மம்தா பானர்ஜியின் கருத்து ராகுலை பிரதமராக்கும் ஸ்டாலினின் முயற்சிக்கு பின்னடைவா?

கடந்த ஞாயிறன்று, சென்னையில் மு.கருணாநிதியின் சிலை திறப்புக்குபின் நடந்த கூட்டமொன்றில், ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிவதாகவும், ''பாஜக அரசை வீழ்த்த ராகுல்காந்தியுடன் கைகோர்ப்போம்'' என திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதற்கு மம்தா பானர்ஜி தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

''பிரதமர் வேட்பாளரை அறிவிக்க இது சரியான தருணமல்ல. முதலில் தேர்தல் வரட்டும். நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து வேலை செய்கிறோம். பிரதமர் வேட்பாளர் கேள்வியை பொருத்தவரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து என்ன முடிவெடுக்கிறதோ அதுவே பதிலாக அமையும். அனைத்து கட்சிகளும், கட்சித்தலைவர்களும் ஒன்றிணைவது நல்லதொரு விஷயத்துக்கான முதல் படி'' என மம்தா பானர்ஜி ஊடகங்களுக்கு பேட்டியளித்திருக்கிறார்.

முன்னதாக, ஸ்டாலின் ஞாயற்றுகிழமை கூட்டத்தில் பேசும்போது "நரேந்திர மோதியால் இந்தியாவின் மத நல்லிணக்கத்துக்கு கேடு ஏற்பட்டிருக்கிறது.

நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துக் கொண்டிருக்கிறது. மோதியின் ஆட்சியில் நாடு 50 ஆண்டுகாலம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. மாநில சுய ஆட்சிக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக தன்னை கருதாமல் ஏதோ பரம்பரை அரசர் என்ற மமதையுடன் மோதி நடந்துக் கொள்கிறார்.

தன்னையே ரிசர்வ் வங்கியாக, வருமானத் துறையாக, சிபிஐயாக மோதி நினைத்துக் கொண்டிருக்கிறார். மோதி ஒரு `சாடிஸ்ட்` பிரதமராக நடந்துக் கொண்டிருக்கிறார்.

மோதியை வீழ்த்த 21 கட்சிகள் ஒன்றிணைந்திருக்கிறோம். ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிகிறேன் என்று தெரிவித்த ஸ்டாலின் பாசிஸ பாஜக அரசை வீழ்த்த ராகுல் காந்தியுடன் கைகோர்ப்போம்'' என்று தெரிவித்தார்.

மாயாவதி, அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி என பலரும் காங்கிரசுடன் இணைந்து தேர்தலை சந்திக்கக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதும் நிலையில், ஸ்டாலினின் கருத்துக்கு சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட மற்ற கட்சித் தலைவர்கள் உடனடியாக எதிர்வினையாற்றாமல் மௌனம் காத்துவந்தனர்.

இந்நிலையில், மம்தா பானர்ஜி பிரதமர் வேட்பாளரைப் பற்றி பேச இது சரியான தருணமல்ல என கருத்து தெரிவித்திருக்கிறார்.

மேலும், மகா கூட்டணி அமைக்கப்படும்போது துறை சார்ந்து கவனம் செலுத்த வேண்டும். ''முதலில் மாநில விவசாயிகளின் நலன், இளைஞர் நலன் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். வரும் மக்களவை பொதுத்தேர்தலை பொருத்தவரையில் மதச்சார்பின்மைக்கும் மிக முக்கியமாக முன்னுரிமை கொடுக்க வேண்டும்'' என்றார்.

ஸ்டாலினின் கருத்து குறித்து அகிலேஷ் யாதவ் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கையில் '' பாஜக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை அதனால்தான் காங்கிரஸ் மூன்று மாநிலங்களிலும் வெற்றி கண்டது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷரத் பவார் மற்றும் பலர் 2019 மக்களவை தேர்தலுக்காக மகா கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகின்றனர். யாராவது ஒருவர் பிரதமர் வேட்பாளர் குறித்து கருத்து தெரிவித்தால் அதற்காக கூட்டணியில் உள்ள மற்றவர்களுக்கும் அதே கருத்து இருக்க வேண்டும் என அவசியம் இல்லை'' என்றார்.

முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரியும் ஸ்டாலினின் முன்மொழிவை நிராகரித்தார். கடந்த திங்கட்கிழமையன்று பேசிய அவர், ''ஸ்டாலின் கருத்துடன் உடன்படவில்லை" என்றார். மேலும், "பிரதமர் வேட்பாளர் குறித்து 2019 லோக்சபா தேர்தல் முடிந்தபிறகே எதிர்க்கட்சிகள் முடிவு செய்யும்'' என்றார்.

திமுக தலைவர் ஸ்டாலின் முன்மொழிவுக்கு இதுவரை எதிர்க்கட்சிகள் சார்பில் வெளிப்படையான ஆதரவு கிடைக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: