"இந்தியாவில் வேலையின்மை அதிகரித்துள்ளதாக வெளியான அறிக்கை சரிபார்க்கப்படவில்லை" - நிதி ஆயோக்

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள அறிக்கை இன்னும் சரிபார்க்கப்படவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இது ஒரு வரைவு அறிக்கைதான் என்றும், முழுமையாக இன்னும் சரிபார்க்கப்படவில்லை என்றும் நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தியாவின் வேலையின்மை விகிதம், 1970களில் இருந்து முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக, அரசு வேலைவாய்ப்பு அறிக்கை ஒன்று வெளியாளது. வேலைவாய்ப்பில்லா திண்டாட்டம் 6.1 சதவீதமாக இருப்பதாக இது காட்டுகிறது. தேசிய புள்ளியியல் கமிஷனாலும் இந்த அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

பிஸ்னஸ் ஸ்டான்டர்ட் நாளிதழ் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டது.

முன்னதாக, மத்திய அரசு இந்த அறிக்கையை வெளியிட மறுத்ததாக குற்றஞ்சாட்டி, இரண்டு உறுப்பினர்கள் தங்கள் வேலையை ராஜிநாமா செய்ததாக கூறப்படுகிறது.

தரவுகள் புதிய வகையில் சேகரிக்கப்பட்டதாலும், அறிக்கை முழுமையானதாக இல்லை என்பதனால், அதனை வெளியிட்டால் சரியாக இருக்காது என்றும் செய்தியாளர்களிடம் பேசிய ராஜிவ் குமார் கூறினார்.

வேலையின்மை அதிகரித்துள்ளது என்ற பட்சத்தல் இந்திய பொருளாதாரம் 7 சதவீதம் அளவிற்கு உயர்ந்திருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் வர சில மாதங்களே இருக்கும் நிலையில், இந்த விவகாரம் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் கட்சி, தன் சொந்த தரவுகளையே பொய் என்று பா.ஜ.க சொல்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கு பா.ஜ.கவும் பதிலுக்கு ட்வீட் செய்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :