இந்தியாவில் செங்கல் பயன்பாட்டிற்கு தடை? மத்திய அரசு பரிசீலனை
இன்று முக்கிய இந்திய நாளேடுகள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினமலர் - "செங்கல் பயன்படுத்த தடை?"

பட மூலாதாரம், Getty Images
சுற்றுச் சூழலுக்கு உகந்த பொருட்களுக்கு ஊக்கம் அளிக்கும் நோக்கில், மத்திய அரசு, தன் கட்டுமான பணிகளில், செங்கற்களை பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
"மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர், டில்லியில் நேற்று கூறியதாவது: மத்திய அரசு, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களுக்கு ஊக்கம் அளிக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, களிமண் சுட்டு உருவாக்கப்படும் செங்கற்களை, மத்திய அரசின் திட்ட ப் பணிகளில் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும்படி, சி.பி.டபிள்யூ.டி., எனப்படும் மத்திய பொதுப்பணித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
செங்கற்களை தயாரிக்க, நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இதனால், செங்கல் சூளைகள் உள்ள பகுதிகளில், காற்று மாசு அதிகரிக்கிறது. எனவே, இந்த மாசு அளவை குறைக்கும்படி, டில்லி நிர்வாகத்துக்கு, அக்டோபரில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


பட மூலாதாரம், Twitter
தமிழ் இந்து - "இரு கட்சிகளை இணைக்க பாஜக முயற்சி; அதிமுகவுடன் இணைய தயார்"
அதிமுகவையும், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அமமுகவையும் இணைக்க பாஜக முயற்சி செய்து வருவதாக அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச் செல்வன் தெரிவித்தார். முதல்வரையும் சில அமைச்சர்களையும் நீக்கினால் அதிமுகவில் இணையத் தாங்கள் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
திருநெல்வேலியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது "திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. எனவே, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டால் வெற்றி பெற முடியாது என பாஜக நினைக்கிறது. தமிழகத்தில் அமமுக வளர்ச்சி பெற்று வருவதால் அதிமுகவையும், அமமுக வையும் இணைய வைக்க பாஜக முயற்சி செய்து வருவதாக அறிகிறோம்.
அதிமுகவையும், இரட்டை இலையையும் அழிக்க நாங்கள் வரவில்லை. எம்ஜிஆர் உருவாக்கி ஜெயலலிதாவால் பாதுகாக்கப் பட்ட அதிமுகவும் இருக்க வேண்டும், இரட்டை இலையும் இருக்க வேண்டும். திமுகதான் எங்களுக்கு முதல் எதிரி. முதல்வரையும், சில ஊழல் அமைச்சர்களையும் மாற்றினால் அதிமுகவுடன் இணைய நாங்கள் தயாராக உள்ளோம்" என்று அவர் பேசியுள்ளார் என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"மத்திய பிரதேசத்தில் மணல் கொள்ளையர்களை பிடித்த தமிழ் ஐஏஎஸ் - குவியும் பாராட்டு"

பட மூலாதாரம், SEYLLOU
மத்தியப் பிரதேசத்தில் அனுமதி பெற்று, உத்தரப் பிரதேசம் சோன்பத்ராவில் உள்ள சோன்(தங்க) நதியில் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெற்றுள்ளது. இங்கு நேற்று இரவு திடீர் சோதனை நடத்திய தமிழரான மணிகண்டன் ஐஏஎஸ், 11 லாரிகளுடன் மணல் கொள்ளையரை கையும் களவுமாகப் பிடித்துள்ளதாக தமிழ் இந்து வெளியிட்டுள்ள மற்றொரு செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"உ.பி.யில் நக்சலைட்டுகள் நடமாட்டம் கொண்ட ஒரே மாவட்டமாகக் கருதப்படுவது சோன்பத்ரா. ஜார்கண்ட், பிஹார் மற்றும் ம.பி. ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லையில் இது அமைந்துள்ளது. இங்கு ம.பி.யில் தொடங்கி சோத்பத்ரா எனும் நதி ஓடுகிறது. சோன்பத்ரா நதியில் தொடர்ந்து மணல் திருடப்பட்டு வந்துள்ளது. இதன் மீது அம்மாவட்ட முன்னாள் பாஜக செயலாளர் கமலேஷ் திவாரி, தன் கட்சி ஆளும் உ.பி. அரசு மீது புகார் தெரிவித்து வந்தார்.

பட மூலாதாரம், Getty Images
இந்நிலையில், நேற்று இரவு சோன்பத்ரா நதி ஓடும் கோராவல் தாலுக்கா பகுதியில் உதவி ஆட்சியரான மணிகண்டன் திடீர் சோதனை மேற்கொண்டார். அதில், செனியா கிராமத்தில் நதிக்கரையில் மணலை அள்ளி 11 லாரிகளில் நிரப்பிக் கொண்டிருந்த வாகனங்கள் சிக்கின.
இருவரின் உரிமங்களும் தவறாகப் பயன்படுத்தியதாக ரத்து செய்யப்பட்டுள்ளன. நதியின் கரைகளைச் சுரண்டி மணல் அள்ளி வந்தவர்களைப் பிடித்தமைக்காக உ.பி.யில் மணிகண்டனுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி - "விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா?"

பட மூலாதாரம், Getty Images
விஜய் மல்லையா, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா என்பது தொடர்பான தீர்ப்பை லண்டன் கோர்ட்டு இன்று வழங்க உள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிய விஜய் மல்லையா, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா என்பது இன்று தெரியும். இது தொடர்பான தீர்ப்பை லண்டன் நீதிமன்றம் வழங்குகிறது.
நாடறிந்த தொழிலதிபரும், கிங் பிஷர் நிறுவனங்களின் தலைவருமான விஜய் மல்லையா (வயது 62), பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு வட்டியுடன் திருப்பி செலுத்தாமல், இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு தப்பிவிட்டார்.
அவர் மீது இந்திய நீதிமன்றங்களிலும் சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் வழக்குகள் போட்டுள்ளன.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - "பெற்ற மகளை 4 ஆண்டுகளாக பாலியல் வல்லுறவு செய்த தந்தை"

பட மூலாதாரம், Getty Images
தனது பெற்ற மகளையே கடந்த நான்காண்டுகளாக பலமுறை பாலியல் வல்லுறவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், கூலி வேலை செய்யும் தனது தந்தை கடந்த நான்கு ஆண்டுகளாக தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வல்லுறவு செய்து வருவதாகவும், அதன் காரணமாக தான் நான்கு முறைக்கு மேல் கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் அருகிலுள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
மேலும், தனது தந்தை இந்த விவகாரத்தை வெளியில் சொன்னால் தாயையும், சகோதரரையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் 18 வயதான அந்த இளம்பெண்ணின் புகாரின் அடிப்படையில் அவரது தந்தை கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












