You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துத் தெரிவித்தது உண்மையா? #BBCFactCheck
- எழுதியவர், சாய்ராம் ஜெயராமன்
- பதவி, பிபிசி தமிழ்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உலகம் முழுவதுமுள்ள தமிழ் மொழி பேசும் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துத் தெரிவித்துள்ளதாக கூறி சமூக ஊடகங்களிலும், சில செய்தித் தொலைக்காட்சிகளிலும் அவர் பேசும் காணொளிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் மலேசியா, தென்னாபிரிக்கா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், மியான்மர், அமெரிக்காவுக்கு அடுத்து கனடாவில் அதிகளவில் வசித்து வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்தவர்களை விட, இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்தபோது அங்கிருந்து அகதிகளாக சென்ற ஈழத் தமிழர்களே கனடாவில் பெருமளவில் வசித்து வருகின்றனர்.
அடிப்படையில் பல்வேறு நாடுகளையும், மொழிகளையும், கலாசாரத்தையும் கொண்டவர்கள் வசிக்கும் நாடாக விளங்கும் "கனடாவை சேர்ந்த தமிழர்கள், அந்நாட்டிற்கு செய்த பங்களிப்பையும், தமிழ் மொழியின் சிறப்பியல்புகள், கலாசாரம், பாரம்பரியம் போன்றவற்றை போற்றும் வகையிலும், எதிர்கால கனேடிய சந்ததியினருக்கு அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முழுவதும் 'தமிழ் பாரம்பரிய மாதமாக' கொண்டாடப்படும் என்று அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, கடந்த 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் டொராண்டோ மட்டுமின்றி கனடா முழுவதும் அந்நாட்டு அரசு சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் தமிழ் பாரம்பரிய மாதம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், உண்மையிலேயே இந்தாண்டு ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் வாழ்த்துத் தெரிவித்தாரா என்பதை பிபிசி தமிழ் ஆராய்ந்தது.
தனது சமூக ஊடக பக்கங்களின் மூலமாக இதுபோன்ற வாழ்த்துக்களை தெரிவிப்பதையே கடந்த காலங்களில் ஜஸ்டின் வழக்கமாக கொண்டுள்ளார். எனவே, அவரது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களை ஆராய்ந்ததில் இந்தாண்டு இன்றைய தேதிவரை அவர் பொங்கல் குறித்து எவ்வித பதிவுகளையும் இடவில்லை என்பது தெளிவாகிறது.
அப்படியென்றால், தற்போது இணையத்திலும், வாட்ஸ்ஆப் போன்ற செயலிகளிலும் வலம் வந்துகொண்டிருக்கும் காணொளிகள் எங்கிருந்து வந்தன என்ற கோணத்தில் ஆராய்ந்தபோது, ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் வாழ்த்துக்கள் கூறியதாக இருவேறு காணொளிகள் பரப்பப்பட்டு வருவது தெரியவந்தது.
இந்த இருவேறு காணொளிகளிலும், வேறுபட்ட விடயங்கள் குறித்து பேசும் அவர் இறுதியில் தை பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிக்கிறார். அதாவது, முதலாவது காணொளியில், தமிழ் பாரம்பரிய மாதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதை கொண்டாடுவதற்குரிய அனைத்து வழிகளையும் நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதையும், கனடாவின் 150வது ஆண்டு விழாவையும் மையாக கொண்டு ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் ஒருசேர பேசுகிறார். இந்த காணொளி அவரது சமூக ஊடக பக்கங்களில் 2017ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட காணொளி:
இரண்டாவது காணொளியில், பொங்கல் பண்டிகையின் சிறப்புகள் குறித்தும், கனேடிய தமிழர்கள் அந்நாட்டிற்கு அளித்து வரும் பங்களிப்பை போற்றும் வகையிலும் அவரது பேச்சு அமைந்துள்ளது. இந்த காணொளி ஜஸ்டினின் சமூக ஊடக பக்கங்களில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி பதிவேற்றப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட காணொளி:
எனவே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் வாழ்த்து கூறியதாக பரப்பப்பட்டு வரும் இரண்டு காணொளிகளும் அடிப்படையில் உண்மையானதாக இருந்தாலும், அது இந்தாண்டு வெளியிடப்படவில்லை என்பதால், எதிர்வரும் பொங்கலுக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்ததாக பகிரப்படும் செய்தி போலியானது என்பது உறுதியாகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்