You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அதகளமாக தொடங்கியது பணிகள் மற்றும் பிற செய்திகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு மாடுபிடி வீரர்கள் தேர்வு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக பல்வேறு சோதனைகளுக்கு பிறகு 848 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், ஆகிய கிராமங்களில் வரும் 15, 16, 17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
இதற்காக இன்று மாடுபிடி வீரர்களுக்கு முன்பதிவு தொடங்கியது. மாடுபிடி வீரர்கள் 18 முதல் 40 வயது உள்ளவராகவும், சீரான உடற்தகுதி உள்ளவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் குறைந்தது 150 செ.மீ. உயரமும், உயரத்திற்கு ஏற்ற எடையும் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான தேர்வில் மொத்தம் 876 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், 848 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்வில் 28 பேர் நிராகரிக்கப்பட்டனர்.
'கொடநாட்டில் கொலை - கொள்ளை நடந்தபோது ஏன் மின்சாரம் இல்லை?'
தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த ஐந்து கொலைகளுக்கு பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக தெஹல்கா புலனாய்வு இணைய இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் சுமத்திய குற்றச்சாட்டு, தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.
கொடநாடு கொலை - கொள்ளை குறித்து தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், எடப்பாடி பதவி விலகி முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசாவும் கூறியுள்ளனர்.
வெள்ளியன்று டெல்லியில் செய்தியாளர்களை மேத்யூ சாமுவேல் சந்தித்தார். அதிமுகவினர் செய்த முறைகேடுகள் குறித்த ஒப்புதல் வாக்குமூலங்களை, காணொளியாகப் பதிவு செய்து கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா வைத்திருந்ததாகவும், அவற்றைக் கைப்பற்றினால் அமைச்சர்கள் உள்ளிட்டோரைத் தாம் கைப்பற்ற முடியும் என்று எடப்பாடி நினைத்ததாகவும் மேத்யூ கூறியிருந்தார்.
விரிவாக படிக்க:கொடநாட்டில் கொலை - கொள்ளை: மர்மங்களும், கேள்விகளும்
முன்னேறிய வகுப்பினருக்கு 10 % இட ஒதுக்கீடு: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
இந்தியாவில் முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதாக ஏ.என்.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான மசோதா கடந்த செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேறியது. காங்கிரஸ் கட்சியும் இந்த மசோதாவை ஆதரித்ததால், மொத்தம் வாக்கெடுப்பில் பங்கேற்ற 326 பேரில் 323 பேர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மூவர் எதிர்த்து வாக்களித்தனர்.
மாநிலங்களவையில் இது தொடர்பாக புதன்கிழமை விவாதம் நடந்து வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. அந்த வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 149 பேரும், எதிராக ஏழு பேரும் வாக்களித்தனர்.
பின்னர் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி
வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் இவ்விரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு இக்கூட்டணி விட்டுக்கொடுத்துள்ளது. மீதமுள்ள இரு தொகுதிகளும், கூட்டணிக்கு வரும் சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உத்தரபிரதேசத்தில் இவ்விரு கட்சிகளும் எதிரெதிர் களத்தில் நின்று தேர்தலை எதிர்கொண்டவை.
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வசம் இருந்த கோரக்பூர், மற்றும் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா வசம் இருந்த புல்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு 2018இல் நடந்த இடைத் தேர்தலை இவ்விரு கட்சிகளும் ஒன்றாக எதிர்கொண்டன.
'முடிவுக்கு கொண்டுவரவேண்டிய நேரமிது'
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக ஆண்களை அணிதிரள கோரி இருக்கிறார் தென் ஆஃப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசா.
இதனை 'தேசிய நெருக்கடி' என்றும் அவர் வர்ணித்துள்ளார்.
தொடர்ந்து பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நேரமிது என்றும் அவர் கூறி உள்ளார்.
ஆளும் ஆஃப்ரிக்க தேசிய காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை வெளியிடும் போது ராமபோசா இத்தகைய உணர்ச்சிகரமான கோரிக்கையை முன்வைத்தார்.பாஜகவுக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்