You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விலைவாசி கால்குலேட்டர்: விலைவாசியால் உங்களுக்கு எவ்வளவு அதிகம் செலவாச்சின்னு பாருங்க
பத்தாண்டுகளுக்கு முன்னர் இருந்த வெங்காய விலையைவிட, இன்று வெங்காயத்தின் விலை 129 சதவீதம் அதிகரித்துள்ளது. மற்ற பொருட்கள் எல்லாம், 2018ஆம் ஆண்டு என்ன விலை விற்றது, 2009 மற்றும் 2014ல் என்ன விலையில் விற்றது என்பதை இங்கு காணலாம்.
பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை இயக்குநரகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2018ஆம் ஆண்டில் வெங்காயத்தின் சராசரி சில்லறை விலை கிலோ 24.4 ரூபாயாக இருந்தது. 2008ல் இதன் விலை 11.9 ரூபாயாக இருந்தது. அதாவது 10 ஆண்டுகளில் சுமார் இருமடங்கு விலை உயர்ந்துள்ளது.
2012ஐ விட 2013ஆம் ஆண்டு, 150 சதவீதம் அளவிற்கு விலை உயர்ந்திருந்த வெங்காயம், 2014ஆம் ஆண்டு, 33 சதவீதம் வீழ்ந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, இன்று வெங்காயம் 129 சதவீதம் அதிக விலையில் இருக்கிறது.
2018 நவம்பர் மாதம், பண வீக்கம் 4.86 சதவீதமாக இருந்தபோது, விலை அதிகமாக இருந்தது. நீங்கள் தினமும் வாங்கும் பொருட்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்பு என்ன விலைக்கு கிடைத்தது என்று நினைத்து பார்த்துள்ளீர்களா? இதற்காக பிபிசி ஒரு கால்குலேட்டரை உருவாக்கியுள்ளது. நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை தேர்வு செய்து, அதற்கு 2018ல் என்ன விலை கொடுத்தீர்கள் என்பதை உள்ளிடுங்கள். 2009 மற்றும் 2014ஆம் ஆண்டு அப்பொருள் என்ன விலையில் விற்கப்பட்டது என்ற தகவல் இதில் வரும்
இந்த விலைவாசி கால்குலேட்டர் மூலமாக, நீங்கள் தினமும் வாங்கும் பொருட்களுக்கு எவ்வளவு அதிகமாக அல்லது குறைவாக செலவிடுகிறீர்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
முறை:
குறிப்பிட்ட ஆண்டில், நீங்கள் ஒரு பொருளை எவ்வளவு விலை கொடுத்து வாங்கினீர்கள் என்று கணக்கிட, சில்லறை விலை குறியீட்டை (RPI) பயன்படுத்தியுள்ளோம். இது குறிப்பிட்ட சில பொருட்களுக்கு, குறிப்பிட்ட ஆண்டில் எவ்வளவு விலை என்பதை அளிக்கும் பட்டியலாகும். இதுவே நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணிற்கு (CPI) அடிப்படையாக உள்ளது.
நுகர்வோர் குறியீட்டு எண் என்பது, குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட பொருளுக்கும், சேவைக்கும் ஒரு நுகர்வோர் எவ்வளவு செலவிடுகிறார் என்பதை குறிப்பதாகும்.
இந்தியாவில் தற்போது, நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை கணக்கிட இரண்டு அமைப்புகள் உள்ளன. தொழிலாளர் அமைவனம், தொழிற்சாலைகளில் பணியாற்றுவோரின் பொருளாதார நிலை மற்றும் விவசாய பணியாளர்களின் குடும்ப நிலையை அடிப்படையாக கொண்டு, இந்த குறியீட்டு எண்ணை தயார் செய்கிறது. புள்ளியல் மற்றும் திட்ட நடைமுறைப்படுத்துதல் அமைச்சகம், நகர்புற மற்றும் கிராமபுற பகுதிகளுக்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை 2011ஆம் ஆண்டு முதல் தொகுத்து வருகிறது. இந்த இரு அமைப்புகளுமே ஒவ்வொரு பொருளின் சில்லறை விலை குறியீட்டை கணக்கிடுகின்றன. பெரிய கால அளவை பயன்படுத்த உதவுவதால், தொழிலாளர் பணியகத்தின் தரவுகளை நாங்கள் இங்கு பயன்படுத்தியுள்ளோம்.
கால கணக்கீடு:
அடிப்படை ஆண்டு என்பது, இந்த கணக்கீட்டின் முதல் ஆண்டு. இந்த கணக்கீட்டை பொருத்தவரை முதலில் இது 100 என்று கணக்கிட்டுக்கொள்ளும். அதன்பிறகு உள்ள ஆண்டுகளில், குறிப்பிட்ட பொருளின் விலை எவ்வளவு மாறியுள்ளது என்பதை கணக்கிட்டு காட்டும்.
பொருட்களின் பட்டியல்:
தொழிலாளர் அமைவனத்தின் பட்டியல், 392 பொருட்களை 5 பெரிய குழுவாக பிரிக்கிறது. இந்த குழுக்கள் மேலும், சிறுசிறு குழுக்களாக பிரிக்கப்படுகின்றன. நாங்கள் ஒவ்வொரு சிறு குழுவிலும் உள்ள 26 தினசரி பயன்பாட்டில் உள்ள பொருட்களை தேர்வு செய்துள்ளோம்.
கணக்கீடு:
392 பொருட்களுக்கான மாதந்திர சில்லறை விலை குறியீட்டை அரசு வெளியிடுகிறது. அனைத்து மாதங்களுக்கான விலையின் சராசரியை ஒவ்வொரு பொருளுக்கும் எடுத்துள்ளோம். இந்த திட்டத்தை நாங்கள் தொடங்கியபோது, நவம்பர் 2018 வரையிலான தரவுகள் மட்டும் கிடைத்தன.
வரையறைகள்:
தற்போதுள்ள தொழிலாளர் பணியகத்தின் ஆரம்ப கணக்கீட்டு ஆண்டு என்பது 2001 ஆகும். இந்த கணக்கீட்டு முறையிலுள்ள அனைத்து தரவுகளும், 18 ஆண்டுகள் முன்பு இருந்த விலையை அடிப்படையாக கொண்டே கணக்கிடப்படுகின்றன. அதன்பிறகு பொருளாதாரத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. மிகவும் அண்மை ஆண்டின் (2010, பிறகு 2012) தரவுகளை ஒன்று சேர்த்து அளிக்க புள்ளியியல் அமைச்சகம் பணியாற்றி வருகிறது. இதன்மூலம், தொழிற்சாலை பணியாளர்களின் நுகர்வோர் விலை குறியீட்டில் ஏற்பட்ட பின்னடைவுகளை சமாளிக்க முடியும். பொருளாதாரத்தின் ஏழு வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலை பணியாளர்களின் பொருளாதாரத்தை தொழிலாளர் பணியகம் கணக்கிடுகிறது. அவை (1) தொழிற்சாலைகள் (2) சுரங்கங்கள் (3) விவசாயம் (4) இஅர்யில்வே (5) பொதுபோக்குவரத்துத் துறை (6) மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் (7) துறைமுகங்கள்.
விலைவாசி மாறிக் கொண்டே இருக்கும் மற்றொரு பொருள் பெட்ரோல். கடந்த 10 ஆண்டுகளில், 2011ல்தான் பெட்ரோலின் விலை, 25 சதவீதம் உயர்ந்துள்ளது. 2015 மற்றும் 2016ல் பெட்ரோல் விலை வீழ்ந்திருந்தாலும், அதன் பிறகு, தொடர்ந்து விலை ஏற்றத்தையே கண்டு வருகிறது.
டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் 2018ல் சராசரி பெட்ரோல் விலை 78.7 ரூபாயாக இருந்தது. 2008ஆம் ஆண்டு 50.8 ரூபாயாக இருந்ததில் இருந்து ஒப்பிட்டு பார்த்தால், இது 55 சதவீதம் உயர்ந்துள்ளது.
பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களின் சில்லறை விலையும், 2001ஆம் ஆண்டில் இருந்து உயர்வையே கண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், ஆண்டுதோறும் சராசரியாக எட்டு சதவீதம் அளவிற்கு பால் விலை உயர்ந்துள்ளது. அப்போதில் இருந்து இதன் விலை மெதுவாக உயர்ந்து கொண்டுதான் வருகிறது. 2001ல் இருந்து பாலின் விலை 318 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
கோதுமையின் சராசரி விலை 2008ஆம் ஆண்டு கிலோ 14.9 ரூபாயாக இருக்க, 2018ல் இது 26 ரூபாயாக உயர்ந்தது.
2007ல் இருந்து ரயில் டிக்கெட்டின் விலை குறைந்து கொண்டு வந்தாலும், 2013ஆம் ஆண்டு 38 சதவீதம் உயர்ந்து, அப்போதில் இருந்து விலை ஏற்றத்தையே கண்டு வருகிறது. 2009ஆம் ஆண்டு ரயில் டிக்கெட் விற்ற விலையை விட இன்று 82 சதவீதம் நீங்கள் அதிக விலை கொடுத்து வாங்குகிறீர்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :