ரத்த தானம் பெற்ற கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி: பரிசோதனை செய்யாமல் செலுத்தியது யார் குற்றம்?

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் பரிசோதிக்காத ரத்தம் செலுத்தப்பட்டதால் கர்ப்பிணி ஒருவருக்கு எச்.ஐ.வி.தொற்று ஏற்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, கர்ப்பத்தில் உள்ள குழந்தையை காப்பாற்றத் தேவையான சிகிச்சைகள் எடுக்கப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாத்தூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் மனைவிக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்தப்பட்ட சில தினங்களுக்குப் பிறகு, ரத்தம் கொடுத்த நபர் தாமாக முன்வந்து தனக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரியவந்தது என்று அறிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய ரத்தம் யாருக்கு செலுத்தப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள முற்பட்டபோது, எட்டு மாத கர்ப்பிணி ஒருவருக்கு செலுத்தப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், குழந்தைக்கும் சிகிச்சை அளித்துவருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் ரத்தவங்கி அதிகாரிகளை நேரில் சந்தித்து விசாரணை நடத்திவருகிறார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு ரத்த வங்கி அதிகாரிகள் மூவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என விருதுநகர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் மனோகரன் ஊடகங்களிடம் தெரிவித்தார். ''இது மருத்துவதுறையில் ஏற்பட்ட ஒரு விபத்து. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான மருத்துவ வசதிகளை அளிப்போம். அவர் பட்டதாரி என்பதால், அவரின் பிரசவத்திற்கு பின்னர், அவருக்கு அரசு வேலை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரது கணவருக்கும் அரசு வேலை கிடைக்க முயற்சிகள் செய்துவருகிறோம்,'' என மனோகரன் தெரிவித்தார்.

சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த அவலத்தால், சிகிச்சைக்காக ரத்தத்தைப் பெறும் நிலையில் உள்ள நோயாளிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

பிபிசி தமிழிடம் பேசிய சிவகாசியைச் சேர்ந்த குருதிக் கொடை ஆர்வலர் ஆர்.சரவணன், ரத்ததான முகாம் நடக்கும் இடங்களில் முறையான பரிசோதனை செய்யப்படவேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளதாக தெரிவித்தார்.

''நான் கடந்த 12 ஆண்டுகளாக ரத்த தானம் செய்துவருகிறேன். ஒருவர் தொடர்ந்து ரத்த தானம் செய்பவராக இருந்தாலும், பரிசோதனை செய்தபின்னர் மட்டுமே அவரிடம் இருந்து ரத்தம் பெறப்படவேண்டும். நாங்கள் நடத்திய முகாம் ஒன்றில் இதுபோலவே எச்ஐவி தோற்று இருந்த நபர் ஒருவர் ரத்ததானம் செய்திருந்தார். ரத்தம் பெறப்பட்ட பின்னர் செய்த சோதனையில் இது தெரியவந்தது. அவரை அடையாளம் கண்டு அவரை சிகிச்சைக்கு கொண்டுச்சென்றோம், அவரது ரத்தம் உடனடியாக ரத்தவங்கிக்கு செல்வதை தடுத்தோம்,'' என்று கூறுகிறார் சரவணன்.

மருத்துவர்களின் அலட்சியத்தால் நேர்ந்த ஒரு சம்பவமாக சாத்தூர் பெண்ணின் விவகாரத்தை அணுகக்கூடாது என்றும் ரத்த வங்கிகள் செயல்படும் விதத்தை சீரமைக்கவேண்டும் என்றும் கூறுகிறார் சமூக ஆர்வலர் மற்றும் மருத்துவரான ரவீந்திரநாத்.

''இதை வெறும் அலட்சியத்தால் ஏற்பட்ட சம்பவம் என்று கடந்து போய்விடமுடியாது. இந்திய அளவில் ரத்த வங்கி செயல்பாட்டில் தமிழகம் முன்னணியில் உள்ளது. ஆனால் எச்.ஐ.வி தொற்று இருந்த நபரிடம் ரத்தம் எடுக்கப்பட்டு, மற்றவருக்கு செலுத்தப்படும்வரை எந்தக்கட்டத்திலும் சோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்பது அவலநிலை. எச்.ஐ.வி தொற்று ஏற்பட்ட ஆறு மாதங்கள் வரை, அந்த பாதிப்பை சாதாரண பரிசோதனைகள் மூலம் கண்டறியமுடியாது. ஆனால் நமது ரத்த வங்கிகள் செயல்படும் தரத்தை உயர்த்தி, பரிசோதனை முறைகளில், நியூக்லிக் அமிலப் பரிசோதனை செய்யப்பட்டால், எச்ஐவி தொற்று ஏற்பட்ட சில தினங்களில் கூட அதை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது,'' என்கிறார் ரவீந்திரநாத்.

இரத்தம் வழங்கிய இளைஞர் தற்கொலை முயற்சி

கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்ட இரத்தத்தை அளித்த இளைஞருக்கு இந்த சம்பவம் குறித்தும், தனக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருக்கும் விபரம் தெரியவரவே, நேற்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வீட்டில் பயிர்களுக்கு வைக்க இருந்த எலி மருந்தை சாப்பிட்டதால் மயங்கி விழுந்த இளைஞருக்கு கமுதி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: