You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எஸ். ராமகிருஷ்ணனுக்கு 'சஞ்சாரம்' நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது
இந்த ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் எழுதி 2015ல் வெளியான ‘சஞ்சாரம்’ நாவலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
பக்கிரி என்ற பாத்திரத்தின் மூலம் நகரும் இந்த நாவல் நாதஸ்வர இசை, நாதஸ்வர இசைக் கலைஞர்களை அடிப்படையாகக் கொண்டது. பெரிதும் அவர்களது துயரம் குறித்துப் பேசுகிறது.
"நாதஸ்வர இசைக் கலைஞ்களில் தஞ்சை மண்டலத்தைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர்கள் பேசப்படும் அளவுக்கு கோவில்பட்டி போன்ற கரிசல் பகுதியைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர்கள் பேசப்படவில்லை. இந்தக் கலைஞர்களின் துயரத்தை, வாழ்க்கையை, வாழ்க்கை இவர்களை அடிக்கும் அடியை இந்த நாவல் சொல்கிறது" என தனது சஞ்சாரம் நாவல் குறித்து பிபிசியிடம் பேசினார் எஸ். ராமகிருஷ்ணன்.
"தஞ்சாவூரில் வாழ்ந்த நாதஸ்வரக் கலைஞர்களுக்கு கிடைத்த வாழ்க்கைபோல இவர்களுக்கு அங்கீகாரமோ, ஊதியமோ கிடைக்கவில்லை. இவர்கள் தங்கள் ஊர்களில் விவசாயம் சார்ந்து வாழ்ந்தார்கள். விவசாயம் அழிந்தவுடன் இவர்களும் அழிந்தார்கள். இவர்களுக்கு படிப்பு இல்லை. நாதஸ்வரக் கலையைக் கற்றுக்கொள்ள 7 - 8 வருடம் பயிற்சி தேவை. அதைத் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு வசதியில்லை. ஆகவே மெல்ல மெல்ல அந்தக் கலையிலிருந்து இந்தக் கலைஞர்கள் வெளியேறிவருகிறார்கள்" என்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.
உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்கள் தங்கள் சுப நிகழ்வுகளில் நாதஸ்வர இசையை பயன்படுத்துகிறார்கள். இப்படியாக மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் இந்தக் கலைஞர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்கிறார் ராமகிருஷ்ணன்.
"தமிழ் இலக்கியப் பரப்பில் ஜெயகாந்தனுக்குப் பிறகு எழுத வந்தவர்களில் மிக முக்கியமான இரண்டு பேர் ஜெயமோகனும், எஸ். ராமகிருஷ்ணனும். இருவருமே எழுத்தின் மூலமாகவே பிரபலமடைந்தவர்கள். குறிப்பாக எஸ். ராமகிருஷ்ணன், பதின் வயதிலிருந்து எழுத்தாளராக வேண்டுமென நினைத்து புறப்பட்டவர். தொடர்ந்து பயணம் செய்தவர். பல மக்களின் வாழ்வைப் பார்த்தவர். இந்தப் பயணங்கள்தான் அவரது எழுத்தின் அடிப்படையாக இருந்தன" என்கிறார் கவிஞர் ரவி சுப்ரமணியன்.
இந்த சஞ்சாரம் நாவலுக்காக இசைக் கலைஞர்களுடன் பழகி, அவர்கள் புழங்கும் சொற்களை எஸ். ராமகிருஷ்ணன் கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார் ரவி சுப்ரமணியன்.
1966ல் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்த எஸ். ராமகிருஷ்ணன், ஒரு முழுநேர எழுத்தாளர். 18 சிறுகதைத் தொகுப்புகள், சஞ்சாரம், உபபாண்டவம் உள்பட 9 நாவல்கள், 36 கட்டுரைத் தொகுப்புகள், 8 திரைப்பட நூல்கள், குழந்தைகளுக்கென 15 புத்தகங்கள், இரண்டு வரலாற்று நூல்கள், 3 நாடகத் தொகுப்புகள், 2 நேர்காணல் தொகுப்புகள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் உள்ளிட்ட நூல்களை வெளியிட்டிருக்கிறார்.
விகடனில் மாணவப் பத்திரிகையாளராக தன் எழுத்துப் பணியைத் துவங்கிய எஸ். ராமகிருஷ்ணன், அவ்வப்போது பல இதழ்களுக்காக பணியாற்றியிருக்கிறார். "ஆனால், ஒரு நிறுவனத்தில் என பணியாற்றியதில்லை. ஒரு கட்டத்தில் முழு நேர எழுத்தாளராக இருப்பதென முடிவுசெய்துவிட்டேன்" என்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.
சண்டைக்கோழி உட்பட பல படங்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார்.
"கரிசல்காட்டிலிருந்து பல எழுத்தாளர்கள் இந்த சாகித்ய அகாதெமி விருதை வாங்கியிருக்கிறார்கள். இடைசெவல் கிராமத்திலிருந்து கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன், ராஜவள்ளிபுரத்திலிருந்து ரா.பி. சேதுப்பிள்ளை, வல்லிக்கண்ணன் என ஒரு கிராமத்திலிருந்தே இருவர் விருதுகளை வாங்கியிருப்பதெல்லாம் இந்தியாவிலேயே நடக்காத ஒன்று. விருதுநகரும் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்ததுதான். ஆகவே நெல்லை மாவட்டத்தில் இருந்து சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றவர்களின் எண்ணிக்கை மேலும் ஒன்று அதிகரித்திருக்கிறது" என்கிறார் கதைசொல்லி இதழின் ஆசிரியரும் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளருமான கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
விருது வழங்கப்பட்ட சஞ்சாரம் நாவலை 2015ல் உயிர்மை பதிப்பகம் வெளியிட்டது. தற்போது தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்