You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேலியைத் தவிர்க்க ஊரின் பெயரை மாற்றப் போராடும் இந்திய கிராமங்கள்
- எழுதியவர், அரவிந்த் சாப்ரா
- பதவி, பிபிசி
இந்தியாவெங்கும் மத்திய அரசு பல நகரங்களின் பெயரை வலுக்கட்டாயமாக மாற்றிவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் இதே காலக்கட்டத்தில், ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த சில கிராம மக்கள் தங்களது ஊரின் பெயர்களை மாற்ற போராடி வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
"எனது கிராமத்தின் பெயர் கந்தா (இந்தி மொழியில் 'அழுக்கு' என்று பொருள்)" என்று கூறும் ஹர்பிரீத் கவுர் தனது கிராமத்தின் பெயரை அதிகாரபூர்வமாக மாற்றுவதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதினார். தான் சந்திப்பவர்களிடமிருந்து அவமானகரமான பேச்சுகளை எதிர்கொள்வதற்கு தனது ஊரின் பெயரே போதுமானதாக உள்ளதாக அவர் கூறுகிறார்.
"எங்களது உறவினர்கள் கூட ஊரின் பெயரை மையமாக வைத்து கேலி செய்ய தொடங்கியது மோசமான உணர்வை தந்தது" என்று அவர் கூறுகிறார்.
2017ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோதி இந்த ஊரின் பெயரை மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இன்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட கந்தா கிராமத்தினர், தாங்கள் அஜித் நகரை சேர்ந்தவர்கள் என்று பெருமையுடன் கூறிக்கொள்கின்றனர்.
அரசாங்கத்தின் கவனத்தை பெற்று, ஊரின் பெயரை மாற்றுவதற்கு பல ஆண்டுகளாக முயற்சித்து வருவதாக அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் லக்விந்தர் ராம் கூறுகிறார். "எங்களது முயற்சிகள் பலனளிக்காததால் கிராமத்தை சேர்ந்த இளையவர் ஒருவர் பிரதமருக்கு கடிதம் எழுதினால் நல்ல பலன் கிடைக்குமென்று நம்பினோம்" என்று அவர் கூறுகிறார்.
பல தசாப்தங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக இந்த கிராமத்தில் பெரும் சேதம் ஏற்பட்டதாகவும், அப்போது சேதத்தை பார்வையிட வந்த அதிகாரி கிராமத்தின் நிலையை பார்த்து "கந்தா" என்று கூறியதாகவும், அதன் பிறகே இந்த பெயர் நிலைப்பெற்றதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.
தங்களது கிராமத்தின் பழைய பெயரின் காரணமாக அவமானம் ஏற்பட்டது மட்டுமின்றி, பல குடும்பங்களின் பெண்களை மற்ற ஊரை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு மறுப்புத் தெரிவித்ததாக ராம் மேலும் கூறுகிறார். இந்நிலையில், ஊரின் பெயர் மாற்றப்பட்டதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல பிரச்சனைகளிலிருந்து விடுபட்டுள்ளதாக அவர் மேலும் கூறுகிறார்.
இதுபோன்ற பிரச்சனைகளை நாடுமுழுவதும் பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் சந்தித்து வருகின்றனர்.
கடந்த சில காலங்களில் மட்டும், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் தங்களது ஊரின் பெயரை மாற்ற இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
"சமீபகாலத்தில் மட்டும் இதுபோன்ற 40 கிராமங்களின் கோரிக்கைகள் பெறப்பட்டு, அவற்றின் பெயர் மாற்றப்பட்டுள்ளன" என்று மத்திய அரசை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
அவற்றுள், இந்தியில் திருநங்கையை குறிக்க பயன்படுத்தப்படும் கின்னார் என்ற கிராமமும் அடக்கம். அந்த கிராமத்தின் பெயர் 2016ஆம் ஆண்டு கைபி நகர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
வட இந்திய மாநிலமான ராஜஸ்தானிலுள்ள அல்வார் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தின் பெயர் சோர் பாசாய். அதிலுள்ள 'சோர்' என்ற வார்த்தைக்கு இந்தியில் திருடன் என்ற அர்த்தம் உள்ளதால் தற்போது அதன் பெயர் வெறும் பாசாய் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்தியாவில் ஒரு ஊரின் பெயரை மாற்றுவதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
ஒரு குறிப்பிட்ட கிராமத்தை/ நகரத்தை சேர்ந்தவர்கள் அதன் பெயரை மாற்ற விரும்பினால் முதலில் அதன் மாநில அரசின் ஒப்புதலை பெற வேண்டும். பின்பு, மாநில அரசு கோரிக்கை விடுக்கும்பட்சத்தில் மத்திய அரசு இதுகுறித்த இறுதி முடிவை எடுக்கும்.
மேற்கண்ட எல்லாவற்றிற்கும் முன்னதாக ஊரின் பெயரை மாற்ற அரசுக்கு கோரிக்கை விடுக்க முதலில் அதற்குரிய சம்மதத்தை இந்திய ரயில்வே துறை, அஞ்சல்துறை, இந்திய நில அளவைத் துறையிடமிருந்து பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியில் மாற்றுத்திறனாளியை தரக்குறைவாக குறிப்பதற்கு பயன்படுத்தப்படும் லுலா அஹிர் என்ற பெயரை கொண்ட ஹரியாணாவை சேர்ந்த கிராமத்தினர் அதன் பெயரை மாற்றுவதற்குரிய முயற்சியை 2016ஆம் ஆண்டே எடுத்துவிட்டாலும், இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை.
"எங்களது கிராமத்தின் பெயரை தேவ் நகர் என்று மாற்ற விரும்பினோம்" என்று அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் விரேந்தர் சிங் கூறுகிறார்.
தங்களது கோரிக்கைக்கான பதிலுக்காக ஆறு மாதங்கள் காத்திருந்த இந்த கிராம மக்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. தேவ் நகர் என்ற பெயர் கொண்ட கிராமம் ஏற்கனவே நாட்டில் எங்கேயோ இருப்பதாக கூறி அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
"நாங்கள் மீண்டும் கிருஷ்ணா நகர் என்ற பெயரை அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்தோம். இதுவரை அரசாங்கத்தின் பதிலுக்காக காத்திருக்கிறோம்" என்று விரேந்தர் சிங் கவலையுடன் கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்