1,636 குழந்தை திருமணங்கள் ஒரே ஆண்டில் தமிழகத்தில் தடுத்து நிறுத்தம்

குழந்தைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பான, யுனிசெஃப், தமிழ்நாடு சமூக நலத்துறை மற்றும் ஐ.சி.சி.டபிள்யூ., என்ற, குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து, 'தமிழகத்தில் குழந்தை திருமணங்களின் நிலையும், அதை தடுப்பதற்கான வழிமுறைகளும்' என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையை, நேற்று சென்னையில் வெளியிட்டன.

தமிழகத்தில், வறுமை, பாதுகாப்பின்மை, காதல், கடத்தல், பெற்றோரின் நோய் உள்ளிட்ட காரணங்களால், குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. இதில், பெண் குழந்தைகள் மட்டும்தான் பாதிக்கப்படுகின்றன. 2017ல் மட்டும், 1,636 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தப்பட்டன. அவர்களில், 25 சதவீதம் பேர் சுய விருப்பத்தினாலும், 75 சதவீதம் பேர், பெற்றோர், உறவினர், நண்பர்களின் வற்புறுத்தலாலும், திருமணம் செய்ய சம்மதித்தவர்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"வெளிநாட்டு நீதித்துறையின் தலையீடு அவசியம்"

இலங்கையில் நடைபெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பாக நீதி கிடைக்க வேண்டுமானால் வெளிநாட்டு நீதித்துறை தலையிடுவது அவசியம் என முன்னாள் நீதியரசரும், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நீதித்துறை தற்போது சிறந்த தீர்ப்புக்களை தரத்தொடங்கியுள்ளது. எனவே, உள்நாட்டு நீதிபதிகள் குழாம் யுத்தக் குற்ற விசாரணைகளை நடத்தலாம் என்றும் வெளிநாட்டு தலையீடு தேவையில்லை என்றும் கூறப்படுகிறது. ஒரு நீதியரசராக இருந்த உங்களின் கருத்து என்ன என்ற கேள்விக்கு பின்வருமாறு விக்னேஸ்வரன் பதிலளித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி?

ஜம்மு காஷ்மீரில் டிச.,19ம் தேதிக்கு பின், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்பதலுக்கு பின் அங்கு குடியரசுத் தலைவரின் ஆட்சி அமலுக்கு வரும்.

டெல்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பின், ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநரின் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதுடன், தனது பரிந்துரையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு மத்திய அமைச்சரவை அனுப்பிவைத்தது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

டெல்லியில் நேற்று பிரதமர் மோதி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும் இதற்காக ரூ.1,264 கோடி ஒதுக்கீடு செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதேபோல் தெலங்கானா மாநிலம் பிபி நகரில் ரூ.1,028 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும் அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: