You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பங்காரு அடிகளார் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு பத்மஸ்ரீ விருது
இந்தியாவில் தேசிய அளவில் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது, பங்காரு அடிகளார் உள்ளிட்ட 7 பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ தேசிய விருதுகள் பெறுவோரின் பெயர் பட்டியலை இந்திய அரச வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டது.
பாரதரத்னா மட்டுமில்லாமல், பத்ம விபூஷன், பத்ம பூஷன் விருதுகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாருக்கும் வழங்கப்படவில்லை.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார், மேசை பந்து விளையாட்டு வீரர் சரத் கமல், பரத நாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், சமூக சேவகி மதுரை சின்னப்பிள்ளை, மருத்துவர் ஆர்.வி.ரமணி, இசைத்துறையை சேர்ந்த ஆனந்தன் சிவமணி, மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி (அறுவை சிகிச்சை) ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இந்தியாவில் மொத்தம் 94 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார், கேரள மாநிலத்தை சேர்ந்த திரைப்பட நடிகர் மோகன்லால், விஞ்ஞானி நம்பி நாராயணன் உள்ளிட்ட 14 பேருக்கு பத்ம பூஷன் விருதும், நான்கு பேருக்கு பத்ம விபூஷன் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன. டெல்லியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி உள்ளிட்ட மூவருக்கு அறிவிக்கப்பட்டது.
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி, மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், பாரதிய ஜனதா கட்சியின் நிறுவனர்களில் ஒருவருமான மறைந்த நானாஜி தேஷ்முக், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளருமான மறைந்த பூபேன் அசாரிகா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்