'சுனாமி வந்தாலும் கடல் அன்னையோடுதான் எங்கள் வாழ்வு' - மீனவரின் அனுபவம்

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

இரண்டு புறமும் குவியல் குவியலாக பிணங்கள். அந்த குவியலுக்கு நடுவே நடந்து கரைக்கு வந்தேன்.

ஒரு வயது, ஆறு மாதம் ஆன பிஞ்சுச் குழந்தைகள் என் கண் முன்னே சுனாமி அலையில் அடித்துக்கொண்டு போவதைப் பார்த்தேன். என்னால் முடிந்தவரை சில குழந்தைகள், வயதானவர்களை காப்பாற்றினேன். ஆனால் கடல் அலையில் மூழ்கிப்போனவர்களின் முகங்கள் இன்றும் என் நினைவில் உள்ளன.

2004 டிசம்பர் மாதம் 26ம் தேதி சுனாமி வந்தபோது கண்ட காட்சிகளை சொல்லும்போது உறைந்துபோகிறார் சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த 35 வயதான மீனவர் ராஜேஷ் ஆறுமுகம்.

பிணங்களை சுமந்த அலைகள்

14 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், ஒவ்வொரு ஆண்டும் சுனாமி நினைவு நாளன்று உயிர் நீத்த பலரின் நினைவாகவும், கடல் அன்னையை சாந்தப்படுத்தவும் அலையில் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தும் ஆயிரக்கணக்கவர்களில் ஒருவர் ராஜேஷ்.

''சுனாமி தாக்குதலுக்கு பிறகு சுமார் இரண்டு மாதங்கள் வரை எங்கள் கடற்கரைகளில் தினமும் ஏதாவது ஒரு பிணம் கரைசேர்வதும், ஏதாவது ஒரு குடும்பம் இறந்த உடலை தேடிவருவதுமாக இருந்த நாட்களை மறக்கமுடியாது. மீனவ குடுமபத்தைச் சேர்ந்த பிள்ளைகள்கூட கடலுக்கு வரும்போது அச்சத்தோடு இருந்தார்கள். சுனாமி வந்த நேரம் காலை 8 மணி என்பதால், மீன் வாங்க வந்தவர்கள், கடற்கரையில் குடும்பத்துடன் பொழுதைக் கழிக்க வந்தவர்கள் அதிகமாக இருந்தார்கள். மீனவர்கள் பலரும் காலை 5 மணியுடன் வேலை முடித்து திரும்பிவிட்டதால், மீனவர்கள் அல்லாதவர்கள் அதிக அளவில் உயிரிழந்தார்கள்,''என வருத்தத்தோடு பேசுகிறார் ராஜேஷ்.

உயிர்பயத்தை ஏற்படுத்திய நொடிகள்

சுனாமியால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்த பெண்கள் பலரும் கடற்கரைக்கு வருவதற்கு தற்போதுகூட தயக்கம் காட்டுவதாக கூறுகிறார் ராஜேஷ். சுனாமி என்ற பெயரைக்கூட அறிந்திராத மக்கள் திரள் ஒன்றை சூறைக் காற்றைப்போல உயரமான அலைகள் நொடிப் பொழுதில் வாரிச் சென்றதை நினைவுகூர்கிறார் ராஜேஷ்.

''சுனாமி வருவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் காசிமேடு துறைமுகத்தில்தான் நான் இருந்தேன். படகுகள் நிறுத்தியிருந்த இடங்களில் நீர் குமிழ்கள் வெடித்தன. படகுகள் மெல்ல அலையில் உயர்ந்து, மேலே சென்றன. அங்கிருந்து வெளியேறிய நான் அதற்கு பிறகு கண்ட காட்சிகள் பயங்கரமானவை. 15 நிமிடங்கள் வரை உயிர்பயம் என்றால் என்ன என்பதை உணர்த்திய தருணங்கள் அவை. கரையோரங்களில் இருந்த மீனவ குடியிருப்புகள் பல அடித்துச் செல்லப்பட்டன. வீடுகளில் இருந்த பொருட்கள், மனிதர்கள் என எந்த வித்தியாசமும் இல்லை. உயரமான கட்டடத்தில் நான் நின்று கொண்டிருந்தாலும், அடுத்த அலையில் நான் அடித்துச் செல்லப்படுவேன் என்ற அச்சத்தில் இருந்தேன்,'' என சுனாமியின் கோரமுகத்தை பார்த்த நிமிடங்களை விளக்கினார் ராஜேஷ்.

சுனாமிக்கு பிறகு நிவாரணம் தர அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் பலவும் உதவிகள் தந்தாலும், மன உளைச்சலில் இருந்து மீனவர்கள் மீண்டுவர பல ஆண்டுகள் ஆனது என்கிறார் ராஜேஷ். ''சுனாமி நினைவு நாளன்று பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வேண்டுகிறோம். இனி ஒருபோதும் சுனாமி போன்ற எந்த பேராபத்தும் எங்களுக்கு நேரக்கூடாது என கடல் அன்னையிடம் மன்றாடி வேண்டிக்கொள்வோம்,'' என்கிறார் ராஜேஷ்.

சுனாமி வந்தாலும் கடலோடு வாழும் வாழ்க்கை

சுனாமிக்கு தாக்குதலுக்கு பிறகு கடலுக்கு செல்ல பலரும் தயாராகவில்லை. மீனவர்கள் கொண்டுவந்த மீன்கள் உடல்நலத்துக்கு ஆபத்தானவை என்ற புரளி பரவியதால் மீன் வியாபாரம் மந்தம் அடைந்தது என்பதை தெளிவுபடுத்துகிறார் ராஜேஷ்.

''சுனாமியில் இறந்த உடல்கள் கடலில் இருக்கும். அந்த பிணங்களை மீன்கள் தின்னும் என்றும் அதனால் மீன் வாங்கக் கூடாது என பரவலான கருத்து மக்களிடம் இருந்தது. இதனால் சுமார் ஒரு வருடம் எங்களுக்கு தொழில் இல்லை. நாங்கள் இழந்த படகுகள், வேலை இழந்த மீனவ தொழிலாளர்கள் பட்ட இன்னல்களுக்கு அளவில்லை. கடனாளி ஆகிப்போனோம். ஆனால் மீண்டும் கடல் கொடுத்த வருமானத்தில் புதிதாக வாழ்வை தொடங்கினோம்,'' என்றார் அவர்.

சுனாமிக்கு பிறகு இயற்கை பேரிடரைக் காரணம்காட்டி மீனவ கிராமங்கள் பலவும் சென்னை மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு செம்மேஞ்சேரிக்கு விரட்டப்பட்டதாகக் கூறும் ராஜேஷ், மீனவர்களுக்கு கடற்கரை மீது இருந்த உரிமை பறிக்கப்பட்டு வருவது போல உணர்வதாக கூறுகிறார்.

''கடல் அன்னை எங்களை வாழவைப்பாள் என்ற நம்பிக்கை எங்களிடம் எப்போதும் உண்டு. சுனாமி வந்தது ஒருமுறை. எங்கள் முன்னோர்கள் பிறந்து, வாழ்ந்து, எங்களுக்கு தொழில் கற்றுக்கொடுத்த இடம் இது. எங்களின் அடுத்த தலைமுறைக்கும் கடல் அன்னையோடு பந்தம் தொடரும். எங்களை கடல் பகுதியில் இருந்து பெயர்த்து வெளியேற்றிவிட்டு, சென்னை நகரத்தின் கடற்கரைகளை அழகுபடுத்த அரசு திட்டங்களை கொண்டுவருகிறது. தனியார் நிறுவனங்கள் ரிசார்ட்கள் கட்ட கடற்கரையை ஆக்கிரமிக்கும் நிலைதான் இங்குள்ளது. சுனாமி வந்தாலும், கடல் அலையோடுதான் எங்கள் வாழ்க்கை,''என்றார் ராஜேஷ்.

சுமார் 15,000 மீனவர்கள் காசிமேடு துறைமுகத்தில் ராஜேஷ் போல பல மீனவர்கள் இரவுபகலாக வேலைசெய்கிறார்கள். நாம் சந்தித்த பல மீனவர்களும் ராஜேஷ் போல சுனாமி தாக்குதலில் மோசமான அனுபவத்தைப் பெற்றிருந்தனர். ஆனால் ஒவ்வொருவரும் கடல் அன்னை மீது துளியும் அன்பு குறையாமல் பேசுகிறார்கள். அலையோடு விளையாட படகுகளை உற்சாகத்தோடு எடுத்துச்செல்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: