You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுனாமி பேரலை: ஆண்டுகள் பல ஆனாலும் ஆறாத காயங்கள் - மறக்க முடியுமா டிசம்பர் 26, 2004?
- எழுதியவர், விஷ்ணுப்ரியா ராஜசேகர்
- பதவி, பிபிசி தமிழ்
`சுனாமி` - 15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மக்களிடம் இது பிரபலமான வார்த்தை இல்லை. ஆனால், 2004ஆம் ஆண்டிற்கு பிறகு சுனாமி என்ற வார்த்தை தெரியாமல் காதில்பட்டாலும்கூட உள்ளூர ஏதோ ஒரு அச்சத்தை ஏற்படுத்தும் குறிப்பாக கடலோர பகுதிகளில் வசித்தவர்களுக்கும் வசிப்பவர்களுக்கும்.
டிசம்பர் 26, 2004 - மறக்க முடியுமா அந்த நாளை? அப்போது எனக்கு வயது 13. நான் கடலோரப் பகுதியை சேர்ந்தவள்தான். நேரடியாக பாதிக்கப்படவில்லை என்றாலும் அதன் பாதிப்புகளை நேரடியாக பார்த்திருகிறேன்.
சுனாமி என்ற அந்த ஆழிப்பேரலை அந்த வயதில் ஏற்படுத்திய அச்சம் இன்னமும் என் மனதில் ஆழமாக பதிந்துள்ளது என்றே சொல்லலாம்.
அது கிறிஸ்துமஸுக்கு அடுத்த தினம்; மேலும் அது ஒரு விடுமுறை தினம். ஆனால், வழக்கமான விடுமுறை தினத்தில் எழும் மகிழ்ச்சிக்கு மாறாக அந்த நாள் துயரமாக மாறிப் போனது.
ஆம், கடற்கரை பகுதியில் எங்கள் வீடு இருப்பதால் சுனாமி குறித்த தகவல் அறிந்து, எங்கள் நலன் குறித்து விசாரிக்க உறவினர் ஒருவரின் தொலைபேசி அழைப்பில்தான் அன்றைய பொழுது விடிந்தது.
சுனாமி என்ற புரியாத வார்த்தை
அந்த பேரலையின் பெயர் சுனாமி என்றும், கடற்கரை பகுதிகளில் பெரும் பாதிப்புகளும், சேதங்களும் ஏற்பட்டுள்ளது என்றும், எங்களுக்கு வந்த அந்த தகவலை புரிந்துகொள்ளவே சற்று நேரம் பிடித்தது. சுனாமி என்ற அந்த வார்த்தை சில ஆரம்ப தருணங்களுக்கு உச்சரிப்பதற்குகூட வாயில் நுழையவில்லை.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மீன் வாங்க காசிமேடு கடற்கரை பகுதிக்கு செல்வதை நாங்கள் வழக்கமாக கொண்டிந்தோம். ஆனால், அன்று நாங்கள் அங்கு பார்த்த காட்சிகள் இன்றுவரை என் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.
ஓடி விளையாடி கால் நனைத்த கடல் அலைகளும், ரசித்து ரசித்து நான் மணல் வீடு கட்டிய கடற்கரையும் என்னுள் ஒரு பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் என்று நான் சிறிதளவும் நினைத்ததில்லை.
அங்கு மீன் வாங்க வந்தவர்களா அல்லது அந்த பகுதியில் வசித்தவர்களா என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் ஒரிரு உடல்கள் கரையில் மிதப்பதை பார்த்து ஏதோ ஒன்று என்னை அழுத்தியது போன்றும், அந்த பரந்த வெளியில் நான் சுவாசிப்பதற்கு மட்டும் காற்றில்லாமல் போனது போன்றும் உணர்ந்தேன். மனதில் எழுந்த அச்சத்தை அந்த வயதில் என்னால் சரியாக விவரிக்கக்கூட முடியவில்லை.
தற்போது குடிசை பகுதிகள் பெருமளவு குறைந்திருந்தாலும், அக்காலகட்டத்தில் குடிசை பகுதிகளை பரவலாகவே காணலாம். அதுவும் கடலோர குடிசை பகுதிகள்தான் மீனவர்களின் குடியிருப்பாக இருந்தது.
நீண்ட கடற்கரையில் இருந்த மீனவக் குடியிருப்புகள் அன்று தரையோடு தரையாக இருந்தது. இடிந்த கூரைகளையும், அடித்துச் செல்லப்பட்ட பொருட்களையும் தவிர சேதமடைந்த சில பொருட்களையும் அங்கு என்னால் காண முடிந்தது. அங்கு வாழ்ந்துவந்த மக்களின் நிலையை நினைத்து பார்க்க பார்க்க எனக்கு அழுகை மட்டுமே வந்தது.
வீடு வந்து சேர்ந்த எங்களுக்கு தொடர்ச்சியான தொலைப்பேசி அழைப்புகளும், அதில் அச்சத்துடன் கூடிய நலம் விசாரிப்புகளும் காத்திருந்தது ஒருபக்கம்.
கோரத்தாண்டவத்தின் வடுக்கள்
ஆனால், அதன்பிறகு தொலைக்காட்சி முன்பு அமர்ந்த நான் கண்ணீர் மல்க சுனாமி ஆடிய கோரத்தாண்டவத்தை பார்த்துக் கொண்டே இருந்தேன். அந்த தருணம் இன்னமும் நினைவில் உள்ளது.
கொத்து கொத்தாய் மக்கள் கொல்லப்பட்டதும், குழந்தைகள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் பாராமல் எழுந்த அழுகை குரல்கள் என திரும்ப திரும்ப தொலைக்காட்சி ஊடகங்களில் நான் கண்ட காட்சிகள் என்னுள் மீண்டும் ஒரு சுனாமியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமான நாகப்பட்டினத்தில் உள்ள வேளாங்கண்ணி கோயிலுக்கு வந்தவர்களில் சிலர் சுனாமியால் அடித்துச் செல்லப்பட்டதும், பலியானவர்கள் அடுக்கடுக்காய் புதைக்கப்பட்ட காட்சிகளும் நீண்ட நாட்களுக்கு என் உறக்கத்தில் வந்து கொண்டே இருக்கும். இதனால் தூக்கத்தில் அச்சத்தில் அலறியதும் கூட உண்டு.
பத்து நாட்கள் கழித்து விடுமுறை முடிந்து பள்ளிக்கு சென்ற நான் சுனாமியால் நேரடியாக பாதிக்கப்பட்ட எனது நண்பர்களை சந்தித்தேன். எனது பள்ளி தோழர்கள் பெரும்பாலானவர்வர்கள் கடற்கரைக்கு அருகாமையில் வசிக்கக்கூடியவர்கள். தாங்கள் படிக்க வைத்திருந்த பாட புத்தகங்களும், சீருடைகளயும்கூட தொலைத்த அவர்களின் துயரை என்ன சொல்லி தேற்றுவது என்று எனக்கு புரியவில்லை.
பொதுவாகவே கடற்கரைக்கு சென்று விளையாடுவதிலும், அம்மா அப்பாவிடம் அடம்பிடித்து நீரில் மூழ்கும் அளவுக்கு காலை நினைத்து விளையாடும் அளவுக்கு கடலின் மேல் விரும்பமும் கொண்ட எனக்கு சுனாமிக்கு பிறகு கடற்கரையை கண்டால் பெரும் அச்சம் ஏற்பட்டது.
அதுவரை அமைதியான கடலை மட்டுமே கண்ட எனது கண்கள் சுனாமிக்கு பிறகு கடல் சீற்றம் கொண்டு ஆடுவதுபோல் மிரட்சியை ஏற்படுத்தியது.
நான் மீண்டும் காசிமேடு பகுதிக்கு செல்ல பல ஆண்டுகள் ஆயின. இன்று அந்த பகுதியில் ஏராளமான மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. ஆனால், அன்று நான் கண்ட காட்சிகள் மட்டும் அழியாத ஒரு புகைப்படம் போல் என் மனதில் பதிந்துள்ளது.
சுனாமி முடிந்த பின்னும் பல நாட்களுக்கு வதந்தியாகவும், உண்மையாகவும் வந்த சுனாமி எச்சரிக்கைகளும் பெரும் பீதியை கிளப்பிக்கொண்டேதான் இருந்தது.
சுனாமியால் நேரடியாக பாதிக்கப்படவில்லை என்றாலும், அதனால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களின் அழுகையையும், உறவுகள், உடமைகள் என அனைத்தும் இழந்த அந்த மக்களின் கண்ணீர் கதைகளை எத்தனை வருடங்கள் கழித்து நினைத்து பார்த்தாலும் கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் வந்து செல்கிறது என்பதே உண்மை.
பிற செய்திகள்:
- "இந்தியைத் திணித்தால் கட்டாயம் எதிர்ப்போம். அதில் சமரசமே கிடையாது": அண்ணாமலை
- ஒமிக்ரான் தொற்று: எந்தெந்த அறிகுறிகள் இருந்தால் கவனம் தேவைப்படும்?
- திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என இளம்பெண்ணை கொலை செய்த மூன்று திருமணமான நபர்
- 1933ல் கிருமி ஆயுதத்தை பயன்படுத்தி இந்தியாவில் நடந்த கொலை - உலகம் கவனித்த வழக்கு
- இளவரசி ஹயா, துபாய் ஷேக், ரூ.5,500 கோடிக்கு ஜீவனாம்சம் - மலைப்பூட்டும் விவாகரத்து வழக்கின் தீர்ப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்