You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாஜக ஊழியர் மாட்டிறைச்சியுடன் குஜராத்தில் கைதா? - உண்மை என்ன? #BBCFactCheck
- எழுதியவர், பார்த் பாண்டியா
- பதவி, ஃபேக்ட் செக் குழு, பிபிசி
பாரதிய ஜனதா கட்சியின் பணியாளர் மாட்டிறைச்சியை திருடியபோது பிடிபட்டார் என்று கூறும் காணொளி ஒன்று பல்வேறு சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டது.
ஃபேஸ்புக்கில் மட்டும் பத்து லட்சத்திற்கும் மேலானவர்களால் இந்தக் காணொளி பார்க்கப்பட்டுள்ளது.
இந்த காணொளியின் முதல் பகுதியில் தெருவில் ஒரு மனிதர் உட்கார்ந்து இருப்பதும், அவரை சுற்றி இறைச்சி சிதறி கிடப்பதும் தெரிகிறது.
அந்த பக்கம்போன பலரும் இந்த மனிதரை வெறித்து பார்ப்பதுபோல படம் சுட்டிக்காட்டுகிறது.
இதுவொரு பிரேக்கிங் நியூஸ் என்றும், பிஜேபி பணியாளர் மாட்டிறைச்சியை திருடியபோது பிடிப்பட்டார் என்றும் பின்னணியில் குரல் ஒலிக்கிறது.
இந்த காணொளியின் இரண்டாவது பாதியில், வாகனத்தின் பின்னால், இறைச்சி நிறைந்து இருப்பது காட்டப்படுகிறது. அதனை மாட்டிறைச்சி என்று இந்த குரல் தெரிவிக்கிறது.
பிபிசி நடத்திய புலனாய்வில், இந்த காணொளியின் இரண்டு பகுதிகளும் போலியானவை என்பது தெரிய வந்துள்ளது.
ஷாக்ஷி சர்மாவின் கணக்கில் இருந்து மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்த காணொளி பகிரப்பட்டுள்ளது.
அதுமுதல் இதனை சுமார் 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர். பிற பக்கங்களிலும் இது பகிரப்பட்டுள்ளது.
இந்த காணொளியில் வருகின்ற முதல் படமானது ஜார்கண்டில் நிகழ்ந்த கும்பல் கொலையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி, ஜார்கண்டின் ராம்கார் மாவட்டத்தில் மாட்டிறைச்சியை திருடிவிட்டதாக சந்தேகப்பட்டு, அலிமுதீன் அன்சாரி என்பவரை கும்பல் ஒன்று கொலை செய்தது. அவரது வாகனத்தையும் மக்கள் எரித்தனர்.
சில வலதுசாரி செயற்பாட்டாளர்கள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றம் அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கியது.
தனது கணவர் ஒட்டுநராக வேலை செய்து கொண்டிருந்தார் என்றும் அவருக்கு எந்தவொரு அரசியல் கட்சியோடும் தொடர்பு கிடையாது என்றும் அலிமுதீனின் மனைவி மரியம் தெரிவித்தாக பிபிசி ஹிந்தி சேவையின் செய்தி குறிப்பிடுகிறது.
இந்த காணொளியின் இரண்டாவது பகுதியில் காட்டப்படும் வாகனத்தின் பின்புறத்திலுள்ள நம்பர் பிளேட், இந்த வாகனம் குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்தது என்பதை காட்டுகிறது. இந்த நம்பர் பிளேட்டில் பிஜேபியின் சின்னமான தாமரை அச்சிடப்பட்டுள்ளது.
அதிலுள்ள புகைப்படங்கள் ஒன்றில், தாமரை சின்னம் மற்றும் பிஜேபியின் ஸ்டிக்கர்கள் காணப்படுகின்றன.
சமீபத்திய ஆண்டுகளில், இந்த நகரத்தில் பிஜேபி பணியாளர் ஈடுபட்டதாக கூறப்படும் இத்தகைய சம்பவம் எதுவும் நிகழவில்லை என்று குஜராத் காவல்துறையை சோந்த மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
சமீபத்திய ஆண்டுகளில் தங்களது எந்தவொரு பணியாளரும் இவ்வாறு கைதுசெய்யப்படவில்லை என்று அகமதாபாத் நகர பாரதிய ஜனதா கட்சியும் மறுத்துவிட்டது.
அகமதாபாத் பிஜேபி பணியாளர் மாட்டிறைச்சி திருடியதாக யாரும் புகார் அளிக்கவில்லை என்று அகமதாபாத் நகர தலைவர் ஜெகதீஸ் பன்சால் தெரிவித்தார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்