சபரிமலை கோயிலில் திருநங்கைகள்: ''சடங்குகளை கடைப்பிடித்து அய்யப்பனை தரிசித்தோம்’

பட மூலாதாரம், A S Satheesh
சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக தொடர்ந்து கசப்பான சம்பவங்கள் நடந்துவரும் நிலையில் நான்கு திருநங்கைகள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கபட்டுள்ளனர்.
இந்திய உச்ச நீதிமன்றம் பெண் பக்தர்களை சபரிமலைக்குள் அனுமதிக்கவேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில், சில கும்பல்களால் திரும்ப திரும்ப பெண் பக்தர்கள் தடுக்கப்பட்டனர்.
நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) காவல்துறை பாதுகாப்புடன் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்ட திருநங்கைகள் அனைவரும் கருப்பு நிற சேலை அணிந்திருந்தனர்
முன்னதாக கடந்த ஞாயற்றுகிழமையன்று பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நான்கு திருநங்கைகளும் கோயிலை சென்றடைவதற்கு முன்னர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் பெண்களை அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது ஆனால் அதற்கு முன்னதாகவே திருநங்கைகள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பெரும் போராட்டங்கள் வெடித்த நிலையில் சில போலீசார் திருநங்கைகளை ஆண்கள் போல வேடமிட்டு கோயிலுக்குள் வருமாறு அறிவுறுத்தியிருந்தனர்.

பட மூலாதாரம், A S Satheesh
ஆனால் திருநங்கைகள் காவல்துறையின் யோசனைகளை ஏற்கவில்லை. கேரள உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கமிட்டி முன்பு இவ்விவகாரத்தை எடுத்துச் சென்றனர்.
திருநங்கைகள் கோயிலுக்குள் செல்லலாம் என கமிட்டி ஒப்புக்கொண்டது. மேலும் கோயில் நிர்வாகிகளும் திருநங்கைகள் மாதவிடாய்க்கு உள்ளாகமாட்டார்கள் என்பதால் அவர்களை அனுமதிக்க ஆட்சேபனையில்லை என்றனர்.
''நாங்கள் சடங்குகளை பின்பற்றினோம்''
பத்து முதல் ஐம்பது வயது வரையிலிருக்கும் பெண்களை சபரிமலையில் அனுமதிக்க தடை இருந்தது. அய்யப்பன் கடவுள் ஒரு பேச்சலர் என்பதால் அனுமதிப்பதில்லை, இக்கோயில் புனிதமானது என கோயில் நிர்வாகம் சொல்லியிருந்தது.
ஆனால் உச்சநீதிமன்றம் இந்த தடையை உடைத்ததால் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல பெண்கள் கோயிலுக்குச் செல்ல முயன்றனர். இந்து தேசியவாத கட்சியான பாஜக மற்றும் சில கூட்டணி கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் போராட்டம் செய்ததாலும் பாதுகாப்பு காரணங்களால் இப்பெண்கள் கோயிலுக்குள் செல்ல முடியவில்லை.

பட மூலாதாரம், A S Satheesh
பெண்களின் அடிப்படை உரிமையை உறுதிசெய்யும் வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த போதிலும் இந்த கட்சிகள் பாரம்பரியம் தொடரவேண்டும் என்றே விரும்புகின்றன.
கோயிலுக்குச் சென்ற நான்கு திருநங்கைகளில் ஒருவரான 33 வயதான திருப்தி பிபிசி இந்தி சேவையிடம் பேசினார்.
''அய்யப்பனை தரிசித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். நாங்கள் எல்லோரும் பக்தர்கள். சபரிமலைக்குள் செல்வதற்கு என்னென்ன சடங்கு விதிகள் இருக்கிறதோ அத்தனையையும் நாங்கள் கடைபிடித்துள்ளோம்'' என்றார் திருப்தி.
மேலும் 26 வயது அனன்யா, 30 வயது ரெஞ்சிமோல், 24 வயது அவந்திகா ஆகியோருடன் தரிசனம் செய்ததாக தெரிவித்துள்ளார்.
திருநங்கைகள் நான்கு பேருக்கும் சுமார் 20 போலீசார் புடை சூழ்ந்து பாதுகாப்பு தந்தனர். ஆனால் திருநங்கைகள் கோயிலினுள் செல்வதை தடுக்க எந்த போராட்டங்களையும் எதிர்கொள்ளவில்லை என்கிறது காவல்துறை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












