறியுள்ளார்.“
“இன்று அவருடைய இறப்பு என்பது என்னால் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத செய்தியாக உள்ளது.
இறந்த சுப்பிரமணியனின் மனைவியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என தெரிவித்தார்;.
உயிரிழந்த சுப்பிரமணியனின் நண்பர் ஆறுமுகம் பிபிசி தமிழிடம் பேசுகையில், “நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த சுப்பிரமணி ஒரு நல்ல விவசாயி. ராணுவத்தில் சேர்வதற்கு முன்பாக அவரது சொந்த தோட்டத்தில் இயற்கை முறையில் மரபணு மாற்றம் செய்யப்படாத நாட்டு காய்கறிகளை விவசாயம் செய்து வந்தார்.“
“கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சவலப்பேரி வந்திருந்தபோது தை பொங்கல் திருவிழாவையொட்டி பல்வேறு விளையாட்டுகளை நடத்தினார். எமது ஊர் சிறியவர் முதல் இளைஞர்கள் வரை அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்தார்.“
ஊரில் இருந்த சென்ற சுப்பிரமணி புதன்கிழமை என்னிடம் தொலைபேசியில் பேசினார். ஒரு நல்ல நண்பரை இழந்து விட்டது எங்களை ஆழமான வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
"ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக எங்களது ஊரைச் சேர்ந்த நூறு இளைஞர்களை ராணுவத்தில் ராணுவத்தில் சேர்த்து தக்க பதிலடி கொடுப்போம். இந்த சுப்பிரமணியனை போல் மேலும் பல இளைஞர்கள் சவலப்பேரியில் உருவெடுத்து வருவார்கள்," என மிகுந்த ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்