You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முத்தலாக் தடை மசோதா: மக்களவையில் நிறைவேற்றம் -அதிமுக, காங்கிரஸ் வெளிநடப்பு
முத்தலாக் முறையில் விவகாரத்து பெறுவதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்ட மசோதா இன்று (வியாழக்கிழமை) இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதா தொடர்பாக நடந்த வாக்கெடுப்பில் 245 பேர் ஆதரவாக வாக்களிக்க, இதற்கு எதிராக 11 பேர் வாக்களித்தனர்.
காங்கிரஸ், அதிமுக, சமாஜ்வாடி போன்ற முக்கிய எதிர்க்கட்சிகள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்த சட்ட மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று இந்த கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஆனால், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட மசோதா பெண்களின் உரிமைகளை பாதுகாக்க கொண்டு வரப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அரசு , எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை கேட்பதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.
முத்தலாக் மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மூன்று முறை தலாக் என்ற சொல்லை உச்சரிப்பதன் மூலம் முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவியை விவகாரத்து செய்ய வழி வகுக்கும் முத்தலாக் முறை, கடந்த சில ஆண்டுகளாக பலவிதமான சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்துவந்தது.
இஸ்லாத்தின் பாரம்பரிய முறைப்படி, ஆண்கள் தங்கள் மனைவியிடம் மின்னஞ்சல், வாய்மொழி அல்லது எந்த வடிவத்திலும் மூன்று முறை "தலாக்" கூறினால் விவாகரத்து ஆகிவிட்டது என அர்த்தம். இந்த சட்ட மசோதாவின்படி முத்தலாக் முறையில் விவாகரத்து அளித்தால் கணவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கப்படும்.
2017-ஆம் ஆண்டு டிசம்பரில் முத்தலாக் முறையை சட்டவிரோதமானதாக்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இதற்கு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் போன்ற ஆண்களின் ஆதிக்கம் கொண்ட அமைப்புகள், முஸ்லிம் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளன.
முஸ்லிம்கள் விவாகரத்து செய்ய கடைபிடிக்கும் முத்தலாக் நடைமுறை, அரசியல் சட்ட விரோதமானது என்று 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. குறுஞ்செய்திகள், மின்னஞ்சல், தொலைபேசி அழைப்புகள் மூலமும் விவாகரத்து செய்யமுடியாது என்று அரசியல் சாசன அமர்வு உறுதிபடுத்தியது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் வகையில் மத்திய அரசு இது தொடர்பான சட்ட வரைவை முன்வைத்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்