'சோனியா காந்தி இந்துக்களை வெறுக்கிறார்' என்று எழுதினாரா பிரணாப் முகர்ஜி? #BBCFactCheck

'சோனியா காந்தி இந்துக்களை வெறுக்கிறார்' என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எழுதினாரா?

சமூக ஊடகங்களில் பல வலதுசாரி குழுக்களில் போலியான கட்டுரை ஒன்று பகிரப்பட்டு வருகிறது.

அக்கட்டுரையின் தலைப்பு, 'சோனியா காந்திக்கு இந்துக்களை பிடிக்காது, என்கிறார் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி' என்பதாக இருக்கிறது.

கடந்த சில நாட்களாக, பல பா.ஜ.க சார்ந்த வாட்சப் குழுக்களிலும் இது பகிரப்பட்டு வருகிறது.

பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் கூட, ஆயிரக்கணக்கானோர் இதனை பகிர்ந்துள்ளனர்.

'Post-card News', 'Hindi Exhibition' and 'Perform In India' போன்ற வலைதளங்களும், இந்த கட்டுரைக்கான இணைப்பை பகிர்ந்து, போலிச் செய்திகளுக்கு இடம் கொடுத்துள்ளனர்.

ஆனால், 7 புத்தகங்களை எழுதியுள்ள முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 2017ஆம் ஆண்டு பிரசுரமான 'The Coalition Years' என்ற தன் புத்தகத்தில் உண்மையிலேயே சோனியா காந்தி குறித்து இவ்வாறு எழுதியுள்ளாரா?

இதுகுறித்து தெரிந்து கொள்ள, பிரணாப் முகர்ஜியின் அலுவலகம் மற்றும் அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜியிடம் பேசினோம்.

சோனியா காந்தி இந்துக்களை வெறுப்பதாக புத்தகத்தின் எந்த பகுதிகளிலும் எழுதவில்லை என்று பிரணாப் முகர்ஜியின் அலுவலகம் தெரிவித்தது.

இந்நிலையில் பிபிசியிடம் பேசிய ஷர்மிஸ்தா முகர்ஜி, "இது முற்றிலும் பொய்யானது. இந்த கதைகள் எல்லாம் பிரச்சார உக்தி" என்றார்.

2018ஆம் ஆண்டு ஜூன் 7 அன்று, ஆர்எஸ்எஸ் தலைமையிடமான நாக்பூரில் நடைபெற்ற விழாவில் முக்கிய விருந்தினராக பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டதனை ஷர்மிஸ்தா முகர்ஜி எச்சரித்திருந்தார்.

இது குறித்து ஜூன் 6ஆம் தேதியன்று ட்வீட் செய்திருந்த அவர், "மக்கள் உங்கள் உரையை மறந்து விடுவார்கள். ஆனால், புகைப்படங்களும், வீடியோக்களும் அப்படியே இருக்கும், அவை தவறாக பயன்படுத்தப்படலாம். நாக்பூருக்கு செல்வதினால், உங்களுக்கு எதிரான போலி செய்திகளை உருவாக்க பா.ஜ.க-வுக்கும், ஆர்எஸ்எஸ்-க்கும் வாய்ப்பளிக்கிறீர்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :